குர்ஆனிய காதல்

-நபீல் அபாபீல்-

அகன்ற வானை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆழ்மனம் முழுவதும் ஆயிஷா பற்றிய கவலைகளே ரணங்களாகிக் கொண்டிருந்தன. இதுவரை ஆயிஷா அல்குர்ஆனை திறந்து பார்க்கவில்லை. அன்போடு அரவணைத்து அழைத்தாலும் ஏதோ சாக்குப்போக்கு சொல்லி விட்டு எழுந்து ஓடி விடுகின்றாள்.
“ஆயிஷாம்மா! குர்ஆன் ஓதலாம் வாரிங்களா?”
உள்ளே திரும்பி சத்தமாக அழைத்தேன். இல்லை… அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர், “நீங்க ஒதுங்க டடி! நான் உம்மம்மாவுக்கு ஹெல்ப் பண்ணப் போகிறேன்!” என்ற பதில் கேட்டது.

மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளது விழிகளிலும் கலக்கம். இல்லை இல்லை! அதனை தாண்டிய குற்ற உணர்ச்சி.
நான் வெளிநாடு போகும்போது ஆயிஷா மூன்று மாத கைக்குழந்தை. அல்குர்ஆனை சுவாசமாய் நேசிக்கும் அனைத்து தந்தைகளையும் போலவே அவளை வயிற்றில் இருக்கும்போதே குர்ஆனிய வரிகளைத்தான் தாலாட்டாக பாடினேன். பிறந்த பின்பும் என் மடியில் மயிலிறகு குவியலாகி அவளை பத்திரமாக சுமந்து கொண்டு தேன் துருவலான குர்ஆனிய வசனங்களை இராகமிட்டேன்.

ஆனால்…

இப்போது என் செல்ல மகள் குர்ஆன் என்றாலே ஓடுகிறாள். வேதனை தாங்க முடியவில்லை. வாய்க்குள் யாரோ கையை விட்டு கூரிய நகங்களால் இதயத்தை கசக்கி பிழிவது போல வலித்தது.
யாரை குற்றம் சொல்ல முடியும்? பிழைப்புக்காக ஆறு வருடங்கள் பாலைவனத்தில் தொலைந்த என்னையா? வீட்டு கடமைகளையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்து மகளின் மனதில் குர்ஆனை பதிக்க முடியாமல் போன மனைவியையா?
பொங்கி வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு அல்குர்ஆனை கைகளில் ஏந்தினேன். எழுத்துக்கள் மங்கலாகிக் கொண்டிருந்தன.

“என் கண்மணிக்கு கதை சொல்லவா…?” ஒரு நாள் அன்பாக அறைக்கு ஓடி வந்து அருகில் அமர்ந்து கொண்டாள். எனக்குத் தெரிந்த குர்ஆனிய கதைகளை சொல்லச் சொல்ல அவளது அழகிய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டே சென்றன.
“இந்தக் கதைகள் எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை டடி” என்றால் ஏக்கமாக…

நான் குர்ஆனைக் காட்டி “இதில்தான் இந்தக் கதைகள் உள்ளன” என்றதும்… மெதுவாக புன்னகைத்தாள். நோன்பின் சோர்வு எட்டிப் பார்க்கும் தருணங்களில் ஆயிஷா என்னருகே அமர்ந்து கொள்வாள். அவளது முகம் தொலைபேசியைக் கேட்டுக் கெஞ்சும். பட்டாம்பூச்சி இறக்கை போல் மெல்லிய மனது அவளுடையது. கசக்க மனம் விடுவதில்லை.

குர்ஆன் ஓதும் அழகிய குழந்தைகளின் வீடியோக்களை எடுத்துக் கொடுப்பேன். அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதுக்குள்ளும் குர்ஆனிய நேசம் மலர்ந்து கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது.

இப்பொழுது ஆயிஷா என்னோடு குர்ஆன் ஓத ஆரம்பிக்கிறாள். ஆனால், ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து மனம் போன போக்கில் நாங்கள் ஓதுவதில்லை. முதலாவது வசனத்தை நான் ஓதுவேன். இரண்டாவது வசனத்தை ஆயிஷா ஓதுவாள். மூன்றாவது வசனத்தை மனைவி ஓத வேண்டும். மனைவிக்கு இது அமல். ஆயிஷாவுக்கு இது விளையாட்டு. எனக்கு மட்டும் என் செல்ல மகளை அல்குர்ஆனுக்குள் அழைத்து வரும் வெற்றிப் பாதையின் அடுத்த மைல்கல்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆயிஷாவுக்கும் அவளது தோழிகளுக்கும் யார் முதலில் அல்குர்ஆனை ஓதி முடிப்பது என்ற போட்டி ஒன்றையும் வைத்தேன்.

விழித்தால் பெருநாள்!
தாங்க முடியாத தலைவலி. அறைக்குள் சுருண்டு படுத்திருந்த என்னை இரண்டு, மூன்று தடவை ஆயிஷா வந்து தட்டிப் பார்த்து விட்டு கடந்து செல்வது சலனமாக தெரிந்தது.

“டடாக்கு தலைவலி தங்கம்… தொந்தரவு செய்ய வேண்டாம்…”
என மனைவி கிசுகிசுப்பதும் கேட்டது.

எவ்வளவு நேரம் கடந்தது எனத் தெரியவில்லை. யாரோ என் தலையைத் தூக்கினார்கள். சந்தேகமே இல்லை. என் ஆயிஷாவின் பிஞ்சுக் கைகள்தான். நெற்றியில் ஒரு முத்தமிட்டு விட்டு என் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்து விட்டு ஆயிஷா சொன்னாள் என் விழிகளைப் பார்த்து,

“கவலைப்பட வேண்டாம் டடா… நான் குர்ஆன் ஓதுகிறேன். தலைவலி சரியாகிவிடும்” என தன் மாதுளம் பற்களால் புன்னகைத்து விட்டு குர்ஆன் ஓதத் துவங்கினாள்.

கண்களை மூடினேன்! கசிந்த ஆனந்தக் கண்ணீரில் சுவனத்து மணம் வீசியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *