தீவிரவாதம் ஒழிய முஸ்லிம் உலக அரசியல் அகராதியில் ஒரு புரட்சி தேவை!

அஷ்ஷெய்க் ஸகி பவ்ஸ் (நளீமி) PhD (Reading – Malaysia)

சர்வதேச ரீதியில் பிரபலமான தீவிரவாதி அபூபக்கர் அல்பக்தாதி கொலை செய்யப்பட்ட செய்தியை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. அதற்கூடாக, ஐ.எஸ். வன் முறைக் குழுவினுடைய சுதந்திரமான இயக்கத்தை அடியோடு முடித்து விட்டதாகவும் அது அறிவித்தது. மட்டுமன்றி, அல்பக்தாதி கொலை செய்யப்படும் காட்சியையும் வெளியிட்டு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது பென்டகன்.

சர்வதேச தீவிரவாதியான அல்பக்தாதியும் அவனுடைய கொலைக் கும்பலான ஐ.எஸ். தீவிரவாதிகளும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்தான். அதில் உலகளாவிய ரீதியில் மனித விழுமியங்கள் கோலோச்ச வேண்டும் என்று பேசும் எவரும் முரண்பட முடியாது.

ஆனால், இங்கு கவனக் குவிப்பை வேண்டி நிற்கும் அதனை விட மிக முக்கியமான பேசுபொருள் யாதெனில், எதிர்காலத்தில் மீண்டுமோர் அல்பக்தாதி உருவாகுவதற்கான வாய்ப்பை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்தியுள்ளதா? என்பதாகும். ஏனெனில், இதே பாணியில் பாகிஸ்தானில் உஸாமா பின் லாடன் கொலை செய்யப்பட்ட செய்தியையும் அமெரிக்கா பரவ விட்டது. சர்வதேச தீவிரவாதத்தின் மூலவேரையே ஒழித்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டது. ஆனால், அதே தீவிரவாதம் முன்பை விடவும் கோரமான வடிவத்தில் அல்பக்தாதியாக ஈராக்கில் மீண்டும் முளைத்தது. ஆக, முஸ்லிம் உலகில் தீவிரவாதம் உருவெடுப்பதனை தடுப்பதற்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பு மாற்றங்களைப் பயன்படுத்த முடியும்.

வெறும் தீவிரவாதிகளது தலைவர்களை சுட்டுக் கொல்வதனால் தீவிரவாதத்தினை ஒட்டுமொத்தமாக அழித்து விட முடியாது என்பதே யதார்த்தம். அதனையே கடந்த முப்பது வருட காலமாக முஸ்லிம் உலகில் நடைபெற்ற சம்பவங்கள் சுட்டிநிற்கின்றன. துரதிஷ்டவசமாக சர்வதேச சமூகம் அது குறித்து குறைந்தளவு முக்கியத்துவத்தையே காட்டி வருகின்றது. மட்டுமன்றி, முஸ்லிம் உலகம் என்று வரும்போது மட்டும், ‘மக்களின் நலன்களை பலப்படுத்துவதற்கு பகரமாக ஊழல் மிக்க அரசுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுவே மேற்குலக நாடுகளது அரசியல், பொருளாதார நலன்களுக்கு தேவையானது’ என்ற விதியின்படிதான் மேற்குலக ஆதிக்க சக்திகளும் சர்வதேச நிறுவனங்களும் இயங்குகின்றன. முஸ்லிம் உலகில் தொடர்ச்சியாக அல்பக்தாதிகள் உருவாகுவதற்கு இந்த விதிதான் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

உதாரணத்திற்கு, எகிப்தைப் பாருங்கள். அங்கு  ஜனநாயகம் வந்துவிடக் கூடாது என்பதில் மேற்குல நாடுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. ஏனெனில், அப்போதுதான் தனது புவியரசியல் நலன்களை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும் என அந்த நாடுகள் நினைக்கின்றன. எனவே, தொடர்ச்சியான இராணுவப் புரட்சிகளுக்கு அவர்கள் ஆதரவளிப்பதுடன், இராணுவ ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஈடுபாடும் காட்டுகிறது. அதற்குமப்பால், இராணுவ ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற கோஷத்துடன் தோற்றம் பெற்ற ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களும் நசுக்கப்பட்டன. ஆனால், சர்வதேசத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்ற எகிப்திய அரசு தனது மக்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட வழங்க முடியாத நிலையில் தடுமாறுகிறது. அதன் வெளிநாட்டுக் கடன் தொகை 108 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அடிப்படை வங்திகள், சீத்தமான குடிநீர், மின்சார வசதிகள் போன்றன அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எகிப்தில் 60 ங்த வீதமானவர்கள் ஒன்றில் வறுமைக் கோட்டின் கீழ் அல்லது அதனைச் சார்ந்து வாழ்வதாக கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த உலக வங்கி முன்வைத்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. எகிப்திய மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு கோரி மக்கள் மீண்டும் பாதைக்குஇறங்கியிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் மீண்டும் அவர்கள் அடக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த அடக்குமுறைகளினதும் பொருளாதார வீழ்ச்சியினதும் எல்லை எங்கு போய் முடியும் என்பதுதான் முக்கியமானது. அதன் எதிர்வினைகள் எகிப்துடன் மாத்திரம் சுருங்கி விடும் ஒன்றாக மட்டும் இருக்கப் போவதில்லை. இத்தகைய சமூகப் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்துவிட்டு, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல்” என்ற பெயரில் சர்வதிகார ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக் கொள்வதே முக்கியமானது என்று சர்வதேச சமூகம் சிந்திக்குமானால், சர்வதேச தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதென்பது வெறும் கனவுதான்.

அதேபோன்றுதான் ஐ.எஸ். தீவிரவாத குழுவினுடைய ஆதிக்க பூமியாகத் திகழ்ந்த ஈராக்கிலும் மக்களார்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக்கிலிருந்து அடியோடு பிடுங்கி எடுத்தமை சாதனைதான். ஆனால், சமூக ரீதியாக ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு வித்திட்ட சமூகக் காரணிகளை நீக்குவதற்கு ஈராக் அரசாங்கம் தவறியிருக்கிறது. எனவே, மக்கள் மீண்டும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். ஈராக்கின்  அரசியல் பொறிமுறையையே மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.  ஈராக்  தொடர்ந்தும்  அயல்  நாடுகளினுடைய பொம்மையாகவும் அவர்களது பொருளாதார நெருக்கடி நிலைகளை தீர்த்துவைப்பதற்கான மாற்று இயந்திரமாகவும் செயற்பட முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிடுகிறார்கள். இதுவரை காலமும் ஷீஆ-ஸுன்னி என்ற குழுநிலைவாத சிந்தனைகளைப் பயன்படுத்தி, தத்தமது சகாக்களைப் போஷித்து வந்த அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே தீர்வு என்பதனை ஈராக்கியர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். எனவே, ஷீஆவையோ அல்லது ஸுன்னியையோ பாதுகாக்கும் அரசாங்கம் தேவையில்லை. மாறாக, ஈராக்கின் அனைத்துப் பிரஜைகளினதும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் ஓர் அரசாங்கமே தேவை என அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினுடைய இலக்குகளை தெளிவாகச் சொல்கிறார்கள்.

மட்டுமன்றி, ஈராக்கின் அதிகமான முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. ஏனெனில், அரச இயந்திரத்திற்கு அப்பால் இயங்கும் இராணுவ, ஆயுதக் குழுக்களை நாட்டின் வருமானத்தைப் பயன்படுத்தி போஷிப்பதற்கு மாத்திரமே அவர்கள் பாராளுமன்ற ஆசனத்தை பயன்படுத்துகிறார்கள் என அவர்கள் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கடந்த முப்பது ஆண்டுகளில் நடைபெறும் முதலாவது அடிமட்ட

மக்கள் ஆர்ப்பாட்டம் என தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மிகக் குறிப்பாக, ஈராக்கில் ஷீஆக்கள் பெரும்பான்மையாக வாழும் பஸரா போன்ற பிராந்தியங்களிலேயே ஆர்ப்பாட்டம் முதலாவதாகக் கருக் கொண்டது. ஈராக்கின் மொத்த வருமானத்தில் 90 வீதமான பகுதியை எண்ணெய் ஏற்றுமதியே தீர்மானிக்கின்றது. ஈராக்கின் எண்

ணெய் வளத்தில் பெரும் பகுதி பஸராவிலேயே இருக்கிறது. ஆனால், பஸரா மக்களில் 60 வீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. எனவே, புதிய பரம்பரையை இனியும்ஷீஆ-ஸுன்னி” சுலோகங்களைப் பயன்படுத்தி ஏமாற்ற முடியாது என ஈராக்கியர் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சமூகமும் மேற்குலகமும் எவ்வாறு இவ்வார்ப்பாட்டங்களுக்கு எதிர்வினையாற்றப் போகின்றன? என்பதுதான் இங்கு முக்கியமான கேள்

வியாகும். ஏனெனில், தொடர்ந்தும் இறுகிப் போன ஷீஆ-ஸுன்னி மோதல்களை மையப்படுத்திய ஈராக்கின் அரசியல் முறைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிக்குமானால், இன்னொரு பக்தாதி அங்கே உருவாகுவ தனை யாராலும் தடுக்க முடியாது.

ஈராக்கின் அதே நிலைதான் லெபனானிலும் காணப்படுகிறது. ஷீஆ, ஸுன்னி, மெரனைட் கிறிஸ்தவர்கள் என்ற மூன்று மதப் பிரிவுகளையும் திருப்திப்படுத்தும் அரசியல் பொறிமுறையே லெபனானில் காணப்படுகிறது. 1975- 1990 வரை இடம்பெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே அத்தகையதோர் அரசியல் ஏற்பாட்டுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, பாராளுமன்ற சபாநாயகர் பதவி ஷீஆ  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கும் பிரதம அமைச்சர் பதவி ஸுன்னி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ஜனாதிபதி பதவி மெரனைட் கிறிஸ்தவர் ஒருவருக்கும் சட்ட யாப்பு ரீதியாகவே கொடுக்கப்பட்டன. ஆச்சரியம் என்னவென்றால், உள்நாட்டுப் போர்க் காலத்தில் இராணுவக் குழுக்களுக்கு தலைமை வகித்து வந்த தலைவர்கள் ஒரே நாளில் நாட்டின் அரசியல் தலைமைகளாக மாறியமையாகும். அதனைத் தொடர்ந்து தத்தமது இராணுவக் குழுக்களையும் ஆயுதப் பிரிவுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அரச அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினார்கள். இறுதியாக, கையடக்கத் தொலைபேசி அழைப்புகளுக்கான வரித் தொகை தலைக்கு மேல் ஏறிச் சென்றதால், லெபனானியர் வட்ஸப் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளத் துவங்கினார்கள். மீண்டும் அரசாங்கம் வட்சப் அழைப்புக்கு வரி அறவிடும் புதிய சட்ட ஏற்பாடொன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்துதான் மக்கள் பாதைக்கு இறங்கினார்கள். குழுநிலைவாத அரசியலை மையப்படுத்தி அரசியல் சட்ட யாப்பை தூக்கிக் குப்பையில் வீசுமாறு அவர்களும் பேங்த் துவங்கியிருக்கிறார்கள். சம-பிரஜாவுரிமைத்துவம், ஜனநாயகம், பொருளாதார அபிவிருத்தி போன்ற நியாயமான அடிப்படைகளை வைத்து புதியதோர் அரசியல் யாப்பை வரையுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிடுகிறார்கள். இதுவரை காலமும் சர்வதேச சக்திகளினதும் உள்ளூர் பணமுதலைகளினதும் ஏஜண்டுகளாக இயங்கிய அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறிப் போய் நிற்கிறார்கள். ஆனால், லெபனானுடைய குழுநிலைவாத அரசியல் பொறிமுறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அதிலிருந்து தொடர்ந்தும் இலாபமீட்டும் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன. இந்நிலை தொடருமானால் மற்றொரு சிவில் யுத்தமொன்றை நோக்கி லெபனான் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது.

இறுதியாக, முஸ்லிம் உலகில் வன்முறைக் குழுக்களை ஒழிப்பதற்கு தீவிரவாதத்திற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்வதால் மட்டுமே முடியாது. மாறாக, தீவிரவாதத்தை தோற்றுவிக்கும் சமூக, அரசியல் காரணிகளையும் அடையாளம் கண்டு சர்வதேச சமூகம் ஒரு மாற்றுத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அதில், தற்போது மத்திய கிழக்கிலும் அகன்ற முஸ்லிம் உலகிலும் காணப்படும் அரசுக்கும்-பிரஜைகளுக்கும் இடையிலான விரிசலடையும் உறவை மீளவும் புதிய சமூக ஒப்பந்தமொன்றினூடாககட்டியெழுப்பும் விடயத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும். இன்னொரு வசனத்தில் சொன்னால், அரசியல் ஸ்திரத்தன்மையை மத்திய கிழக்கில் ஏற்படுத்துவதற்கு சர்வாதிகார ஆட்சியாளர்களை பாதுகாத்துக் கொள்வதனை விட, அங்கு வாழும் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளைப் பூர்த்தி ஙெ்ய்வதே இலகுவான தீர்வாகும் என்பதனை சர்வதேச நாடுகளும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே, தீவிரவாத, வன்முறைச் சிந்தனையை முஸ்லிம் உலகிலிருந்து துடைத்தெறிவதற்கான அடிப்படை மூலமந்திரமாகும். இல்லா விட்டால், அதன் எதிர்விளைவுகளின் வீச்சு முஸ்லிம் உலகையும் தாண்டிய ஒன்றாகவே அமையும் என்பது யதார்த்தமாகும். வெறுமனே புதிய பேசுபொருள்களை உருவாக்குவதற்காக அவ்வப்போது தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களை கொலை செய்வதால் மட்டுமே பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் தீர்த்து வைத்திட முடியாது.

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *