பாதுகப்பையும் பொருளாதார பலத்தையும் முன்னுரிமையாய் வேண்டி நிற்கும் எமது தேசம்!

சிந்தனை

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

மக்களின் உயர்ந்த குறிக்கோள்கள் அணைந்து விடாமல் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றபோதுதான் ஒரு நாடு வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வை சாத்தியங்கள் நிறைந்ததாக காண வேண்டும். மக்கள் ஆர்வம் இழப்பது ஒரு நாட்டின் வெற்றிப் பாதைக்கு தடையாக அமையும். எனவே, ஒரு நாட்டின் உயர்ந்த குறிக்கோள்களை மக்களின் குறிக்கோள்களாக மாற்றி மக்களின் குறிக்கோள்களை அந்த நாட்டின் குறிக்கோள்களாக மாற்றுவதில் ஓர் அரசாங்கம் வெற்றியடையும்போதுதான் அந்த நாடு வெற்றி நடை போடும்.

அச்சமற்றதும் பாதுகாப்பானதுமான தேசம், பொருளாதார வளமிக்க தேசம் ஆகிய  எமது அரசாங்கத்தின் இலக்குகள் மக்களின் இலக்குகளாகவும் செயல்திட்டங்களாகவும் மாற்றப்படும்போது நிச்சயம் எமது நாடு அதில் வெற்றி பெறும். இதற்கு அறிவூட்டல், சிந்தனை மாற்றம், நடத்தை மாற்றம் என்பனவும் தெளிவான சட்டங்களும் அரசாங்கத்துடனான மக்களின் பங்கேற்பும் தவிர்க்க முடியாத தேவைகளாகும்.

ஒரு சிறந்த நாடு உருவாக வேண்டுமென்றால் அது சிறந்த மக்களையும் சிறந்த நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும். அவர்கள் தங்களது உயர்ந்த விழுமியங்களை வெளிப்படுத்த தேவையான சூழ்நிலைகளையும் உருவாக்க வேண்டும். ஒரு நாட்டில் தெளிவற்ற, தேவையற்ற, குழப்பமான சட்டங்களும் விதிமுறைகளும் அமுலில் இருக்குமானால் ஒரு சாதாரண குடிமகன் ஏதாவதொரு வழியில் அவற்றை மீறாமல் தனத அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சிரமப்படுவான். வேறு விதமாக சொல்வதாயின், குற்றம் செய்யும் நோக்கமில்லாதவன்கூட குற்றமிழைப்பவனாக மாற்றப்படுவான். எனவே தெளிவான, எளிமையான சட்டங்களும் விதிகளுமே இன்றைய கால கட்டத்தில் எமது சமூகத்தை, பொருளாதாரத்தை, ஏனையவற்றை வழிநடத்த அவசியமானவை. எனவே, இதற்காக எமது நாட்டிலுள்ள திறமை வாய்ந்த மனிதர்கள் தமது பங்களிப்பை முழுமையாக வழங்க முன்வர வேண்டும்.

அமைதிமிக்க, பொருளாதார வளமிக்கதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதில் இலங்கைப் பிரஜைகளான முஸ்லிம்களின் பங்களிப்பைத் தூண்டும் வகையிலான இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்து இந்தப் பத்தியின் ஊடாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு மனிதனின் ஆன்மிக மேம்பாட்டிற்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் அடிப்படையாக அமைவது, அவன் வாழும் நாடு அச்சமற்ற, பஞ்சமற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதாகும். இதனையே அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது:

எனவே அவர்கள் இந்த இல்லத்தின் அதிபதிளை அடிபணிந்து வணங்கட்டும். அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்

பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்ளை மீட்டு அமைதியை வழங்கினான்.”

எனவே அச்சமற்ற, பாதுகாப்பான, பொருளாதார வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்குவது முஸ்லிம்களின் சன்மார்க்க கடமை என்றால் மிகையில்லை.

எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்.” (ஸூரதுல் மாஇதா: 02)

அச்சமும் வறுமையும் நிலவும் நாட்டில் முன்னேற்றகரமான எந்தவொரு செயலையும் எதிர்பார்க்க முடியாது. மாற்றமாக, அனைத்து விதமான வீழ்ச்சிகளுக்கும் துர்நடத்தைகளுக்கும் அதுவே காரணமாக அமையும்.

அறிவியல் வீழ்ச்சி, ஒழுக்க வீழ்ச்சி, சுகாதாரக் குறைபாடு, உடல்-உள நோய்கள், அரசியல் ஒழுங்கீனங்கள், இலஞ்சம், ஊழல் முதலான இன்னோரன்ன செயற்பாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைவது அச்சமும் வறுமையுமேயாகும். எனவே, அவை விரட்டப்படுவதே நாட்டின் முன்னுரிமையாக கருதப்படல் வேண்டும்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் தனது நம்பிக்கைக் கோட்பாடு (ஈமான்), இஸ்லாம் பற்றி கரிசனை காட்டுவதைப் போன்றே தான் வாழும் நாட்டினது அமைதி, சாந்தி, சமாதானம் பற்றியும் சிந்தித்து செயல்படுமாறு பணிக்கப்பட்டுள்ளான். ஒரு முஸ்லிம் ஒவ்வொரு மாதமும் மாதத்தை ஆரம்பிக்கும் தலைப்பிறையை காணும்போது, இறைவா! எமக்கு ஈமானையும் அமைதிமிக்க வாழ்வையும் இஸ்லாத்தையும் சாந்தி, சமாதானமிக்க வாழ்க்கையையும் தருவாயாக! இன்னும் உனது வழிகாட்டலையும் மனிதர்களுக்கு தொண்டு செய்யும் ஆற்றலையும் தருவாயாக!” என்று பிரார்த்திக்குமாறு வழிகாட்டிய இறைதூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல் செயல்படுமாறும் தூண்டியுள்ளார்கள்:

“மனிதர்களே சாந்தி சமாதானத்தை பரப்புங்கள்; மக்களின் பசியை, வறுமையை போக்குங்கள் மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது எழுந்து நின்று வணக்கங்களில் ஈடுபடுங்கள் நீங்கள் இலகுவாக சுவனம் செல்வீர்கள்.”

தன்னைச் சூழ வாழ்பவர்களுக்கு அச்சமற்ற, பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியாதவனால் நம்பிக்கையாளனாக (முஃமின்), இஸ்லாமியனாக (முஸ்லிம்) இருக்க முடியாது என்பதே நபியவர்களின் நிலைப்பாடாக இருந்தது. “தனது சொல்லாலும் செயலாலும் அடுத்தவனுக்கு அமைதியைக் கொடுப்பவனே முஸ்லிம். அடுத்த மனிதர்களின் உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிப்பவனே நம்பிக்கையாளன் (முஃமின்).” (அத்திர்மிதி)

இஸ்லாத்தின் இந்த அடிப்படை அம்ங்ங்களையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன் வந்த இறைதூதர்களும் முதன்மைப்படுத்தி பணியாற்றியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:

இறைவனின் தூதர் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: “இறைவா (எனது) இந்த நாட்டை அமைதிமிக்க நாடாக ஆக்கி, நாட்டு மக்களுக்கு உணவளிப்பாயாக!” (2: 126)

யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களின் குடும்பத்தை எகிப்தில் குடியேற்றியபோது பின்வருமாறு கூறியதை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:

“அல்லாஹ்வின் நாட்டப்படி அச்சமின்றி எகிப்துக்குள் வாருங்கள்” என அழைப்பு விடுத்தார்கள். அச்சமற்ற வாழ்க்கை பஞ்சம், பசியற்ற வாழ்க்கையே இறைவனின் அருள்மிக்க வாழ்க்கை என்பதை அல்குர்ஆனும் இறைதூதரின் வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன.

“மேலும், அல்லாஹ் ஓர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் வாழ்க்கைச் சாதனங்கள் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தனர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினைகளின் விளைவை சுவைக்கச் செய்தான். பசி, அச்சம் எனும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன.”  (ஸூரதுந் நஹ்ல்: 112)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவன் தன்னோடு உள்ளவர்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தோடும் (குடும்பம், சமூகம், நாடு) உடல் ஆரோக்கியத்தோடும் அன்றைய நாள் உணவுக்கான உத்தரவாதத்தோடும் காலையில் எழுவது அவனுக்கு முழு உலகமும் கிடைப்பதற்கு சமமாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

மேற்சொன்ன கிராமத்தின் கதையினூடாக இறைவன் அச்சமற்ற, பசியற்ற வாழ்வை அவனது மிகப் பெரும் அருளாக குறிப்பிடும் அதேவேளை, அச்சத்தோடும் பசியோடும் கூடிய வாழ்க்கையை அவனுக்கான தண்டனையாக கூறுகின்றான்.

அச்சமற்ற, வளமிக்க நாட்டை உருவாக்குகின்ற பணியை ஒவ்வொரு நபிமாரும் அவர்கள் வாழ்ந்த சமூகங்களோடு இணைந்து உருவாக்கியதை சுட்டிக்காட்டும் அல்குர்ஆன், குறிப்பாக எகிப்திய மன்னனோடும் மக்களோடும் இணைந்து அந்நாட்டை அச்சமும் பஞ்சமும் அற்ற நாடாக உருவாக்குவதற்கு யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வழங்கிய பங்களிப்புக்களை தனியானதோர் அத்தியாயத்தினூடாக (ஸூரா யூஸுப்) இறைவன் விவரித்துக் காட்டுகின்றான்.

எனவே, பொருளாதார ரீதியாக பின்னடைந்திருக்கும் எமது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்த நாட்டு அரசாங்கத்திற்கு இருப்பது போலவே இலங்கைப் பிரஜைகளாகிய எம் அனைவருக்கும் இருக்கிறது.

எனவே, பொருளாதாரம் சார்ந்த, நாட்டுக்குத் தேவையான இன்றியமையாத தீர்மானங்களை அரசாங்கங்கள் எடுக்கும்போது வெறும் அரசியல் தலைமை பீடங்களுக்கிடையிலான போட்டித் தன்மைகள் அந்த தீர்மானங்களை மேலும் தாமதிக்கச் செய்யும் நிலை எமது நாட்டில் கடந்த காலங்களில் பல முறை பதிவாகியுள்ளது. என்றாலும், இவ்வாறான முன்னெடுப்புக்கள் முழு நாட்டையும் பாதிக்கிறது என்பதை பொறுப்பிலுள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இலங்கை மக்களாகிய நாம் ஆளும் கட்சியின் அங்கத்தவர்களாகவோ அல்லது எதிர்க் கட்சியின் அங்கத்தவர்களாகவோ அல்லது ஆரோக்கியமிக்க சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களாகவோ அல்லது தனிப்பட்ட பிரஜைகளாகவோ எந்நிலையில் இருந்தபோதிலும் ஜனநாயகத்தின் உயர் விழுமியமாகிய அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு துணைநிற்றல், பிழையான தீர்மானங்களை சுட்டிக்காட்டி திருத்துதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக தேசத்தை கட்டியெழுப்பும் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்போம்.

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *