நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன?

மௌலான ஹபீஸுர் ரஹ்மான் உமரி மதனி

இன்றைய உலக முஸ்லிம்களின் சூழ்நிலைகளைப் பார்த்து, “நாம் முஸ்லிம்கள்தானே! நம் மீது ஏன் இத்தனை சோதனைகள்?” என்று முஸ்லிம்களில் பலர் அங்கலாய்க்கின்றனர். நம்மை அல்லாஹ் பாதுகாப்பான் என்றல்லவா கூறுகின்றான்; இருந்தும் ஏன் இத்தனை சோதனைகள். ஆம்! இன்றைக்கு இந்த வினா முஸ்லிம்கள் பலரின் உள்ளங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்று நம்மில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கின்றோம்? நாம் ஒவ்வொருவரும் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்ததனால் நாம் முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அப்படி இல்லை. கலிமாவைப் பொருள் புரிந்து நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமா என்று நாம் என்றாவது சிந்தித்திருப்போமா? அப்படியே பொருள் புரிந்து நடக்கும் முஸ்லிம்களும் சரியாக இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோமா? என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். நம்மைப் பற்றி நாம்தாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

சோதனைகளைக் கடந்தால்தான் நமக்கு வெற்றி கிடைக்கும். சோதனைகள் என்பது சில மணித்துளிகள் போன்றது. வெற்றி என்பது நிரந்தரமானது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை நீங்கள் திருப்பினாலும் நமக்கு இந்த விஷயங்கள்தான் தெளிவுபடுத்தப்படுகின்றன.

நாம் சோதனைகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும். நமக்கு வரலாறு உணர்த்தும் இன்னொரு விஷயம் என்னவென்றால், மக்கள் சேவைகளை அதிகமாக நாம் செய்ய வேண்டும். மக்கள் சேவை என்று சொன்னவுடன் அறிஞர் பெருமக்கள் சிலர் முஸ்லிம்களுக்குத்தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியில்லை. குர்பானி இறைச்சியையும் அகீகா இறைச்சியையும்கூட முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.

மக்கள் சேவை என்பது ஒட்டுமொத்த உலக மக்களுக்கும்தான் செய்ய வேண்டும். இதற்கு வரலாற்றிலிருந்து நமக்குப் படிப்பினை கிடைக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மக்கா கால கட்டம் என்பது மிகவும் வேதனைக்குரியது. அந்தக் கால கட்டத்தில் இஸ்லாத்தைத் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வளவு வேதனைப்படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அப்பொழுது சிலர் அபிசீனியாவிற்கும் மதீனாவிற்கும் இன்னும் சில பகுதிகளுக்கும் நாடு துறந்து சென்றார்கள். அப்பொழுது அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் நாடு துறக்க முற்பட்டு அவரும் தயாரானார். அப்பொழுது அவர் நாடு துறந்து செல்லக் கூடாது என்று பலர் வந்து அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். அதில் இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் முஸ்லிமல்லாதவர்களே அதிகம். இது எப்படி நடந்தது?

இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்படும் போதுகூட அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை எதிரிகள் எதுவுமே செய்யவில்லை. அவருக்குச் சற்றும் தொல்லைகள் தரவில்லை. ஏன்? அவரின் ஙே்வை அந்த மக்களுக்குத் தேவைப்பட்டது. அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, சகலருக்கும் பல உதவிகள் செய்து வந்தார். இவரின் வாழ்வைப் புரட்டிப் பாருங்கள். அப்படியே இன்றைய சுழ்நிலைகளையும் சற்று அசைபோட்டுப் பாருங்கள். நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குப் புரியும்.

இன்னும் ஒரு தகவல் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்றது. அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) போலவே உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் எதிரிகளால் தொல்லைகளுக்கு ஆளாகவில்லை. ஏன் தெரியுமா? இறைநம்பிக்கை நிறைந்த வீரம் அவரிடம் இருந்தது. அவரைக் கண்டால் எதிரிகளுக்கு அவ்வளவு அச்சம் இருந்தது.

நபிகளாரின் வாழ்விலிருந்து நமக்கு இன்னும் ஒரு படிப்பினை கிடைக்கிறது. ஒரு சமயம் யமாமா நாட்டின் அதிபர் சுமாமா அவர்கள் கைது செய்யப்பட்டு மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் உள்ள தூணில் கட்டப்பட்டு இருந்தார். அவருக்கான உணவு நபிகளாரின் வீட்டிலிருந்துதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு சமயம் நபிகளார், சுமாமா அவர்களிடம் வந்து “ஒரே ஒரு தடவை நான் கூறுவதைக் கேளுங்கள்” என்றார். உயிருக்குத் துணிந்தவர்கள், எப்படியும் தன் உயிர் போகப்போகிறது என்று எண்ணுபவர்கள், சிங்கத்தின் கர்ஜனை போலவே கர்ஜிப்பார்கள். அதுபோல் நபிகளாரிடம் கூறினார்: “உலகில் நான் வெறுக்கக்கூடிய குரல்களில் முதல் குரல் உம்முடையதுதான்” என்றார். நபிகளார், “சரி என்னை ஒரே ஒரு முறையாவது பாருங்கள்” என்றார். அப்பொழுது “சுமாமா, நான் உலகில் வெறுக்கக்கூடிய முகங்களில் உம் முகம்தான் முதன்மையானது” என்றார். அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. பிறகு நபிகளார் தம் தோழர்களைப் பார்த்துக் கூறினார்: “இவரை விடுதலை செய்து விடுங்கள். இவர் போகட்டும்” என்றார். சுமாமா விடுவிக்கப்பட்டார். உடனே அவர் மதீனாவை விட்டுப் புறப்பட்டு விட்டார். மதீனாவின் எல்லையைக்கூட அவர் தாண்டியிருக்க மாட்டார். அவரின் சிந்தை தெளிந்தது. அவர் உணர்ந்தார். “இத்தனை நாள் நான் சிறைப்பட்டுக் கிடந்தேன். அவர் நினைத்திருந்தால் என்னைக் கொன்றிருக்கலாம். என்னை அப்படிச் செய்யவில்லையே, ஏன்? நான் அவரை எதிர்த்துப் பேசும்போதுகூட அவர் என் முகத்தில் ஓர் அறை விட்டிருக்கலாம். அதுவும் செய்யவில்லையே’ என்று எண்ணி, அங்கேயே இஸ்லாத்தை அவரின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு மீண்டும் நபிகளாரிடம் வந்து நடந்தவற்றைக் கூறி, “நான் முன்பே முஸ்லிமாகி விட்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் சத்தியப் பிரமாணம் சொல்லிக் கொடுங்கள்” என்று அவரின் கையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு அவர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “என் அருமை இறைதூதரே! உங்கள் குரல்தான் இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்த முதல் குரல்! உங்கள் திருமுகம்தான் இந்த உலகில் எனக்கு முதலானது” என்றார். அவர் கைதியாக இருந்தபோது கூறியதையும் அதன் பின்னர் கூறியதையும் சற்று யோசித்துப் பாருங்கள். இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினையிலிருந்து பயன் பெறுங்கள்.

தொல்லை கொடுக்கின்றவர் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார். இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைப்பவர்கள்தாம் இழிவுபட்டுப் போவார்கள். நாம் நம்மைத் தொல்லைப்படுத்துபவர்கள் சோர்ந்துபோகும் அளவிற்கு பொறுமையாக இருந்து, படைத்தவனிடம் முறையிட வேண்டும். பொறுமை எனும் ஆயுதம்கூட நம்மை எதிர்ப்பவர்களை வெல்லக்கூடும்.

ஆகவே, வரலாற்றிலிருந்தும் சரி, சத்தியவான்களின் வாழ்விலிருந்தும் சரி நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிவது என்னவென்றால் நேரம், காலசூழ்நிலை பார்த்து நாம் பணியாற்ற வேண்டும். நாம் இப்பொழுது இருக்கும் சுழல் மக்காவின் கால கட்டம் போல் இல்லை என்றாலும், நாம் அது

போல் எண்ணிச் செயல்பட வேண்டும். நமது வெற்றிக்கும் மக்களின் வெற்றிக்கும் நாம் பாடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே, நமக்கு இப்பொழுது தேவை இறைநம்பிக்கை, பொறுமை, தொழுகையுடன் செல்வம், வீரம், விவேகம் மட்டுமே. அதை விடுத்து வேறு எந்த ஆயுதத்தாலும் நமக்கு வெற்றி கிட்டாது.

(மௌலானா ஹஃபீஸுர் ரஹ்மான் உமரி, மதனி அவர்கள் சென்னையில் ஆற்றிய குத்பா பிசங்கத்திலிருந்து…)

தமிழில்: அ. ருக்னுத்தீன்

நன்றி: சமரசம்

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *