ரமழான்: சோதனையில் சாதனை படைப்போம்!

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

மற்றுமொரு ரமழானை அடையக்கூடிய மாதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அல்ஹம்துலில்லாஹ். மலர்ந்துள்ள ரமழானை நாம் பயனுள்ளதாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் அமைத்துக் கொள்வதற்கு துணைபுரிகின்ற ஒரு முக்கியமான ஒரு சிந்தனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.

மனிதன் உடல், ஆன்மா ஆகிய இரு கூறுகளைக் கொண்டவன். உடலை ஒரு வீட்டுக்கு ஒப்பிட்டால் அந்த வீட்டில் வாழும் மனிதன்தான் ஆன்மா. வீடு விசாலமானதாகவும் வசதி வாய்ப்புள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமைந்திருந்தாலும் அந்த வீட்டில் வாழும் மனிதன் நோயாளியாக இருந்தால் அல்லது ஆரோக்கியம் குன்றியவனாக இருந்தால் அந்த வீட்டுக்கு என்ன பெருமை!?

அவ்வாறே ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியமாக, பலம்மிக்கதாக இருந்தாலும் அவனுடைய ஆன்மா நோய்வாய்ப்பட்டதாகவும் பலவீனமுடையதாகவும் இருந்தால் அந்த மனிதனின் நிலை அவலமானதாக இருக்கும். உடலை விட ஆன்மாதான் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. உடலுக்கு போஷாக்கு தேவைப்படுவது போல ஆன்மாவுக்கும் போஷாக்கு தேவைப்படுகிறது. உடல் நோயுறுகின்றபோது சிகிச்சை தேவைப்படுவது போல ஆன்மாவும் நோயுறுகிறபோது அதற்கு சிகிச்சை அவசியமாகிறது.

ஆன்மாவைப் பீடிக்கும் நோய்களைக் குணப்படுத்தி அதற்குத் தேவையான போஷாக்கை வழங்குவதுதான் ரமழான்.
ஆன்மாவை தூய்மைப்படுத்தி பலப்படுத்துவதற்கு நான்கு வழிகள் உள்ளன. அவையாவன:
 பசித்திருத்தல்
 விழித்திருத்தல்
 தனித்திருத்தல்
 மௌனித்திருத்தல்

ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தி வளப்படுத்த உதவும் இந்நான்கு வழிமுறைகளையும் ஏக காலத்தில் கடைப்பிடிக்கின்ற அருமையான வாய்ப்பை ரமழான் நமக்குத் தருகின்றது. பசித்திருந்து நோன்பு நோற்க வேண்டும். விழித்திருந்து இரவு வணக்கங்களிலும் உபரியான இபாதத்துக்களிலும் ஈடுபட வேண்டும். படைப்புக்களுடனான உறவைக் குறைத்து தனித்திருந்து படைப்பாளனோடு உறவாட வேண்டும். வீண் போச்சுக்களைத் தவிர்த்து மௌனம் காத்து இறை தியானத்தில், திக்ரில், திலாவத்தில், குர்ஆன் திலாவத்தில் ஈடுபட வேண்டும்.

ஆன்மைவாவை நெறிப்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பக்குவப்படுத்துவதற்கும் துணை புரிகின்ற இந்நான்கு வழிமுறைகளையும் ரமழானில் நாம் கைக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த ஆண்டு ரமழான் முன்னைய காலங்களை விட பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து மௌனம் காத்து நம்மை நாமே புடம்போட்டுக் கொள்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது.

சவால்கள் நல்ல சந்தர்ப்பங்களாக அமைந்து விடுவதுண்டு. சோதனைகள் அருளாக மாறி விடுவதுமுண்டு. எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்தர்ப்பங்களாக மாற்ற முயற்சி செய்வோம். சோதனைகளை சாதனைகளாக்கி பயணிக்க திடசங்கற்பம் கொள்வோம். இந்த ரமழான் சோதனையில் சாதனை செய்த ரமழானாக மாற வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

(அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக “வாரம் தோறும் ஒரு வாழ்க்கைப் பாடம்” எனும் தலைப்பில் தொடராக நிகழ்த்தி வரும் சிற்றுரையின் 26வது பகுதியின் சாராம்சமே இது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *