சோர்வு நீங்க…

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் –

ஓர் இறை விசுவாசி தனது ஆன்மிக வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒரு முக்கியமான பிரச்சினைதான், அவரை அவ்வப்போது பீடிக்கின்ற சோர்வு நிலை. ரமழான் காலத்தில் இபாதத்களில் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் ஈடுபட்டவருக்கு இப்போது அவ்வாறு இருக்க முடியவில்லை. உம்ராவின்போதிருந்த சுறுசுறுப்பு ஊருக்கு திரும்பியதும் குறைந்து விடுகிறது. ஹஜ்ஜுக்கு சென்றிருந்தபோது காணப்பட்ட உத்வேகம் நாட்டுக்கு வந்ததும் மறைந்து விடுகிறது.
இது பலரும் அனுபவிக்கின்ற ஒரு பொதுவான பிரச்சினை. இதைத்தான் நாம் இங்கு சோர்வு நிலை என சுட்டிக்காட்டுகின்றோம். இது இயல்பானது. ஆனால், ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதல்ல. ஒரு முஃமின் என்றும் எப்போதும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இபாதத்களில் ஈடுபட வேண்டும். நன்மையான காரியங்களை தொய்வின்றித் தொடர வேண்டும். இதுவே வெற்றிக்கான வழி.

சோர்வடையாமல், சோம்பலில்லாமல் எமது ஆன்மிக வாழ்வை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளை சுருக்கமாக நோக்குவோம்.
எப்போதும் நாம் எமது ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், ஈமான் கூடிக் குறையக் கூடியதாகும். இதனால்தான் ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், “வாருங்கள் நாம் எமது ஈமானை புதுப்பித்துக் கொள்வோம்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அல்குர்ஆனும் முஃமின்களை விழித்து, “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ஈமான் கொள்ளுங்கள்” என பணிக்கின்றது.

சோர்வு களைந்து ஆர்வத்தோடு அமல்களில் ஈடுபடத் துணை புரியும் மற்றும் ஓர் அம்சம்தான் அறிவு. குறிப்பாக நல்லமல்களின் சிறப்புகளைக் கற்றல், அறிவை மேம்படுத்தும் அமர்வுகளில் பங்கேற்றல், கெட்ட சகவாசத்தை தவிர்த்தல், ஸாலிஹான நட்பை வளர்த்துக் கொள்ளல்… முதலான செயற்பாடுகளினூடாக எமது ஈமானைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

மரணத்தையும் மறுமையையும் அடிக்கடி நினைவுகூருதல், சுவன இன்பங்களை மனக்கண் முன் கொண்டு வருதல், நரகத்தின் பயங்கரங்களை எண்ணிப் பார்த்தல்… என்பன சோம்பலையும் சோர்வையும் போக்கி நல்லமல்களில் முனைப்போடு ஈடுபடுவதற்கு துணை நிற்கும்.

இவற்றோடு எமது ஆன்மிக வாழ்க்கையில் எப்போதும் நடுநிலையை கைக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மார்க்க விஷயங்களில் கடும் போக்கை கைக்கொள்வது காலப்போக்கில் மார்க்க விவகாரங்களில், இபாதத்களில் சோர்வையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.
மேலும் எம்மை அடிக்கடி சுயவிசாரணைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். அதனூடாக எமது குற்றம் குறைகளை அடையாளம் கண்டு உடனுக்குடன் அவற்றைக் களைய முடியும்.
எமது சுவனம் நோக்கிய இலட்சியப் பயணத்தை முழு வீச்சோடு தொடர்வதற்கு இவை சிறந்த வழிகள்.

சோர்வின்றி… சோம்பலின்றி ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இபாதத்களையும் நற்கருமங்களையும் தொடர்வதற்கு வல்ல ரஹ்மான் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

(அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக ‘வாரம் தோறும் ஒரு வாழ்க்கைப் பாடம்” எனும் தலைப்பில் தொடராக நிகழ்த்தி வரும் சிற்றுரையின் 31வது பகுதியின் சாராம்சமே இது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *