உளநிலை மாற்றமும் ஈமானிய அதிகரிப்பும்

அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி), (எம்.ஏ.)
தலைவர், இஸ்லாமிய கற்கைள் பீடம்- ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா

வருடத்திற்கு ஒருமுறை எம்மைப் புடம் போட வந்து செல்கிறது ரமழான். அதன் இலக்கு தக்வா என்பது உலக வாழ்வில் ஓர் இறைவிசுவாசி கவனமாக பயணிப்பது, இறை உணர்வோடு வாழ்வது, மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை மனதில் இருத்திச் செயற்படுவது. எனவே, ரமழான் முடிவடையும்போது ஒருவன் தனது உளநிலை மாற்றத்தை, ஈமானிய அதிகரிப்பை தெளிவாக உணர முடியுமாக இருக்க வேண்டும்.

“நோன்பு எனக்குரியது. அதற்கான கூலியை நானே தருகிறேன்” என அல்லாஹ் கூறியிருப்பது இதில் மிகைத்திருக்கும் ரப்பானிய பக்கத்தை தெளிவுபடுத்துகிறது. எனவே, நோற்கின்ற நோன்புகள் முற்றிலும் இஃலாசோடு, பாவங்கள், வீணான செயல்களை விட்டும் தூரமானதாக அமைதல் வேண்டும். நோன்பாளியின் செயல்கள் உயர் கூலிகளை பெற்றுத் தர இருக்கின்றன என்ற வகையில் முடிந்தளவு அதிகமான நன்மைகளை இக்காலங்களில் செய்ய முயற்சிப்போம். வழமையை விட அதிகமான சுன்னத்தான தொழுகைகள், திக்ரு, துஆ, குர்ஆன் ஓதல், இஸ்திஃபார், ஸதகாக்கள் முதலானவற்றை பன்மடங்கு ஆற்றிடுவோம். இவை அனைத்திற்கும் பின்னால் தக்வாவை அதிகரிக்கும் இலக்கு எமது உள்ளத்தில் இழையோட வேண்டும்.

ரமழானில் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் அமர்ந்து அல்குர்ஆனை மீட்டியிருக்கிறார்கள். எனவே, அல்குர்ஆனுடன் எமது உறவு புனித ரமழானில் பலப்பட வேண்டும். அதனை ஹு ஓதுவது, தர்ஜமா, தப்ஸீர் வாசிப்பது, விளக்க உரைகளைக் கேட்பது, கியாமுல் லைல் தொழுகையில் குர்ஆனோடு ஒன்றிப்பது… என இதன் பக்கங்கள் பல வகையாக அமையலாம். குறைந்தது ஒரு தடவை அல்குர்ஆனை ஓதுவது அதன் தர்ஜமாவை முழுமையாக வாசித்து முடிப்பது எனும் உறுதிப் பிரமாணங்களாவது தேவை.

இரவுத் தொழுகைகள் ரமழானில் முக்கியமானவை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு தொழுகையில் லயித்து விடுவார்கள். குடும்பத்தாரையும் இதற்காக எழுப்பி விடுவார்கள். தராவீஹ் தொழுகைகள் நீண்ட நேரம் அமைய வேண்டும். அல்குர்ஆனை அதிகமாக ஓதி, ருகூஉ, ஜூதுகளை நீட்டி அதில் அல்லாஹ்விடம் மன்றாடுவதாக தொழுகைகளை ஆக்கிக் கொள்ள வேண்டும். இதில் இடம்பெறும் துஆக்களை பொருளறிந்து மனனமிட்டு ஓதும் ஸூராக்களின் கருத்துக்களையும் விளங்க முடியுமாயின் தொழுகையில் நாம் அடையும் இன்பம், கண்குளிர்ச்சி பன்மடங்காக அதிகரிக்கும்.

தக்வாவும் இறைநெருக்கமும் அதிகரிக்கும் அளவுக்கு ஒரு விசுவாசி தான் இறைவனுக்கு மாறு செய்யும் இடங்களையும் இனங்காணுவான். செய்துவிட்ட பாவங்களும் தவறுகளும் செய்யத் தவறிய நன்மைகளும் அவனது மனக்கண்ணில் நிழலாடும்.
விளைவு, தஃபாவிலும் இஸ்திஃபாரிலும் கண் கலங்கும் நிலை ஏற்படும். ஹதீஸ் வர்ணிப்பது போல் தான் ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்திருப்பதாகவும் மலை தன் மீது வந்து விழப் போவது போன்றும் பாரதூர உணர்வு அவனில் மிகைக்கும். மன்னிக்கப்படாத பாவங்களோடு மறுமையில் படைத்தவன் முன் நிற்கும் ஆபத்து அவனை மன்றாட்டத்தை நோக்கி இட்டுச் செல்லும்.
லைலதுல் கத்ரை தன்னகத்தே பொதிந்துள்ள இறுதிப் பத்து நாட்கள் ஒரு விசுவாசிக்கு, தக்வா வேட்கை உள்ளவனுக்கு மிக முக்கியமானவை.

ஒரு நோன்பாளியின் ஒவ்வொரு கணப்பொழுதும் முக்கியமானது. ஒரு வினாடியேனும் வீணாகக் கழிய அவன் அனுமதிக்க மாட்டான். இவ்வகையில் எமது நாவுகள் திக்ரில் திழைத்திருக்க வைத்திருக்கும் நிலையை நாம் உணர முடியுமாக இருக்க வேண்டும். அன்றாட வேலைகளில் உடல் ஈடுபட்டாலும் உள்ளமும் நாவும் பொருளுணர்ந்து திக்ருகளில் திழைக்கும் என்றால் அது இறை நெருக்கத்தின் அடையாளமாக இருக்கும்.

எம்மில் தக்வாவை, இறை நெருக்கத்தை அதிகரிக்க வந்த ரமழான் விடைபெற்றுச் செல்கையில் மாற்றம் கண்டுள்ளோம் எனும் திருப்தி எமக்குக் கிட்ட வேண்டும். அடுத்த ரமழான் எப்போது வரும் எனும் ஏக்கம் மிகைக்க வேண்டும். மாற்றத்தை நோக்கிய ரமழானை வரவேற்போம். தக்வாவை அதிகரிப்போம். இறை நெருக்கம் பெறுவோம். மறுமையில் சுபிட்சம் பெறுவோம். வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

இச்சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு உலகை ஆட்டிப் டைக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரோனாவிலிருந்து உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்குமாறும் இந்த சோதனையையும் துன்பத்தையும் முற்றாக அகற்றி விடுமாறும் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடி பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *