பசித்திரு!

-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்-

ரழமான் உளத் தூய்மையை இலக்காகக் கொண்ட மாதம். ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி, போஷித்து வளர்ப்பதற்கு துணை புரிகின்ற மாதம். ஆன்மாவை தூய்மைப்படுத்தி, மேம்படுத்துவதற்கு நான்கு வழிகள் உள்ளன. அதில் ஒன்று பசித்திருத்தல். எனவேதான் நோன்பாளிகளாகிய நாம் ரமழானில் பகல் முழுவதும் பசித்திருக்கின்றோம்.

பொதுவாக உணவுக் கட்டுப்பாடு உடல் ஆரோக்கியத்திற்கும் உள ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. குறிப்பாக, ஆன்மாவின் மேம்பாட்டுக்கும் உணவுக் கட்டுப்பாட்டுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கிறது.

உண்மையான இறையடியார்கள் பசியில்லாமல் சாப்பிடுவதில்லை. சாப்பிடும்போதும் வயிறு நிரம்ப சாப்பிடுவதில்லை. “உண்ணுங்கள் பருகுங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள்” என்பது இறை கட்டளை.

இங்கு வீண்விரயம் செய்தல் என்பது மிதமிஞ்சி, வயிறு புடைக்க உணவுட்கொள்வதையும் குறிக்கும். ஒருவர் முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கும் அளவுக்கு சில உணவுக் கவளங்களை உட்கொண்டாலே போதுமானதாகும். ஒருவர் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் எஞ்சிய மூன்றாவது பகுதியை சுவாசத்துக்கும் விட்டுவிடட்டும் என்பது நபியவர்களின் வழிகாட்டல்.

உணவுக் கட்டுப்பாட்டைப் பேணாமல் வயிறு நிறைய சாப்பிடுகின்ற காரணத்தினால் ஆன்மாவுக்கேற்படும் ஆபத்துக்களை ஆரம்ப கால இமாம்கள் அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள்.

மிதமிஞ்சிய உணவு வணக்க வழிபாடுகளில் சுவையைக் கெடுத்துவிடும். அறிவுத் தேடலைப் பாதிக்கும். உள்ளத்தில் இரக்க சுபாவத்தைப் போக்கி விடும். வணக்க வழிபாடுகளை சுமையாக மாற்றி விடும். ஆசாபாங்களை தீவிரமடையச் செய்துவிடும் என எச்சரிக்கின்றார் அபூ சுலைமான் அத்தாரணி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்.

“நான் 16 ஆண்டுகளாக வயிறு நிறைய சாப்பிட்டதே இல்லை. ஏனெனில், வயிறு நிறைய சாப்பிடுகின்ற காரணத்தால் உடல் சுமையாக மாறுகின்றது. உள்ளம் மென்மை இழந்து வன்மையடைகின்றது. புத்தி கெட்டுப் போகின்றது. தூக்கம் மிகைக்கின்றது” என இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

வாயைக் கட்டுப்படுத்தி உணவைக் குறைக்கின்ற காரணத்தினால் விளையும் நன்மைகள் பல. ஒருவர் உணவு உட்கொள்வதைக் குறைத்தால் உள்ளம் தெளிவடையும்; அது எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும்; அது மென்மையடையும்; கர்வம் குறையும்; பாவங்கள் மீதான மோகம் அற்றுப் போகும்; உள்ளத்தின் ஆசாபாங்களை அடக்கியாளும் வல்லமையைப் பெற்றுத் தரும்; தூக்கம் குறையும்; சுறுசுறுப்பாக இயங்கும் நிலை தோன்றும்; வணக்க வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

எனவே, ஏக காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மாவின் மேம்பாட்டிற்கும் பெரும் துணையாக அமைகின்ற உணவுக் கட்டுப்பாட்டை பேணுவதற்கும் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்குமான அற்புதமான சந்தர்ப்பத்தை ரமழான் நமக்குத் தருகின்றது. என்றாலும், இப்தார் வேளையிலும் ஸஹரின்போதும் மிதமிஞ்சி வயிறுபுடைக்க சாப்பிடும் ஒருவர் பகல் முழுவதும் பசித்திருந்தாலும் அதன் மூலம் கிடைக்கின்ற பலன்களையும் நன்மைகளையும் இழந்து விடுகின்றார் என்ற உண்மையை மனதில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

இங்கு ஓர் உண்மையை மிக அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன். அதாவது, நோன்பு நோற்பதால் உலக வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மையாக இருந்தாலும் நாம் நோன்பு நோற்பது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதனூடாக அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்பதற்காகவே.

எனவே, இந்த ரமழான் அர்த்தமுள்ள வகையில் பசித்திருந்து, ஆரோக்கியம் பேணிய ரமழானாக அமையட்டும். இந்தப் பயிற்சி ரமழானுக்குப் பிறகும் நமக்கு பயனளிக்கட்டும். வாயைக் கட்டுப்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்தலாம். அது உடல் நோயாகவோ உள நோயாகவோ ஆன்மா சார்ந்த நோய்களாகவோ இருக்கலாம்.

அனைத்தையும் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு உதவுமென்ற பேருண்மையை புரிந்து செயற்படுவோமாக. 

(அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக ‘வாரம் தோறும் ஒரு வாழ்க்கைப் பாடம்” எனும் தலைப்பில் தொடராக நிகழ்த்தி வரும் சிற்றுரையின் 27வது பகுதியின் சாராம்சமே இது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *