அல்லாஹ் அழகானவன்… அவன் அழகையே நேசிக்கின்றான்

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)

விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எவரது உள்ளத்தில் கடுகளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் செல்ல மாட்டார்.” அப்போது ஒரு மனிதர் ஒருவர் தனது ஆடையும் பாதணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார்.(அதுவும் பெருமையா?)” என வினவினார். அதற்கு நபியவர்கள்  அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்துரைப்பதும் மனிதர்களை இழிவாகக் கருதுவதுமாகும்” என விளக்கம் அளித்தார்கள். (ஸஹீஹு முஸ்லிம்)

ஒருவர் சுவனப் பேற்றை இழப்பதற்குப் பின்புலமாக இருந்த பண்பியல்பே பெருமை. அணுவளவு பெருமை பேரிழப்பைச் சந்திப்பதற்குப் போதுமானது. அப்படியானால், இதயத்தைப் பெருமையால் நிரப்பி, அதனைக் கனதியாக மாற்றிக் கொண்டவனின் நிலைதான் என்ன? பெருமை குறித்த அண்ணலாரின் எச்சரிக்கை நபித்தோழர் ஒருவரது இதயத்தை ஆழமாகப் பாதித்து விட்டது போலும்! எனவேதான், அவர் ஆடை அணிகலன்கள் அழகாக இருப்பது பெருமையின் விளைவா?” என வினாத் தொடுத்தார். ஆனாலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருமையை வரைவிலக்கணப்படுத்திய பாங்கு எம் சிந்தனைக்குரியது. அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மனிதர்களை இழிவுபடுத்துவதுமாகும்” என பதிலளித்தார்கள்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்” என்ற நபிகளாரின் வார்த்தை ஆடை அணிகலன்களின் அழகு குறித்து தொடுக்கப்பட்ட வினாவுக்கான விடையாக அமைவதுடன் அழகு பொதுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்படுகிறது என விளக்கமளிக்கிறார்கள். அதாவது, அல்லாஹ் பொதுவாக எல்லா அழகையும் விரும்புகின்றான்.

இங்கு அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகின்றான்” என்ற பகுதிக்கான விளக்கத்தையே அழுத்திப் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாம் வாழுகின்ற காலப் பிரிவில் இஸ்லாமோபோபியா” (இஸ்லாம் பற்றிய அச்ங்ம்) திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகிய சொற்பிரயோகங்கள் இஸ்லாத்தை வரண்ட ஒன்றாகவே காட்சிப்படுத்துகின்றன. இவ்வகையில் இஸ்லாத்தின் செழுமையை உலகறியச் செய்ய வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.

அல்லாஹ் அழகானவன்” என்ற அண்ணலாரின் அருள்வாக்கு அவன் பற்றிய நேர்மனப்பாங்கை எமக்குள் தோற்றுவிக்கின்றது. அதாவது, அல்லாஹ்வின் ‘தாத்’ (மெய்ப்பொருள்) அழகானது. அவனின் தாத்தை நாம் காணாவிட்டாலும் அவன் தன்னை அருள்மறையாம் திருமறையில் விளங்கப்படுத்தும் பாங்கு அவனது அழகை எமது அகக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. பொதுவாக ஒரு மனிதனின் முகமும் ஒன்றின் முகப்புத் தோற்றமும்தான் அழகைப் பறைசாற்றும் திறன் மிக்கவை. இவ்வகையில் அல்லாஹ் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்கின்றான்.

“பூமியில் உள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் மகோன்னதமுமிக்க உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.” (அர்ரஹ்மான்: 26 – 27)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடும்போது அவன் வலது கண் இல்லாத ஒற்றைக் கண்ணன். அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல” என அல்லாஹ்வின் முழுமைத்துவத்தை உறுதிப்படுத்தி, அவனின் அழகை எமக்கு தெளிவுபடுத்தினார்கள். (ஸஹீஹு முஸ்லிம்- அத்தியாயம்: குழப்ப நிலைகளும் மறுமையின் அடையாளங்களும்)அல்லாஹ்வின் திருநாமங்களும் அவனது பண்புகளும் அழகானவை. அல்குர்ஆன் அவனது திருநாமங்கள் எனக் குறிப்பிடாமல் அழகிய திருநாமங்கள்” என தெளிவுபடுத்துகின்றது.

“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு. அவற்றைக் கொண்டு பிரார்த்தித்து அழையுங்கள்.” (அல்அஃராப்: 180)

அவனது பெயர்கள் மட்டுமல்ல; அவனது பண்புகளும் அழகானவை. முழுநிறைவானவை. அவனது கருத்துக்களும் சிந்தனைகளும் வழிகாட்டுதல்களும் அவன் வகுத்த நியதிகளும் தீர்ப்புக்களும் சட்டங்களும் தண்டனை முறைகளும் முழு நிறைவானவை; அழகானவை.

இத்தகைய அல்லாஹ் அழகை நேசிக்கின்றான். அப்படியானால், அவன் அழகுணர்ச்சி மிக்கவன். அவனது பண்புகளில் அவனது அடியார்களிடம் பிரதிபலிக்க வேண்டிய பண்புதான் அழகுணர்ச்சி என்பது. அல்லாஹ் அருளாளன். அவனது அடியானும் படைப்பினங்களுக்கு அருளாக வாழ வேண்டும். அல்லாஹ் நிகரற்ற அன்பாளன். அவனது அடியானும் சக அடியார்களுடன் அன்பைப் பொழிந்து வாழ வேண்டும். அவன் பாவங்களை மன்னிக்கின்ற தவ்வாப். அவனது அடியானும் மனிதர்களை மன்னித்து வாழ வேண்டும். இவ்வாறே அல்லாஹ் அழகை விரும்புகின்றான் எனில், அவனது அடியானும் அழகை நேசிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் தனி மனிதன் தனது உடலும் உடையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது அழகுணர்ச்சியின் விளைவாகும். இது மனித இயல்பாகும். தனது மானத்தை மறைத்து பிறர் முன் அழகாகக் காட்சி தர வேண்டும் என ஒரு மனிதனின் உள்ளுணர்வு தூண்டுகிறதென்றால், அது மனித நாகரிகத்தின் உயர்ந்த வளர்ச்சிக் கட்டமாகும்.

“ஆதமுடைய சந்ததிகளாகிய மனிதர்களே! உங்களது மானத்தை மறைக்கக் கூடிய, உங்களுக்கு அழகை அள்ளிக் கொட்டக் கூடிய ஆடையை உங்கள் மீது இறக்கியருளினோம். மேலும் தக்வா எனும் ஆடையே சிறந்ததாகும்.” (அல்அஃராப்: 26)

மனிதனது அடிப்படைத் தேவைகளில் உறையுள் என்பது தவிர்ந்திருக்க முடியாத ஒன்றாகும். அது ஒரு சிங்கத்தின் குகையாக, பறவையின் கூடாக அமைய முடியாது. சிரேஷ்டமான படைப்பாகிய மனிதனது வாழ்விடம் பாதுகாப்பு நிறைந்ததாக, அழகானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு முஸ்லிம் வசதியான ஒரு வீட்டை நிர்மாணித்து, அதனை அழகுபடுத்தி, அதனது நேர்த்தியைப் பராமரிப்பதானது அவனுக்குக் கிடைத்த அருளாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விடயங்கள் அருள் பாக்கியங்களாகும். சிறந்த மனைவி, வசதியான வீடு, சிறந்த அயலவர், சிறந்த வாகனம்.” (அத்திர்மிதி) அல்லாஹ்வை நேசிக்கின்ற முஸ்லிம் அழகை நேசிப்பான். அவன் உணர்ச்சியற்ற, வரண்ட, ரசனையற்ற மனிதனாக வாழ மாட்டான்.

தனது இல்லம் விட்டு இறையில்லம் நோக்கிச் செல்கின்ற பாதையில் தனது வீட்டு வளாகத்தின் சுத்தத்தையும் அழகையும் நேர்த்தியையும் கண்ட முஸ்லிமின் பார்வை தனது கல்வி நிறுவனம், தான் தொழில் பார்க்கும் இடம், தான் ஸுஜூது செய்கின்ற மஸ்ஜித் வளாகம், தனது சுற்றுப்புறச் சுழல் என விரிவடையும். அவற்றின் அழகு குறித்தும் அவன் சிந்திப்பான். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனுக்கு மஸ்ஜிதின் எல்லையை அகல் விரிவாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். இந்தப் பூமி எனக்கு மஸ்ஜிதாகவும் தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.” சுற்றுப்புறச் சுழலின் அழகை ரசிக்கத் தெரியாதவன் அல்லது அது குறித்து பிரக்ஞையற்றவன் அல்லாஹ்வை நேசிக்கத் தெரியாதவன்.

சுத்தம், தூய்மை, அழகு முதலானவை அல்லாஹ்வின் பண்புகளாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையை விரும்புகின்றான். அவன் பரிசுத்தமானவன்; அவன் பரிசுத்தத்தை விரும்புகின்றான். அவன் பரோபகாரி; பரோபகாரத்தை விரும்புகின்றான். அவன் கொடையாளி; கொடை கொடுப்பதை விரும்புகின்றான். எனவே, நீங்கள் உங்கள் வீட்டு வளாகத்தை சுத்தமாக வைத்திருங்கள்…” (திர்மிதி)

ஒரு முஸ்லிம் அடுத்ததாக ஒட்டுமொத்த ஊரின் அழகு, நேர்த்தி குறித்து சிந்திப்பான். அவன் அழகுணர்ச்சியும் ரசனையும் உள்ளவன். அவன் இவற்றையெல்லாம் புறக்கணித்து வரண்ட மனிதனாக வாழ மாட்டான். அவனது சிந்தனை தான் வாழுகின்ற தேசம் நோக்கியும் விரிவடையும். அவனது நாளாந்த வாழ்வு இயற்கையின் அழகை ரசிப்பதுடன் ஆரம்பமாகும். பறவைகளின் எழுச்சியுடன் பள்ளிவாசலுக்கு பஜ்ரு தொழுகைக்காகப் புறப்படும் தேசத்தின் முஸ்லிமிடம் பட்சிகளின் கீச்… கீச்…” சப்தம் புதுவித உற்சாக இரத்தத்தைப் பிரவாகிக்கச் செய்கிறது. திரவியம் தேடியும் கல்வி தேடியும் அவன் உத்வேகத்துடன் பயணிக்கிறான்.

எமது தேசத்தின் வயல்வெளிகள், பச்சைப் போர்வை போர்த்தியிருக்கும் புல்வெளிகள், மலைத்தொடர்கள், சலசலவென கீதம் இசைத்து நெளிந்தோடும் நதிகளும் அருவிகளும், எமது இதயத்தை ஈரப்படுத்தி கண்களைக் குளிரவைக்கும் நீர்வீழ்ச்சிகளும் அடர்ந்த பச்சைக் காடுகளும் சரணாலயங்களும் வனவிலங்குகளும் பறவையினங்களும் நீண்ட மணல் பரப்புகளும்  நில்லாமல் ஓய்வில்லாமல் கரையை முத்தமிட்டுச் செல்லும் கடல் அலைகளும்  நீலக் கடலின் பரப்பளவும் எழில் கொஞ்சும் மலையகத்தின் தேயிலைக் கொழுந்துகளும் தோற்றுவிக்கும் உணர்வலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்த அழகிய தேசத்தின் அழகைக் கண்டு ரசிக்கத் தெரியாதவன் மனிதனா? இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: குயிலின் ஓசையை ரசிக்கத் தெரியாதவன் மனிதனல்ல.”

அழகை ரசிப்பது மனித இயல்பாகும். இதனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்கள்: ஒரு பெண் சொத்து, செல்வம், அழகு, குடும்ப அந்தஸ்து, மார்க்கப்பற்று முதலான நான்கு விடயங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றாள். நீ மார்க்கப்பற்றுள்ள பெண்ணைத் தெரிவு செய்! இல்லா விட்டால் உனக்கு நாசம்தான்!” இந்த ஹதீஸில் பொதுவாக மணப் பெண்ணைத் தெரிவு செய்வதில் மனிதர்கள் இயல்பாக நான்கு விடயங்களைக் கருத்திற் கொள்கிறார்கள். அதிலும் அழகு ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நபியவர்கள் அழகை இங்கு ஆட்சேபிக்கவில்லை. ஆனாலும், முதல்தர நோக்கம்

மார்க்கப்பற்றாக அமைய வேண்டும் என நெறிப்படுத்துகின்றார்கள்.

இஸ்லாம் இயற்கை மார்க்கம். மனித இயல்புக்கு மாற்றமாக எத்தகைய உள்ளீடுகளையும் அது கொண்டிருக்கவில்லை. ஓர் ஆண் அல்லது பெண் தனது வாழ்க்கைத் துணை அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பாகும். எனவே, அது இஸ்லாமாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும்கூட அழகால் ஈர்க்கப்படக் கூடிய மனித இயல்புள்ளவர் என்பதை பின்வரும் திருமறை வசனம் விளக்குகின்றது.

“(நபியே! இப்போதிருக்கும் உங்களுடைய மனைவிகளுக்குப்) பின்னர் வேறு யாதொரு பெண்ணும் (அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி யாதொரு பெண்ணின் அழகு உங்களைக் கவர்ந்திருந்த போதிலும் உங்களுடைய மனைவிகளில் எவரையும் நீக்கி அதற்குப் பதிலாக அவளை மனைவியாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல…”   (அல்அஹ்ஸாப்: 52)

அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான்” என்ற ஹதீஸை ஆழமாக விசுவாசித்த முஸ்லிம் தனி மனிதன் தனது பேச்சை, உரையாடலை அழகாக அமைத்துக் கொள்வான். தனது நா உச்சரிக்கும் வார்த்தைகள் அழகாக அமைய வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பான். அவன் உண்மையைப் பேசுவான்; நேர்மையாகப் பேசுவான்; நீதமாகப் பேசுவான்; நல்லதையே பேசுவான்; மிக அழகானதைப் பேசுவான்; அன்பாகப் பேசுவான்; நளினமாகப் பேசுவான்; மரியாதையாகப் பேசுவான்; பொய் பேச மாட்டான்; புறம் பேச மாட்டான்; ஆதாரமற்றதைப் பேச மாட்டான்; அவதூறாகப் பேச மாட்டான்.அவனது பேச்சு மட்டுமல்ல, செயற்பாடுகளும் அனைத்து

நடவடிக்கைகளும் அழகாகவே இருக்கும். அல்லாஹ்வை நேசிக்கின்ற மனிதன் தனது வணக்க வழிபாடுகளைக் கூட அழகாக அமைத்துக் கொள்வான். தனக்குள் புதையுண்டு கிடக்கும் ஆற்றல், திறமைகளை இனங்கண்டு வெளிக்கொணர்ந்து பட்டை தீட்டி ஜொலிக்கச் செய்வான். நபி (ஸல்

லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனது செயலை கனகச்சிதமாக செய்வதை அல்லாஹ் விரும்புகின்றான்.” (அபூயஃலா, தபராணி)

மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தனது அருட்கொடையின் அடையாளங்கள் தனது அடியானிடம் தென்படுவதை விரும்புகின்றான்.” (அத்திர்மிதி)

முஸ்லிம் தனி மனிதன் மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயமும் அழகுணர்ச்சி மிக்கதாக வாழ வேண்டும். தான் சுமந்திருக்கும் இஸ்லாமிய வாழ்க்கைநெறி அழகானது.அது மனிதர்களை வாழ்வாங்கு வாழவைக்க வல்லது. அது செழுமையானது என்பதை முஸ்லிம்கள் வாக்காலும் வாழ்வாலும் எடுத்துக்காட்ட வேண்டும். எமது சிந்தனை தீவிரவாத, பயங்கரவாத, கடும்போக்குவாத அசிங்கங்களால் போஷிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை முஸ்லிம்கள் முன்னுதாரண மிக்க வாழ்வால் பறைசாற்ற வேண்டும்.

இவ்வகையில் எமது வாழ்க்கை முறை குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். இஸ்லாம் வரண்ட மதக் கோட்பாடாக பிறரால் புரியப்பட்டிருக்கிறது. அதனை நாம் அறிமுகம் செய்த பாணியில் எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இஸ்லாத்தில் விளையாட்டு முதலான கலை, கலாசார நிகழ்வுகளுக்கு இடம் இல்லையா? என முஸ்லிமல்லாத புத்திஜீவிகளும் பொதுமக்களும் வினா எழுப்புகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இஸ்லாத்தையும் முஸ்லிம் சமுதாயத்தையும் வரண்ட ஒன்றாகவே பிற மத மக்கள் பார்க்கின்றனர். இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தின் அழகு எம்மவரால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. நபிகளாரின் காலப் பிரிவில் திருமண வீடுகளில் இஸ்லாமிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் வீட்டுக்கு தாமதமாக வந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏன் தாமதமாகி வந்தீர்கள்?” என வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் மணமகளை அழைத்துச் சென்று மணமகளின் வீட்டில் விட்டு விட்டு வந்தோம். (அதனால் தாமதமாகி விட்டது)” என்றார்கள். மணமகளுடன் பாடல் இசைப்பவர்களையும் அழைத்துச் சென்றீர்களா? அன்ஸார்கள் பாடல்களை விரும்பிக் கேட்பார்களே!” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு திருமண வீட்டுக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள். அங்கு இசைக்கப்பட்ட பாடல்களைக் கேட்டார்கள். அப்பாடலில் நமக்கு மத்தியில் இருக்கும் நபி நாளை நிகழுவதை அறிவார்” என்ற வரியை மட்டும் தவிர்த்துக் கொள்ளு

மாறு பணித்தார்கள்.அழகை விரும்புகின்ற அல்லாஹ்வின் நபி இஸ்லாத்தையும் அழகான ஒரு வாழ்க்கை நெறியாகவே அறிமுகம் செய்தார்கள். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்

லம்) அவர்கள் அழகியலை ஆதரித்துப் பேசினார்கள்; அதனை ஊக்குவித்தார்கள். கலாரசனை மிக்க அண்ணலார் கவித்திறன் மிக்கவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கினார்கள். அவர்களது ஆஸ்தான  கவிஞராக ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்காக மஸ்ஜிதுன் நபவி முன்றலில் ஈச்சம் மரக்குற்றியால் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து கொண்டு அந்த நபித் தோழர்கள் கவி படித்தார்கள். அவர்கள் ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வாழ்த்தி இவ்வாறு கவி படித்தார்கள்:

“என் விழி உங்களை விட அழகில் சிறந்தவரைக் கண்டதில்லைதங்களை விட சிறந்தவரை எப்பெண்ணும் ஈன்றெடுத்ததில்லை குற்றம் குறை ஏதுமின்றி நீர் எண்ணியவாறு உதயமானீரே!”

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்தோழர்களுக்கு மத்தியில் விளையாட்டையும் போட்டி நிகழ்ச்சிகளையும் ஊக்குவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அம்பெறியுங்கள்! உங்களது தந்தை இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வில் வீரராக இருந்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு இஸ்லாம் மனித மனங்களைக் கொள்ளை கொள்ளக்கூடிய விதத்தில் கவர்ச்சிகரமாக முன்வைக்கப்பட்டது. இறை விசுவாசக் கோட்பாட்டிலும் வணக்க வழிபாடுகளிலும் இஸ்லாமியப் பண்பாட்டிலும் அழகுணர்ச்சி பிரத்தியேகமாக பிரதிபலித்தது. ஐவேளை கூட்டுத் தொழுகையில் அடியார்களால் பேணப்படும் செவிமடுத்துக் கட்டுப்படும் பாணி மிகவும் அழகானது. அவ்வாறே ஹஜ்ஜுக் கிரியைகளின்போதும் ஹாஜிகள் ‘தவாப்’ செய்யும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

“அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்” என்ற நபிகளாரின் வாக்கை ஈமான் கொண்ட முஸ்லிம் சமுதாயம் தேசத்தில் மூடுண்ட சமுதாயமாகவும் இறுக்கமான பாரம்பரியங்களைப் பற்றிப்பிடித்து வாழும் சமுதாயமாகவும் தொடர்ந்தும் இருந்தால் இஸ்லாம் அடுத்த மதத்தினரால் ஈர்க்கப்படாத ஒரு மதக் கோட்பாடாக, நடைமுறைச் சாத்தியமற்ற தத்துவமாகவே வாழும். எனவே, முஸ்லிம் சமுதாயத்தவர் அழகுணர்ச்சி மிக்கவர்களாகவும் அழகியலுக்கும் அழகியற் கலைகளுக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும். மனித மனங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இஸ்லாத்தை முன்வைக்கும் திராணி எமது சமுதாயத்துள் வளர்க்கப்படல் வேண்டும்.இவ்வகையில் எமது சமுதாயத்திற்குள் நிகழும் நிகழ்ச்சிகளிலும் ங்கோதர மதச் சமுதாயத்தவருடன் நல்லுறவு பேணி நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளிலும் அழகுணர்ச்சி பிரதிபலிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். முஸ்லிம்களின் கலை, கலாசாரம், பண்பாட்டுப் பின்புலத்தை அவர்கள் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளும் விதமாக மார்க்க வரம்புகளைப் பேணி நிகழ்ச்சிகளை அரங்கேற்ற வேண்டும். அழகை விரும்புகின்ற அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்கள் முன் சமர்ப்பிக்க நாம் சம்பிரதாயபூர்வமாகக் கடைப்பிடிக்கும் உரைகளும் சொற்பொழிவுகளும் ஒரே தீர்வல்ல என்ற முடிவுக்கும் நாம் வர வேண்டும்.

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *