சாதனை படைத்த நோன்பாளி

-அஷ்ஷெய்க் அறபாத் கரீம் (நளீமி)

மீண்டும் ஒரு ரமலான் நம்மை மிக வேகமாக கடந்து செல்கிறது. இறை விசுவாசிகளுக்கு ஒரு மிகப் பெரும் அருளாகவும், நல்லதொரு பயிற்சியாகவும் நோன்பு தரப்பட்டது. நோன்பு நோற்பதன் மூலம் நோன்பாளிகள் இரண்டு பிரதான பண்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.


1. அளவில்லாத மறுமைக் கூலி
நோன்பு ஒரு மிக நீண்ட வணக்கம். இஸ்லாத்தின் ஏனைய வணக்க வழிபாடுகளோடு ஒப்பிட்டு நோக்கும்போது ஓரளவு கடினமான, மிகப் பெரும் பொறுமையை வேண்டி நிற்கின்ற ஓர் இபாதத். அன்றாட வாழ்வொழுங்கை மாற்றி வித்தியாசமானதொரு நேர அமைப்பில் செயற்படுமாறு நோன்பு போதிக்கிறது. பழகிப்போன வாழ்க்கை முறையை புதியதொரு ஒழுங்கில் மாற்றி பல்வேறு கஷ்டங்களை சகித்துக் கொண்டு நோன்பு எனும் வணக்கத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. 

பழகிப்போன வாழ்க்கைக்கு மாற்றமாக செயற்படுவதற்கும், அதுவும் தொடர்ந்து ஒரு மாத காலம் மேற்கொள்வதற்குமான மிகப் பெரும் பலனாகவே மறுமையில் நோன்பாளிகளுக்கு தாராளமாக கூலி வழங்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள், “நோன்பு எனக்குரியது, நானே அதற்கு கூலி கொடுப்பேன்” (முஸ்லிம்). “நோன்பாளிகள் ரய்யான் வாசல் வழியாக சுவனம் நுழைவார்கள்” (முஸ்லிம்) எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இத்தகைய மிக உயர்ந்த வெகுமதிகளை இலக்காகக் கொண்டே நோன்பு நோற்பதற்கு ஒரு விசுவாசி முன் வருகின்றான். நோன்பு நோற்ற நிலையில் ஏற்படும் சோர்வும் களைப்பும் இறைவனது மிகப்பெரும் கூலியை நினைவிற் கொள்ளும் போது ஒரு பொருட்டாக தென்படுவதில்லை. எனவே சுவனமே நோன்புக்குரிய கூலியாக இருக்கும்போது நோன்பு ஒரு கஷ்டமான வணக்கமல்ல என்பது தெளிவு. 

இத்தகைய விசாலமான சுவனத்தை வேட்கை கொண்டு நோன்பு வைக்கும் நோன்பாளிகளது நோன்பு தரமானதொரு செயற்பாடாக மாறிவிடுகிறது.ரமலானில் நோன்பையும் நோற்று அதனை உச்ச நிலையில் பயன்படுத்துவதைப் பொறுத்தே நோன்பாளிகளுக்கிடையில் வித்தியாசங்கள் தோன்றுகின்றன. எல்லா நோன்பாளிகளும் ஒரே தரத்தில் வைத்து நோக்கப்படுவதில்லை. சிலர் உடம்பைக் கட்டுப்படுத்தி நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். வேறு சிலர் உடம்பைக் கட்டுப்படுத்தி பாவச் செயற்பாடுகளிலிருந்து தூரமாக வாழ்வர். வேறு சிலர் உடம்பையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திக் கொள்வதோடு அதிக நற்பணிகளை மேற்கொண்டு நன்மைகளை சாதித்துக் கொள்வர். இத்தகைய மூன்று விதமான நோன்பாளிகளில் மூன்றாவது வகை நோன்பாளிகளே மிகக் சிறந்தவர்கள் என்பதாக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) விளக்குகிறார்கள்.

எனவே நாம் மூன்றாவது வகை நோன்பாளி என்ற தரத்தை அடைந்தோமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். சாதாரண நோன்பாளிகளா அல்லது சாதனை படைத்த நோன்பாளிகளா என்பது குறித்து நமக்குள்ளால் சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. 
இறைதூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் வெறுமனே நோன்பை உடம்பை வருத்தி, பாவகாரியங்களிலிருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வதோடு மாத்திரம் சுருக்கிவிடாது ரமலான் காலங்களில் நோன்பு நோற்றவர்களாக நிறையவே சாதித்தார்கள். அந்தச் சாதனைகள் பல்வேறு வடிவங்களைப் பெற்றன. இஸ்லாத்தின் தூதை உலகில் நிலைத்தோங்கவைப்பதற்கான போராட்டக்காரர்களாகவும், இரவு நேரங்களில் விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபவர்களாகவும், அல்குர்ஆனை ஆழ்ந்து கற்பவர்களாகவும், சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களுக்கு மத்தியில் நீதியையும் கருணையையும் கடைப்பிடிப்பவர்களாகவும் அந்தச் சாதனைகள் காணப்பட்டன.

இத்தகைய சாதனை நோன்பாளிகளாக நாம் இருந்தோமா என்பதுவே இங்கு முக்கியமானது. உயரிய இலட்சியங்களை அடைவதற்காகவும் அளவில்லா இறை கூலியை பெற்றுக் கொள்வதற்காவும் செயல்படும் நோன்பாளிகள் இப்படி அதிகம் சாதிக்க வேண்டும். 
சாதாரண நோன்பாளி என்ற நிலையிலிருந்து விடுபட்டு சாதனை நோன்பாளிகளாக மாற வேண்டும். அந்தச் சாதனைகள் ரமலானுக்குப் பிறகும் தொடர வேண்டும். இத்தகையதாரு நிலை தோன்றுமாக இருந்தால் நோன்பின் பிரதான பயனை அடைந்து கொண்டமைக்கு ஒரு சிறந்த சான்றாகும். 


2. வினைத்திறன் மிக்க செயற்பாட்டாளராக இருத்தல்

நோன்பின் அடுத்த பிரதான இலக்கு அல்லது பயன் நோன்பு நோற்பதன் மூலம் உலகில் ஒரு சிறந்த பிரஜையாக தொழிற்படல் என்பதாகும். இதனையே அல்குர்ஆன் “நீங்கள் இறைபயம் கொண்டவர்களாக மாறிவிடலாம்” என்பதற்காக நோன்பு விதியாக்கப்பட்டதாக கூறுகிறது. 

இத்தகைய அதி உன்னத நிலை நமக்குள் தோற்றுவிக்கப் பட்டுள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தீமைகளுக்குள் அல்லுண்டு செல்லாது, மனதை நன்கு கட்டுப்படுத்தி, நன்மைகளின் பால் செயற்படும் ஓர் உள்ளுணர்வே தக்வாவாகும். இத்தகைய உணர்வு கொண்ட உள்ளத்தை உருவாக்குவதில் நோன்பு காத்திரமான பங்களிப்புகளை செய்கிறது.

மிக நீண்ட தொடரான பயிற்சியில் ஒருவர் தன்னை ஈடுபடுத்தி அதனூடாக அடையப் பெற வேண்டிய நல்ல பிரஜை அல்லது நல்லதொரு செயற்பாடாளர் என்பதை அடைந்து கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களை நோன்புக்காக இஸ்லாம் தடை செய்து ஒரு பயிற்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட வற்றைக் கூட நம்மால் தியாகம் செய்து வாழ முடியுமாக இருந்தால் முற்றாக தடை செய்யப்பட்டவையை விட்டும் தவிர்ந்து வாழ்வது ஒரு நோன்பாளியை பொறுத்தவரையில் சிரமமான விஷயமல்ல என்பது புலனாகிறது.

எனவே நோன்பு மனோ இச்சைகளை வென்று வாழ்தல் என்ற நிலைக்கு ஒரு மனிதனை கொண்டு செல்கிறது. அற்ப இலக்குகளை உலகில் அடைந்து கொள்ள வாழும் நிலையை மாற்றி உயர்ந்த குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற உன்னத மனோநிலையை தோற்றுவிக்கிறது. விளைவாக இறை விருப்பங்களை உலகில் செயற்படுத்துவதற்காக செயற்படும் ஒரு சிறந்த செயற்பாட்டாளராக நோன்பாளி மாறிவிடுகிறான். இதனூடாக உலகில் சிறந்த பிரஜையாக தொழிற்படுபவன் என்ற நிலைக்கு நோன்பு ஒரு மனிதனை உருவாக்கிவிடுகிறது.

எனவே, நாம் சாதனை படைத்த நோன்பாளியாகவும் உலகில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தும் பிரஜையாகவும் நம்மை மாற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணமாக ரமலானை பயன்படுத்தி இறை திருப்தியை பெற்ற சிறந்த செயற்பாட்டாளர்களாக மாறுவதற்கு நமக்கு அல்லாஹ் அருள் செய்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *