தேச நலனில் எமது கரங்கள் உயர்ந்தவையா? தாழ்ந்தவையா?

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)

விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறைதூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிம்பரில் நின்று கொண்டு தர்மம் செய்தல் குறித்தும் யாசிக்காது சுயமரியாதையுடன் வாழ்வது தொடர்பிலும் குறிப்பிட்டுவிட்டு, “தாழ்ந்த கையை விட உயர்ந்த கை மிகவும் மேலானது. இறைவழியில் செலவு செய்யும் கையே உயர்ந்த கை. தாழ்ந்த கை என்பது யாசிக்கும் கையாகும்” என விளக்கமளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்)

இறை வழியில் செலவு செய்தல் குறித்த ஆர்வமூட்டல் இந்த ஹதீஸில் முன்வைக்கப்படுவதோடு முன்னுதாரணமிக்க முஸ்லிம் சமுதாயத்தின் ஆளுமைப் பண்பும் தெளிவுபடுத்தப்படுகிறது. பொதுவாக இந்த ஹதீஸ் இறைவழியில் செலவு செய்தல் என்ற தலைப்பின் கீழ் ஹதீஸ் கிரந்தங்

களில் பதிவாகியுள்ளது. ஆனாலும், இவ்வகையான ஹதீஸ்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டியவை கடமைகளா? ஊரிமைகளா? என்ற விவாதத்திற்கான விளக்கத்தையும் தருகின்றன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை அறிவு ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பயிற்றுவிக்கிறார்கள். ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெறுமானங்களில் சிறு கீறலும் ஏற்படாத வண்ணம் வழிப்படுத்துகின்றார்கள். இவ்வகையில் மனித உள்ளங்கள் உலக ஆசை, உலக மோகம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கையான ஏவல்- விலக்கல்களையும் சமர்ப்பித்துள்ளார்கள். குறிப்பாக, மனித உரிமைகள் விவகாரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வலுவான வரையறைகளை விதித்ததோடு அவற்றைப் பெற்று வாழ்வதற்கான சட்ட ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நபித் தோழருக்கு இவ்வாறு அறிவுரை பகர்ந்தார்கள்:

“உமது உடலுக்கு நீர் ஆற்ற வேண்டிய உரிமை உண்டு. உமது கண்களுக்கு நீர் ஆற்ற வேண்டிய உரிமை உண்டு. உமது மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமை உண்டு. உமது விருந்தாளிக்கு நீர் ஆற்ற வேண்டிய உரிமை உண்டு.” (ஸஹீஹுல் புகாரி)

தனி மனிதன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தனது சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய உரிமைகள் அதிகமாக உள்ளன. இவ்வுரிமைகளை முழுமையாகப் பெற்று வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் முழு சுதந்திரம் உண்டு. உரிமைக் குரல் நசுக்கப்படுவதையும் அண்ணலார் வன்மையாகக் கண்டித்தார்கள். ஒரு முறை யூதர் ஒருவர் தன்னிடமிருந்து இரவலாகப் பெற்ற ஒட்டகத்தை குறித்த தினத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒப்படைக்கவில்லை என்பதற்காக அவர்களை வன்மையாகக் கண்டித்தார். அப்போது ஸஹாபாக்கள் அவரை அடிப்பதற்கு முனைந்தனர். உரிமைக் குரல் எழுப்புவதற்கு அவருக்கு உரிமை உண்டு” என்று உரைத்த நபிகளார் ஸஹாபாக்களை தடுத்து நிறுத்தினார்கள்.

நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்கள் உரிமைக் குரல் எழுப்பவும் உரிமைகளை முழுமையாகப் பெற்று வாழ்வதற்கும் எல்லோருக்கும் முழுச் சுதந்திரம் உண்டுஎன்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனாலும், ஒரு முஸ்லிம் தனி மனிதன் அல்லது முஸ்லிம் சமுதாயம் தனது உரிமைகள் குறித்து உரக்கப் பேசுவது போல கடமைகள் குறித்தும் பேச வேண்டும். அல்குர்ஆன் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற அதேவேளை கடமைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கின்றது. குடும்பக் குவலயத்தில் அமைதி ஆள வேண்டுமானால் கணவன்-மனைவி பரஸ்பரம் ஆற்ற வேண்டிய கடமைகள்-உரிமைகள் முழுமையாக அமுலுக்கு வர வேண்டும். குறிப்பாக, உரிமைகளை விட கடமைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அல்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது:

மனைவிமார் கணவன்மாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இருப்பது போல கணவன்மார் நல்ல முறையில் மனைவிமாருக்கு வழங்க வேண்டிய உரிமைகளும் இருக்கின்றன.”  (ஸூரா அல்பகரா: 226)

குடும்பவியலில் கடமைக்கு முதலிடம் கொடுக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதற்கான காரணத்தை கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் இஸ்லாம் எதிர்பார்க்கும் குடும்பம்” என்ற நூலில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்: கடமைகள் பண்பாடு சார்ந்தவை; உரிமைகள் ஆசைகள் சார்ந்தவை.” குடும்பத் தகராறுகளுக்கெல்லாம் மூல காரணமாக அமைவது கணவன்- மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் என்ற தரப்பினர் நமக்கு வந்து சேர வேண்டிய உரிமைகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதும் தமது கடமைகள் குறித்து அலட்சிய மனப்பான்மையுடன் நடந்து கொள்வதுமேயாகும். வழங்கும் உயர்ந்த கரங்களாக இருப்பதற்கு பகரமாக அனைவரது கரங்களும் தாழ்ந்தவையாக மாறி விட்டதனால் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுக்கின்றன.

ஆசிரியர் சமூகத்திற்கும் மாணவர் சமூகத்திற்கும் இடையேயான தொடர்பாடல் ஆரோக்கியம் இழந்து காணப்படுவதற்கும் முதன்மையான காரணம் கடமைகள் புறந்தள்ளப்பட்டு உரிமைகள் முதன்மைப்படுத்தப்படுகின்ற நிலையாகும். ஆசிரியர் ஒருவர் தனது மாணாக்கர்களுக்கு புகட்ட வேண்டிய கல்வி அறிவை, பண்பாட்டுப் பெறுமானங்களை, வாழ்வியல் தத்துவங்களை வாழ்வாலும் வாக்காலும் அள்ளி வழங்கும் உயர்ந்த கரமாக மாறினால் மாணவர்கள் மரியாதைப் பண்பு எனும் உரிமையை அவருக்கு வழங்குவர். 

மாணவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய உரிமைகளை மட்டும் எதிர்பார்க்கும் தாழ்ந்த கரங்களாக அவரது கரங்கள் இருந்தால் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க மாட்டார்கள். இவ்வாறே மாணவர்களும் சிந்திக்க வேண்டும். ஆசிரியர் சமூகத்திற்கு நான் செய்திட வேண்டிய தார்மிகக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி உயர்ந்த கரமாக மாறி விட்டால் ஆசிரியர் தரப்பிலிருந்து அன்பு, கருணை, பரிவு, அர்ப்பணம் முதலான அனைத்து வகையான உரிமைகளும் என்னை வந்து சேரும்” என மாணவன் ஒருவன் அகலமாக சிந்திக்க வேண்டும். இதனையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“எங்களில் சிறியோருக்கு இரக்கம் காட்டாதவரும் மூத்தவரின் சிறப்பை நன்கு உணர்ந்து கொள்ளாதவரும் எம்மைச் சார்ந்தவரல்ல.” (அபூதாவூத், திர்மிதி)

நாம் வாழும் உலகில் மிகை நுகர்வுக் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துகின்றது. நாம் பார்க்கின்ற,கேட்கின்ற அனைத்துச்  செய்திகளும்  சிந்தனைகளும்  வாழ்வியல்  தத்துவங்களும் அடுத்த மனிதர்களிடம் இருந்து முழுமையாக உரிமைகளைப் பெற்று அல்லது பறித்து வாழ வேண்டுமென்ற மிருக உணர்வையே மனிதர்களிடம் வளர்க்கின்றன. மனித சமுதாயத்திற்கு கொடுத்து வாழ வேண்டும் என்ற மனிதநேய உணர்வை வளர்ப்பது குறைவு. பாட்டாளி மக்களுக்காக குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்களாக இருக்கலாம் அல்லது மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொழிற்படுகின்ற நிறுவனங்களாக இருக்கலாம். இவை அனைத்தும் மக்கள் தாம் வாழும் பிரதேசத்திற்காக ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றிய சிந்தனைகளை வளர்ப்பதில்லை. பாட்டாளி மக்களின் சேம நலனுக்காக புரட்சிக் கொடி தூக்குகின்ற தொழிற்சங்கங்களின் கோஷமும் சுலோகமும் பாட்டாளிகளின் உரிமைகள் குறித்த மகுட வாசகத்தையே சுமந்துள்ளன. தேச நலனில் பாட்டாளி மக்களின் பங்களிப்பு குறித்து தொழிற்சங்கங்கள் உரத்துப் பேசுவதில்லை. முதலாளிமார்களுக்கு எதிரான எதிர்வினைகளையே அவை தூண்டி விடுகின்றன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் புகட்டுகின்ற சமநிலைக் கோட்பாட்டில் இருந்து ஒரு சாண் அளவுகூட நாம் விலகிச் செல்லக் கூடாது. அதாவது உரிமைக் குரல் எழுப்பி உரிமைகளைப் பெற்றுவிட நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது கடமைகளை மறந்து செயற்படலாகாது. கடமைகளைச் செய்து விட்டு உரிமைகளைப் பெற முயற்சிக்கின்ற சிறந்த சமுதாயமாக வாழ வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் முஸ்லிம் சமுதாயம் தனது உரிமைகளை வென்றெடுப்பதில் விழிப்புணர்வுடன் தொழிற்படுவது இஸ்லாமிய மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடல்ல. ஆயினும், தேசிய நலனில் தங்களது பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு உரிமைகளுக்காக மட்டும் முழு வீச்சுடன் பாய்ந்து செல்வது உண்டு வாழ்வதை மட்டும் இலக்காகக் கொண்டுள்ள ஒரு வேட்டை மிருகத்தின் நிலைக்கு ஒப்பாகாதா? 

எமக்கெதிரான சவால்களை வெற்றி கொண்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அறிவார்ந்த ஒரே வழி எமது கரங்கள் வழங்குகின்ற உயர்ந்த கரங்களாக ஆவதுதான்.

எமது முன்னோர்கள் சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் காலனித்துவவாதிகளின் ஆக்கிரமிப்பின்போதும் சுதந்திரத்தின் பின்னரான காலப் பிரிவிலும் தேசிய நலனில் பங்களிப்பை வழங்குகின்ற உயர்ந்த கரங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தமக்குத் தேவையானவற்றை உரிமைக் குரல் எழுப்பி, ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தி, உண்ணாவிரதமிருந்து பெற்றதாக சரித்திரம் இல்லை. முஸ்லிம்கள் அன்று பல்வேறு துறைகளில் இந்தத் தேசத்திற்கு பங்களிப்பை வழங்கினர்.

அக்கால முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களுடனும் சிங்கள மக்களுடனும் சகவாழ்வை மேற்கொண்டனர். போர்த்துக்கேயரை எதிர்த்து நின்று போராடுவதில் சிங்கள மன்னர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்த்தனர். 17 கப்பல்களைக் கொண்ட கப்பல் படை, ஓர் இராணுவப் பிரிவு, ஏராளமான பீரங்கிகள் சகிதம் வந்த போர்த்துக்கேயரை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். கோட்டை இராச்சிய அரசன் 9ஆம் தர்ம பராக்கிரமபாகு பணிந்து போர்த்துக்கேயருடன் சமாதான ஒப்பந்தம் செய்ய முன்வந்தபோது முஸ்லிம்கள் அவர்களுடன் எதிர்த்துப் போராடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். தெற்கு முஸ்லிம்கள் சீதாவாக்கை இராஜ்ஜியத்தின் மன்னன் மாயாதுன்னையின் தலைமையில் போராடினர். கிழக்கு முஸ்லிம்கள் குஞ்சிலி மரிக்கார் தலைமையில் போராடினர்.

தேசிய நலனில் அக்கால முஸ்லிம்கள் உதவும் கரங்களாக இருந்தார்கள் என்பதை கீழ்வரும் வரலாற்றுக் குறிப்பு எடுத்துரைக்கின்றது:

மிக ஆரம்ப காலம் முதலே சிங்கள மன்னர்களின் இராணுவப் படைகளாக முஸ்லிம்கள் செயற்பட்டு வந்துள்ளனர். அத்துறையில் உயர்ந்த பதவிகளையும் வகித்து வந்துள்ளனர். சீதாவாக்கை, கோட்டை, கண்டி இராச்சியம் முதலானவற்றைப் பாதுகாக்க அவர்கள் போராடினார்கள். கண்டி இராச்சியத்தில் தரமான ஓர் இராணுவப் படையை அவர்கள் உருவாக்கினார்கள். குறிப்பாக, கண்டி இராச்சியத்தின் கடைசிக் காலப் பகுதியில் இதனை நாம் காணலாம். அப்போது 181,400 மலபாரியன்கள், 250 சோனகர்கள், 200 மலாயர்களுக்கு கண்டியில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.” (கலாநிதி லோனா தேவராஜா: இலங்கை முஸ்லிம்கள்)இவ்வாறு வர்த்தகத் துறை மற்றும் மருத்துவத் துறைகளில் எல்லாம் முஸ்லிம்கள் தமது காத்திரமான பங்களிப்பை வழங்கினர். உள்நாட்டு வர்த்தகத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு, ஏற்றுமதி- இறக்குமதிப் பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு, முஸ்லிம்கள் ஆரம்பித்து வைத்து அறிமுகப்படுத்திய வர்த்தக முயற்சிகள், முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சமூக, பொருளாதார விளைவுகள் என்ற தலைப்புக்களின் கீழ் இவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

1806ஆம் ஆண்டு மீரா லெப்பை மேஸ்திரியார் மூலிகைகள் பற்றிய ஆய்வை நூலுருவில் கொண்டு வந்தார். 1810ஆம் ஆண்டு இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு திரு. அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் என்ற ஆங்கிலேய அதிகாரி தாவரவியல் பூங்கா ஒன்றை நிறுவுமாறு அக்கால பிரித்தானிய அரசுக்கு ஆலோசனை வழங்கினார். அக்கால மன்னர்கள் முஸ்லிம் வைத்தியர்களுக்கு நிலமே, மெனிகே என்ற கௌரவப் பெயர்களை சுட்டினர்.

கோபால முஸ்லிம் வைத்தியப் பரம்பரை பற்றி இங்கு சிறப்பாக நாம் குறிப்பிட முடியும். எச்.ஸீ.பீ. பெல் என்பவர் 1892இல் வாழ்ந்த கட்டபெரியாவைச் சேர்ந்த கோபால முஸ்லிம் வைத்தியர்கள் இஸ்லாமிய உலகின் மருத்துவ மாமேதைகளான இப்னு அலி ஸீனா, இமாம் ராஸி போன்றோரது மருத்துவ நூல்களை வைத்திருந்ததாக குறிப்பிடுகின்றார்.

அக்கால முஸ்லிம் தனி மனிதர்களின் மனநிலையில் நாட்டுப்பற்றும் தேச நலனில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற விழுமியமும் நிரம்பிக் காணப்பட்டன. எனவே, அக்கால முஸ்லிம் தாய் ஏகாதிபத்திய இராணுவ வீரர்களிடம் இருந்து கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனைப் பாதுகாத்தாள்.மன்னனைத் தேடி வந்தவனிடம் காட்டிக் கொடுக்காமல் மௌனம் சாதித்தாள். கோபமுற்ற அந்த வீரன் அந்தத் தாயைக் கொன்றான். இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைப் பார்த்து மா ரெகபு லே” (என்னைக் காத்த ரத்தமே) என தனது அனுதாபத்தைத் தெரிவித்து விட்டு ஊவா மாகாணத்திலுள்ள பங்கரகம்மன” என்ற கிராமத்தை முஸ்லிம்களுக்கு அவன் வழங்கினான்.

நமது பாவனையில் உள்ள ஆயிரம் ரூபா நோட்டில் ஒரு யானைப் பாகனை நாம் காண முடியும். அவர் ஒரு முஸ்லிம். அவர் ஏறாவூரைச் சேர்ந்த உமர் லெப்பை பணிக்கர். பணிக்கர் என்றால் யானையைப் பிடித்துக் கட்டுபவருக்கு சொல்லப்படும் பெயராகும். அவர் ஒரு யானையை தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்தார். அது மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்து விட்டது. மீண்டும் அதனைப் பிடித்து ஒப்படைத்தார். அவரது நினைவாக அவரது உருவப் படம் அந்த நோட்டில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை இவ்விடயத்தில் நிரல்படுத்தலாம். அக்கால முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களுடன் கைகோர்த்து காலனித்துவவாதிகளை துரத்தியடிப்பதற்காகப் போராடியமையால் அந்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கான கிராம உருவாக்கங்களை மேற்கொண்டனர்.

இன்று கண்டியிலும் அக்குரணையிலும் முஸ்லிம்கள் வாழ்வதானது இதற்கு சிறந்த சான்றாதாரமாகும். இவ்வாறே நமது முஸ்லிம் தேசியத் தலைவர்கள் சுதந்திரத்தின் பின்னர் நாட்டுப்பற்றுடன் தேச நலன்களில் பங்கெடுத்தனர். இன்று நாம் இந்த நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் அவர்கள் பெற்றுத் தந்தவையே.எங்களுக்கென்று தனியான முஸ்லிம் அரசினர் பாடசாலைகள் கிடைத்தன. ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்ககப்பட்டன. இவற்றையெல்லாம் அவர்கள் எதிர்வினை

களைக் காட்டி, எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தி, உண்ணாவிரதம் இருந்து, கோஷங்களை எழுப்பி பெற்றவை அல்ல. மாறாக, தேச நலனை நோக்கி அவர்களின் கரங்கள் நீண்டன. அதற்கு மாற்றீடாக உரிமைகள் கிடைத்தன. தமது அறிவாற்றலையும் அரசியலறிவையும் தேச நலனுக்காக வாரி வழங்கினர். அரசாங்கத்தில் உயர் பதவிகள் கிடைத்தன. தேசிய கட்சிகளின் உயர் பீடங்களில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. அவர்கள் தனி அலகு கேட்டு போராடியதாக வரலாறு இல்லை. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தனது தார்மிகக் கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கினார்கள். உரிமைகள் தானாக வந்து சேர்ந்தன.

முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை விட கடமைகளுக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பது நபித்துவ வழிகாட்டலாகும். நபி (ஸல்லல்லருஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“எனது மரணத்திற்குப் பின்னர் தன்னலமிக்க ஆட்சியாளர்கள் உருவாகுவார்கள். அவர்களது சில விடயங்களை நீங்கள் நிராகரிப்பீர்கள்.” அப்போது ஸஹாபாக்கள் அவ்வேளையில் நாம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என நீங்கள் ஏவுகின்றீர்கள்?” எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள் “உங்களுக்குரிய கடமைகளை (செவிமடுத்து, கட்டுப்படுதல்) நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

எனவே, எமது கரங்கள் எப்போதும் உரிமைகளுக்காக நீளுகின்ற தாழ்ந்த கரங்களாக அமையாமல், வாரி வாரி வழங்குகின்ற உயர்ந்த கரங்களாக அமைய வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக! 

அல்ஹஸனாத், ஜனவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *