கொரோனா கற்றுத் தரும் பாடங்கள்

பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

வரலாற்று ரீதியாக போர் என்றால் நாடுகளுக்கிடையே ஏற்படுவது அல்லது உள்நாடுக் குழுக்கிடையே ஏற்படுவது. இன்று இந்த வரையறை மாறி மனிதனுக்கும் கொரோனா வைரஸ{க்குமிடையேயான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய (2020.04.26) தரவுகளின்படி உலகளாவிய ரீதியில் 25 இலட்சம் பேர் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சம் பேர் வரை மரணித்துள்ளனர். செல்வந்த நாடுகள், வளர்முக நாடுகள் எல்லாமே கடும் பாதிப்புக்குள்ளாகி அண்மைக் கால வரலாற்றில் இல்லாத கடும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

இன்று உலகளாவிய ரீதியில், பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களும் கொரோனா என்ற மோசமான சூழமைவில் உலகம் எதிர்காலத்தில் எவ்வாறு மாற்றமடையப் போகின்றது? கொரோனாவை உலக அரசாங்கங்களும் மக்களும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தமது சிந்தனைகளை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 30 தொடக்கம் 40 ஆண்டு கால கோளமயமாக்கத்திற்கு முற்றுப்புள்ளி, மனிதன் வேலை செய்யும் முறை, கல்வி கற்கும் முறை, வாழும் முறை, பொழுதுபோக்கு முறை, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை என்பவற்றில் ஏற்பட வேண்டிய மாற்றம், பாதுகாப்புச் செலவினங்களுக்குப் பதிலாக பொதுச் சுகாதார செலவினத்தில் அதிகரிப்பு, கொரோனாவை எதிர்கொள்வதில் மோதல்களை விடுத்து நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு… என பல உபாயங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கு முற்பட்ட இலங்கை, இந்தியா முதலிய நாடுகளில் அரசாங்க மற்றும் சமூக மட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான தவறான பரப்புரைகள், வெறுப்புப் பேச்சுக்கள், பொய்யான முறைப்பாடுகள் இந்நாடுகளில் மேலெழுந்தன. பரந்துபட்ட அபிவிருத்திக் கொள்கைகளைக் கொண்டிராத சில அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரைக் குறிவைத்து செய்த பகுத்தறிவுக்கொவ்வாத பிரசாரங்களின் மூலம் பெரும்பான்மையினரின் வாக்குகளை குறிவைத்தன. இந்த நிலையில்தான் கொரோனாவும் வந்து சேர்ந்தது.
பொதுவாகவே ‘பலியாடுகளைத் தேடுதல்’ ஒரு மனித இயல்பாகி விட்டது. அடிப்படைக் காரணங்கள் பல இருக்கத்தக்கதாக பலவீனமானவர்கள் மீது பழியைப் போடும் முயற்சியையே இது குறிக்கும். மேலை நாடுகள் எவ்வளவுதான் மெத்தப்படித்த சமூகங்களைக் கொண்டிருந்தாலும் கொரோனா தொற்று பரவலின் பின் ஆசியர்கள் மீது குறிப்பாக சீனர்கள், வியட்நாமியர், சிங்கப்பூர் பிரஜைகள் மீது வெறுப்பைக் காட்டும் பல சம்பவங்களையே மேலைநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய வெறுப்புக்கு எதிரான சிந்தனைகள் இருந்தபோதிலும் இம்மக்கள் உடல், உள ரீதியான பாதிப்புக்குள்ளாவது பற்றிய செய்திகளை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் இலங்கையிலும் கொரோனா தொற்று பரவலைப் பயன்படுத்தி அப்பாவி முஸ்லிம்கள் மீது கடுமையான வெறுப்பு பேச்சுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலவற்றை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. இலங்கை முஸ்லிம் தலைவர் ஒருவர் இந்த நிலைமை நீடித்தால் முஸ்லிம்கள் தமது தொற்று பற்றி அறிவிக்க முடியாத நிலை ஏற்படும் என்றார். இந்தியாவில் காண முடியுமான சிறப்பான ஒரு போக்கு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல முஸ்லிம் அல்லாத இயக்கங்கள் (காங்கிரஸ், திமுக) குரல் எழுப்பி இருப்பதுதான். இந்திய முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் சமயத்திற்கும் எதிரான வெறுப்பு பதிவுகள் பற்றி மத்திய கிழக்கு அரசுகள் வழங்கிய பதிலடிகள் காரணமாகவும் இந்திய தலைமை பீடம் தற்போது சில நிதானமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக தெரிகின்றது. இந்தப் போக்கு மேலும் வலுப்பெற வேண்டிய அவசியம் உண்டு.
இலங்கையில் இத்தகைய இனவாத போக்குகளை நிராகரிக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஏனைய சமூகங்களின் முற்போக்காளர்கள் பேருதவி செய்ய வேண்டும் என்பது எமது கருத்தாகும்.

இனவாதம் அரசியல் ரீதியானது. ஆனால்;, கொரோனாவை ஒழித்துக்கட்ட சகல சமூகத்தவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் தேவை. சில அரசாங்கத் தலைவர்களின் கூற்றுக்களில் கொரோனாவை ஒழிக்க இலங்கையர் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற தொனி தென்படுவதும் ஆரோக்கியமானது. இது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாகி விட்டதால் இன்று சமூகக் கிளர்ச்சிகளுக்கு வாய்ப்புக் குறைவு என்று ஒரு கருத்துண்டு. இதனால் இனவாத சக்திகள் மழுங்கடிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதில் காணப்படும் ஒரு முரண்பாடு, வாழ்க்கை வசதிகளுக்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உச்ச கட்டத்தில் பயன்படுத்தப்படும் இந்நாட்களில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் பற்றிய பார்வையில் பகுத்தறிவு ரீதியான விஞ்ஞான அணுகுமுறை பற்றாக்குறையாக இருப்பதுதான்.
“எனது கௌரவத்தைப் பறிக்க முயலும் எவனும் இறுதியில் தோல்வி காண்பான்.” (நெல்சன் மண்டேலா)
“மற்றவர்களை வெறுப்பதற்கான காரணத்தைக் கண்டறிய முயல வேண்டாம்.” ( (Rashid Jorvee)  )
“இருளை அகற்ற இருள் உதவாது; வெளிச்சமே அதனைச் செய்யும் வெறுப்பு அன்றி, அன்பே வெறுப்பை விரட்டும்.” (மார்ட்டின் லூதர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *