பதாவா

கலாநிதி முஹம்மத் முபீர் (இஸ்லாஹி)
அதிபர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை

கேள்வி: இம்முறை பலரினதும் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்திருப்பதன் காரணமாக ஸகாதுல் பித்ர் கொடுக்காதிருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?

பதில்: நபி (ஸல்) அவர்கள் நோன்பிற்கான ஸகாதுல் பித்ரை கடமையாக்கினார்கள் என்ற ஒரு ஹதீஸ் ஸஹீஹ{ல் புகாரி மற்றுமுள்ள ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸை மையமாக வைத்து பெரும்பாலான புகஹாக்கள் ஸகாதுல் பித்ரானது கடமையானது -வாஜிபானது- எனும் சட்ட அந்தஸ்தைப் பெறுகின்றது என்று கூறுகின்றனர். இருந்தபோதிலும் இக்கடமையை நிறைவேற்றுவதற்கு இரண்டு நிபந்தனைகள் காணப்படுகின்றன. இவ்விரண்டு நிபந்தனைகளுக்கும் உட்படக்கூடிய அனைவரும் ஸகாதுல் பித்ரை நிறைவேற்ற வேண்டும். இல்லாதவர்களுக்கு கடமையாகாது. அந்நிபந்தனைகள்:

  1. முஸ்லிமாக இருத்தல்
  2. நோன்புப் பெருநாள் தினத்தில் தனக்கும் தனது பராமரிப்புக்கு உட்பட்டவர்களுக்கும் தேவைப்படக்கூடிய உணவை விட மேலதிகமான உணவையோ பணத்தையோ வைத்திருத்தல்.
    இவ்விரண்டு நிபந்தனைகளுக்கும் உட்படக்கூடியவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நோன்பு நோற்றவர்களாக இருந்தாலும் சரி நோன்பு நோற்காதவர்களாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும் சரி நோயுற்ற நிலையில இருந்தாலும் சரி, ஊரில் இருந்தாலும் சரி பிரயாணியாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவர் மீதும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது கடமையாகும்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மஸ்ஜித்கள் மூடப்பட்டிருக்கின்ற இந்நிலையில் வீடுகளில் இஃதிகாப் இருக்க முடியுமா?

பதில்: பெண்களும் சரி ஆண்களும் சரி வீடுகளில் இஃதிகாப் இருக்க முடியாது. இஃதிகாப் என்பது மஸ்ஜிதுடன் தொடர்புபட்ட ஒரு வணக்கமாகும். இஃதிகாபை மஸ்ஜிதில் நிறைவேற்ற வேண்டும் என்பது இஃதிகாபுக்குரிய நிபந்தனையாகும். எனவே அதனை மஸ்ஜிதில்தான் நிறைவேற்ற வேண்டும். மஸ்ஜித் அல்லாத இடத்தில் நிறைவேற்ற முடியாது.
இருந்த போதிலும் ஒவ்வொரு வருடமும் இஃதிகாப் இருக்கக்கூடிய வழமையுள்ளவர்களுக்கும் இம்முறை இஃதிகாப் இருப்பதற்கு நிய்யத்து வைத்து இருக்க முடியாமல் போனவர்களுக்குமான கூலி அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஓர் அடியான் நோய்வாய்ப்பட்டு அல்லது பிரயாணம் செய்தால் அவன் சுகதேகியான நிலையில் ஊரில் இருந்து செய்துகொண்டிருந்த (நல்லமல்களுக்கான) முழுமையான கூலி வழங்கப்படும்.”
அந்த வகையில் இம்முறை இஃதிகாப் இருப்பதற்கு நிய்யத் வைத்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போயிருந்தால் அதற்காக அவருக்கு அவரது எண்ணத்துக்கு ஏற்ப முழுமையான கூலி வழங்க்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மஸ்ஜித்களில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெருநாள் தொழுகையை குடும்பத்தாருடன் வீட்டில் தொழ முடியுமா?

பதில்: பெரும்பாலான சட்டக்கலை அறிஞர்களின் கரு;துப்படி பெருநாள் தொழுகையை கூட்டாக நிறைவேற்றத் தவறுகின்றவர்களுக்கு வீட்வில் தனியாகவோ அல்லது வீட்டிலுள்ளவர்களுடன் ஜமாஅத்தாகவோ தொழுது கொள்ள சட்ட அனுமதி இருக்கின்றது.
இரண்டு ரகஅத்துக்களையும் இரண்டு குத்பாப் பிரசங்கங்களையும் கொண்ட பெருநாள் தொழுகையானது மிகவும் ஏற்றமான ஒரு சுன்னாவாக காணப்படுகின்றது. இத்தெழுகையை நபி (ஸல்) அவர்கள் கூட்டாகவே நிறைவேற்றியிருக்கின்றார்கள். முதலாவதாக தொழுகையையும் இரண்டாவதாக குத்பாவையும் செய்திருக்கின்றார்கள். இருந்தபோதிலும் யாருக்கு இத்தொழுகையை கூட்டாக நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காமல் போகின்றதோ அவருக்கு தனியாக தொழுது கொள்ள முடியும். ஆனால் அவருக்கு குத்பா கடமையாகாது.

இதற்கமைய இம்முறை பெருநாள் தொழுகையை வீட்டில் நிறைவேற்றும்போது முதலிரண்டு ரகஅத்துக்களை மட்டும் தொழுதால் போதுமானது. அதன் பின்னர் இரண்டு குத்துபாப் பிரசங்கங்களையும் நிறைவேற்றுவது அவசியமான ஒன்று அல்ல.
இதற்கு ஸஹாபாக்களின் கூற்று ஒன்றே ஆதாரமாக காணப்படுகின்றது. அனஸ் (ரழி) அவர்கள் தனக்கு பெருநாள் தொழுகையை இமாமுடன் சேர்ந்து தொழுவதற்கு தவறி விட்டால் அவர் தன்னுடைய வீட்டில் இருக்கின்றவர்களை ஒன்று சேர்த்து தொழுவார். ஆனால் குத்பாவை நிகழ்த்த மாட்டார்கள். (பைஹகி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *