வெற்றியாளர்களின் பண்புகள்

இஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons)

அல்குர்ஆன் பொதுவாக மனிதர்களின் உலக, மறுமை வெற்றிக்கும் சுபிட்சத்திற்கும் எல்லா இடங்களிலும் வழிகாட்டினாலும் குறிப்பிட்ட சில இடங்களில் வெற்றியாளர்களுக்குரிய சில முக்கிய பண்புகளை வலியுறுத்திச் சொல்கிறது. ஒரு சமூகம் வெற்றியை நோக்கி நகர வேண்டுமானால், ஒவ்வொரு தனி நபரும் அதற்கான தகைமைகளைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறே அவர்களது சமூக வாழ்விலும் நல்ல குணவியல்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் பிரதிபலிக்க வேண்டும். மனிதர்கள் எவ்வளவுதான் தங்களைத் தனிப்பட்ட ரீதியாக சீர்படுத்திக் கொண்டாலும் சமூக வாழ்வில் அவர்களது நடத்தை

களும் பிற மனிதர்களுடனான நடவடிக்கைகளும் சீர்பெறவில்லையெனில், வெற்றிக்கான முழு அடையாளமாக அது இருக்க முடியாது.

ஸூரதுல் முஃமின் வெற்றிக்குரிய சில முக்கிய சிறப்பியல்புகளை அதன் மிக ஆரம்ப வசனங்களில் சமர்ப்பிக்கிறது. அதற்கு முந்திய ஸூராவான அத்தியாயம் ‘அல்ஹஜ்’ மனிதர்களே!” என்று ஆரம்பித்து, இறுதியில் இறை நம்பிக்கை கொண்டோரே! ருகூஃ மற்றும் ஸுஜூத் செய்து உங்கள் இறைவனை வணங்குங்கள். மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு மனிதர்களுக்கும் நன்மை செய்யுங்கள்” (22: 77) என்று முடிவடைந்தது. ஸூரதுல் முஃமின் முதல் வசனத்தில் இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர்” (23: 1) என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது.

கத் அஃப்லஹல்லதீன ஆமனூ” (எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் வெற்றியடைந்து விட்டனர்) என்று வினைச்சொல் கையாடல் இல்லாமல், கத் அஃப்லஹல் முஃமினூன்” (இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர்) என்ற பெயர்ச் சொல்லை ஸூரா கையாண்டுள்ளது. அரபு மொழியில் வினைச்சொல் தற்காலிகமானதொன்றை சுட்டுகிறது. ஆனால், பெயர்ச்சொல் மொழி ரீதியாக நிரந்தரமானதொன்றாகக் கருதப்படுகிறது. பெயர்ச் சொல்லுக்கு இறந்த காலமோ நிகழ்காலமோ எதிர்காலமோ இல்லை. எனவே, இவர்களது இறை நம்பிக்கை காலத்தை வென்று எப்போதும் நிரந்தரமானதாக உள்ளது. இறைநம்பிக்கை பொதுவாக சிலபோது அதிகரிக்கவும் மற்றும் சிலபோது குறையவும் செய்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்களில் அது நிரந்தரமாக எந்த மாறுதலுமின்றி நிலைபெற்றிருக்கிறது. அத்தகைய முக்கிய அம்சங்கள்தான் இந்த ஸூராவின் ஆரம்ப வசனங்களில் எடுத்தியம்பப்படுகின்றன.

ஸூராவின் முதல் வசனத்திலுள்ள ஃபல்லாஹ்” என்ற சொல் நிலத்தைப் பண்படுத்துவதற்கும்  பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை அச்சொல் அறுவடையையும் குறிக்கிறது. ஒரு விவசாய நிலத்தைப் பண்படுத்துவது வெற்றிக்கான முதல் அடையாளமாகும். அதன் பிறகு விதை தூவல், பசளையிடல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல் போன்ற அனைத்து முயற்சிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும்போது அறுவடை வெற்றியளிக்கிறது. அவ்வாறுதான் ஓர் இறை

நம்பிக்கையாளர் இந்த ஸூராவில் வலியுறுத்தப்படும் விடயங்களின்பால் கவனம் செலுத்தும்போது ஈருலகிலும் வெற்றிவாகை சுடிக் கொள்கிறார். இந்தப் பண்புகள் தனி மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் மனித வாழ்வுக்கும் அளப்பரிய நன்மைகளைக் கொண்டு வருகின்றன. மேலும், இங்கு வெற்றி என்பது தனி நபர்கள் மற்றும் சமூகத்தின் வெற்றியைக் குறிக்கும்.

ஆன்மிகப் பக்குவம்

“அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சமுடையவர்களாக இருப்பார்கள்.” (23: 2) இது வெற்றியாளர்களின் முதல் பண்பாகும். அவர்கள் குறிப்பாக தொழுகைக்கு வரும்போது ‘குஷூ’ உள்ளவர்களாவர். ‘கஷஅ’ என்பது தசைகள் செயலிழந்து போகும் அளவுக்கு ஏற்படும் அச்சமும் பீதியுமாகும். எனினும், இச்சொல்லுக்கு அடங்கிப் போதல், குனிதல், அடக்கத்தையும் பணிவையும் வெளிப்படுத்துதல் போன்ற கருத்துக்களும் உள்ளன. உள்ளமும் உடலும் குஷூவை மேற்கொள்ள வேண்டும். குஷூ உள்ளத்தில் நிலையாக இருந்தாலும் உறுப்புக்களிலும் அதன் தாக்கம் செல்வாக்குச் செலுத்த வேண்டும். இயல்பாகவே தன் எஜமானனுக்கு முன்னால் அடியானின் பார்வை சிரம்பணியும் இடத்தை நோக்கிச் செல்கிறது; தலை தாழ்கிறது; உள்ளம் அச்சத்தையும் அமைதியையும் அடைகிறது; குரல் பணிந்து விடுகிறது; கைகளும் கால்களும் கலந்து விடுகின்றன. இவ்வாறு ‘இறைவனுக்கு முன்னால் நிற்கிறேன்’ என்ற உணர்வு நாடி நரம்புகளிலெல்லாம் இழையோடுகிறது. தங்களது இறைவனின் மகத்துவத்தையும் திருமுகத்தையும் தவிர வேறெந்த அம்சங்களின்பாலும் கவனம் திசை திரும்புவதில்லை. அவனது சந்நிதானத்திற்கு முன்னால் தங்களைச் சூழவுள்ள உலகம் முற்றாக மறந்து விடுகிறது.

தொழுகை என்பது மகிழ்ச்சியும் கவலையும் இரண்டறக் கலந்தது. ஒரு புறம் அல்லாஹ்வுடன் உரையாடுவதில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அமைதியும் தழுவிக் கொள்கிறது. மறுபுறம், ‘அல்லாஹ்வுடன் உறவை வளர்ப்பதில் குறை வைத்துக் கொண்டிருக்கிறேனே’ என்ற பயமும் கவலையும் தாண்டவமாடுகின்றன.

தொழுகையில் உள்ளச்சம் ஏற்பட வேண்டுமென்றால், தொழுகையாளியின் உள்ளம் தொழுகைக்கென தயாராக வேண்டும். மற்ற வேலைகளில் இருந்து விடுபட்டு தொழுகையில் ஈடுபாடும் ஆர்வமும் கொள்ள வேண்டும். ஏனைய பணிகளை விட தொழுகைக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தொழுகை அவருக்கு மன நிறைவையும் கண்குளிர்ச்சியையும் அளிக்கும். “எனது கண்குளிர்ச்சி தொழுகையில் அமைந்துள்ளது” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்னத் அஹமத்) 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “பிலாலே! நீர் தொழுகையின் அறிவிப்புச் செய்து நாங்கள் அதை நிறைவேற்றுவதன் மூலம் எங்களை இளைப்பாறச் செய்வீராக” என்று கூறுவார்கள். (அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்)

“வீணானவற்றிலிருந்து அவர்கள் விலகியிருப்பார்கள்” (23: 3) என்பது அவர்களது மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு ஸூராவில் அல்லாஹ் கூறுகிறான்:

“அளவற்ற அருளாளனின் அடியார்களான அவர்கள் வீணானதில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவ்வாறு வீண் கேளிக்கைகளைக் கடந்து செல்ல நேர்ந்தாலும் கண்ணியமாக கடந்து சென்று விடுவார்கள்.” (25: 72)

பயனற்ற, அவசியமற்ற, பொருத்தமில்லாத வீணான செயல்கள் அனைத்தும் ‘லக்வ்’ என்பதில் அடங்கும். இலாபம் தராதவை, பயனளிக்காதவை, நன்மையைக் கொண்டு வராதவை, நல்ல நோக்கங்கள் அற்றவை, உண்மையான தேவை இல்லாதவை ஆகிய அனைத்து சொற்களும் செயல்களும் வீணானவையாகும். இணை கற்பித்தலும் பாவங்களும் அல்லாஹ்விடமிருந்து தடையுத்தரவு வந்தவையும் வீணானவையே. சில விடயங்கள் மறுமைக்குப் பயனளிக்கா விட்டாலும் உலகத்தில் பயன்பாட்டை ஈட்டித் தரும். ஆனால், வீணானவை என்பது உலகத்திலோ அல்லது மறுமையிலோ எந்த நல்ல விளைவையும் தராதவையாகும்.

மனிதனுடைய நேரமும் காலமும் வளங்களும் வரையறுக்கப்பட்டவையாக இருப்பதால் அவை தனக்கும் மனித சமூகத்திற்கும் தான் வாழும் நாட்டுக்கும் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படலாம். ஆனால், ஒருவரின் இறைநம்பிக்கையானது அவற்றையெல்லாம் தனக்கும் மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் விருத்திக்கும் துணை செய்யும் விதத்தில் கையாளப்பட வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

ஒரு நல்ல அழைப்பாளர் எப்போதும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் பற்றி மிகுந்த அக்கறையோடும் விழிப்புணர்வோடும் இருப்பார். அவருக்கு இந்த உலக வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பெறுமதியானது என்பதால் நல்ல செயல்களிலும் நற்பணிகளிலும் மாத்திரமே காலத்தைக் கழிப்பார். விளையாட்டுக்களை தேர்ந்தெடுப்பதில்கூட அவர் மிகக் கவனமாக சிந்தித்து தனது இலட்சியங்களுக்குத் தடையாக அமைகின்றவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்வார்.

சுவர்க்கத்தில் இருக்கின்ற ஒரு பாக்கியத்தை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

“அதில் அவர்கள் வீணான எவற்றையும் செவியுற மாட்டார்கள்.” (88: 11)

ஒழுக்க விழுமியங்களும் சமூக நடத்தைகளும்

“மேலும், அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றுவார்கள்.” (23: 4) இதனை இன்னும் நுணுக்கமாக இப்படி மொழிபெயர்க்கலாம்: அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்தும் செயல்களில் தொடராக முனைப்போடு ஈடுபடுவார்கள். ஏனெனில், யஃதூனஸ் ஸகாத்” (ஸகாத் கொடுக்கின்றவர்கள்) என்று கூறப்படவில்லை. மாறாக, லிஸ்ஸகாதி ஃபாஇலூன்” (ஸகாத்தின் நெறிமுறைப்படி செயற்படுகின்றவர்கள்) என்றே கூறப்பட்டுள்ளது. ஸகாத் என்ற சொல் விரிவான பொருளைக் கொண்டுள்ளது. இது பொருளாதாரக் கடமையான ஸகாத்தையும் குறிக்கும் உளத் தூய்மையையும் குறிக்கும். ஸகாத் கொடுப்பனவுகூட ஒருவரின் உள்ளத்தையும் அவரது பொருளையும் தூய்மைப்படுத்துகிறது. ஸகாத் கொடுப்பனவு மனித உள்ளத்திலுள்ள செல்வம் மீதான பற்றை அகற்றி, பரந்து விரிந்த சமூகப் பார்வையையும் தாராளத் தன்மையையும் தோற்றுவித்து விடுகிறது. “எவர்கள் தங்களது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றனரோ அவர்களே வெற்றியாளர்கள்.” (59: 9)

அதேவேளை தங்களது நடத்தைகளைத் தூய்மைப்படுத்தல், வார்த்தைகளைத் தூய்மைப்படுத்தல், வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்தல் என்று பொருள் விரிந்து செல்லும்.

“தன்னைத் தூய்மைப்படுத்தி தனது இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து தொழுதவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்.” (87: 14 – 15)

“அதை தூய்மைப்படுத்தியவர் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார். அதை களங்கப்படுத்தியவர் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்.” (91: 9 – 10) 

இந்த இரண்டு வசனங்களும் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தல் பற்றி மட்டுமே பேசுகின்றன. ஆனால், நாம் அலசும் வசனம் தன்னைத் தூய்மைப்படுத்தல், சமூகத்தைத் தூய்மைப்படுத்தல், நாட்டைத் தூய்மைப்படுத்தல் முதலான செயல்களிலும் பணிகளிலும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எனவே, தன்னை மாத்திரம் தூய்மைப்படுத்துவதோடு அவர் சுருங்கிக் கொள்வதில்லை. தன்னைச் சுழவுள்ள மற்ற மனிதர்கள், கிராமம், சமூகம், நாடு என்று அவரது தூய்மைப்படுத்தும் பணி விசாலமாகி விடும்.

மேலும், அவர்கள் தனது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.” (23: 5) அதாவது தமது கற்பை தடைசெய்யப்பட்ட வழிகளிலிருந்து தற்காத்துக் கொள்வார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள விபசாரம், ஒரு பாலுறவு போன்ற தீமைகளில் வீழ மாட்டார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, இவர்களிடம் உறவு கொள்வதினால் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுவோர் அல்லர். இதன் பின்னரும் எவர்கள் வேறு தவறான வழியைத் தேடுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறியவர்களாவர்.”    (23: 6 -7) 

அல்குர்ஆன் இங்கு ஆரோக்கியமும் தூய்மையும் மகிழ்ச்சியும் மிகுந்த வாழ்வின் விதையைப் பயிரிட வேண்டிய சரியான விளைநிலத்தை அடையாளப்படுத்துகிறது. ஒருவரின் ஆன்மாவிலும் அவரது குடும்பத்திலும் அவர் வாழும் சமூகத்திலும் தூய்மையைப் பேணுவதற்கான இன்னொரு முக்கிய வழிகாட்டல் இதுவாகும். தனி மனிதர்களையும் குடும்பங்களையும் மொத்த சமூகத்தையும் வரையறைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்து அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் மாத்திரம் அவனது விருப்பு – வெறுப்புக்களையும் ஆசாபாசங்களையும் நெறிப்படுத்துவதற்கான போதனைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

எப்போது ஒரு சமூகத்தினர் ஆசாபாசங்களின் எல்லைகளைத் தாண்டி மனம் போன போக்கில் செல்கின்றனரோ அத்தகையோர் மனிதாபிமான அடிப்படை விழுமியங்களை இழந்து, இழிவடைந்து தாழ்ந்த நிலைக்குச் செல்வர். மனிதர்கள் தங்களது மனோஇச்சைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கப் பண்புகளைப் பேணி வாழும்போதுதான் அவர்களது கண்ணியமும் அந்தஸ்தும் உயர்ந்து செல்கின்றன.

“மேலும், அவர்கள் தமது அமானிதங்களையும் தமது வாக்குறுதிகளையும் பேணுவார்கள்.” (23: 8) இங்கு ‘அமானத்’ என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ‘அம்ன்’ எனும் சொல்லிலிருந்து உருவானது. அதன் பொருள் பாதுகாப்பு, அமைதி என்பதாகும். ஒருவர் தனது உடைமைகளை இன்னொருவரிடம் ஒப்படைப்பதன் மூலம் அமைதியடைந்து, பாதுகாப்பாக இருக்கிறார் என்பது பொருளாகும். இன்னொருவரது பொருளை அமானிதமாகப் பெற்றுள்ளவர் தனது சொந்தப் பொருளைப் பாதுகாப்பதை விட அமானிதமாகப் பெற்றுள்ளதைப் பாதுகாக்க வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவரிடம் நம்பி ஏதேனுமொன்றை ஒப்படைத்தால் அதில் மோசடி செய்வான்.” (அல்புகாரி, முஸ்லிம்)

அமானிதங்களில் அல்லாஹ் மனிதனிடம் ஒப்படைத்துள்ளவை, பிற மனிதர்கள் ஒருவரிடம் ஒப்படைத்தவை, சமூகம் ஒருவரிடம் ஒப்படைத்தவை ஆகிய அனைத்தும் அடங்கும். ஒரு பள்ளிவாசல் நிர்வாக சபையினர் முழு ஊர் மக்களையும் அறிவு ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் பயிற்றுவிக்கும் பொறுப்பை அமானிதமாக சுமந்துள்ளனர். ஒரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் மொத்த சமூகத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவசியமான ஆளுமைகளை உருவாக்கும் பொறுப்பை அமானிதமாகப் பெற்றுள்ளனர்.

வாக்குறுதிகளும் ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் இவ்வாறுதான் அமைகின்றன. மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்கள். ஏனைய அனைத்து ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் இதனூடாகவே தோற்றம் பெறுகின்றன. இரு மனிதர்களுக்கிடையில் இரு சமூகங்களுக்கிடையில் இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொண்ட வாக்குறுதிகளும் உடன்படிக்கைகளும் பேணப்பட வேண்டியவையாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகமான உரைகளில் “அமானிதங்களைப் பேணுகின்ற பண்பு இல்லாதவரிடம் இறை நம்பிக்கை இல்லை. கொடுத்த வாக்குறுதிக்கும் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கின்ற பண்பு இல்லாதவரிடம் மார்க்கம் இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்ததேயில்லை. (அல்பைஹகீ)

ஆன்மிக மேம்பாட்டில் மற்றொரு படித்தரம்

“மேலும், அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்.” (23: 9) ஆரம்பத்தில் ‘குஷூ’ பற்றி சொல்லும்போது தொழுகை என்று ஒருமையிலும் இங்கு தொழுகைகளைப் பேணுவார்கள்” என்று பன்மையிலும் வந்துள்ளது. 

அங்கு தொழுகை என்ற செயல் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வேளைத் தொழுகையும் தனித் தனியாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. தொழுகையின் நேரங்கள், அதன் ஒழுங்குமுறைகள், அதன் கூறுகள், அனைத்தையும் அழகுறப் பேணித் தொழுவார்கள். தொழுகையின் உட்பகுதிகள் அனைத்தையும் முழுமையான மனநிறைவுடனும் நிதானமாகவும் நிறைவேற்றுவார்கள். ஒரு சுமையை இறக்கி விட்டது போல் வேகமாக தொழுது விட்டு ஓட மாட்டார்கள். தொழுகையில் அல்குர்ஆனையும் இறைநினைவு வசனங்களையும் நிதானமாக ஓதுவார்கள். ‘அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்கிறோம்’ என்ற மனக் குவிப்புடன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி தொழுகையில் ஈடுபடுவார்கள். (தஃப்ஹீமுல் குர்ஆன்)

இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?” என்று கேட்டேன். அவர்கள் “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)

வெற்றிக்குரிய இறைநம்பிக்கையாளர்களின் பாராட்டத் தகுந்த பண்புகளாக அல்லாஹ் முதலில் தொழுகையைக் கூறி அதே தொழுகையைக் கொண்டே நிறைவு செய்கிறான். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது குணம் எப்படி இருந்தது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் அல்குர்ஆனாகவே இருந்தது” என்று கூறிவிட்டு, “இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர்” என்ற வசனம் தொடங்கி, அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்” எனும் வசனம் வரை ஓதிக் காட்டினார்கள். பிறகு இவ்வாறுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் இருந்தது” என்றும் கூறினார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாஈ, அல்ஹாகிம்)

‘தொழுகைகள்’ என்று பன்மையில் கூறப்பட்டிருப்பதற்கு மற்றொரு விளக்கம் அவர்கள் ஃபர்ழான தொழுகைகளை நஃபிலான தொழுகைகள் மூலம் பேணிப் பாதுகாப்பார்கள்” என்பதாகும்.

வெற்றிக்கான பரிசுஃபிர்தவ்ஸ்

“அவர்கள்தாம் உரிமையாளர்களாவர். ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தின் உரிமையை அவர்கள் பெறுவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.” (23: 10-11) 

அவர்களது முயற்சிகளும் முன்னெடுப்புக்களும் பயனளித்தன. அவர்களது அறுவடை முழு வெற்றியைத் தழுவிக் கொண்டது. பிறருக்கெனத் தயார் செய்யப்பட்ட சொர்க்க இன்பங்களைக் கூட இவர்கள் வாரிசுச் சொத்தாக உடைமையாக்கிக் கொண்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களில் எவருக்கும் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடம், நரகத்தில் ஒரு வசிப்பிடம் என இரு வசிப்பிடங்கள் இல்லாமலில்லை. ஒருவர் மரணித்து அவர் நரகம் சென்று விட்டால் அவரது சுவர்க்க வசிப்பிடத்தை சுவர்க்கவாசிகள் உடைமையாக்கிக் கொள்வார்கள். அதுவே ‘அவர்கள்தாம் உரிமையாளர்களாவர்’ (23: 10) என்ற வசனத்தின் கருத்தாகும்.” (இப்னுமாஜா)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தின் படித்தரத்தையே கேளுங்கள். ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமுமாகும். இன்னும் அதிலிருந்தே சுவர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன. அதற்கு மேலே அளவற்ற அருளாளனின் அரியணை இருக்கிறது.” (அல்புகாரி) 

அல்ஹஸனாத், ஜனவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *