நாளைக்காக நாம்… ஒரு சிந்தனைக் கோடு…

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

முன்னாள் தலைவர்- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

நாட்டில் தற்போது ஓர் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கமைவான ஒரு மாற்றம் என்று அதனைக் குறிப்பிடலாம். சிறுபான்மை சமூகங்களின் அழுத்தங்கள் இல்லாத… அல்லது அவர்களது அழுத்தங்களுக்கு களம் அமைப்பதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காத ஒரு மாற்றம் என்றும் அதனைக் குறிப்பிடலாம். இத்தகையதொரு மாற்றம் தற்செயலாக வரவில்லை. நீண்ட முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் கிடைக்கப் பெற்ற ஒரு மாற்றமாகவே அது பார்க்கப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஜனநாயக வழிமுறைகளினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாற்றமாகவும் அது இருக்கிறது. அமைதியான முறையிலும் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

எனவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பதை ஏற்றாக வேண்டும். அந்த மாற்றம் நிகழ்ந்த விதம் குறித்துக் குறை கூறவோ விமர்சிக்கவோ முடியாத நிலையும் அதனோடிணைந்தே இருக்கின்றது. விமர்சனம் என்ற வகையில் சுட்டிக் காட்டப்படுவதற்கு முடியுமாயின், ஒரு குறை இருக்கிறது எனலாம். அதுதான் இனங்களுக்கிடையில் தெளிவான பிரிகோடுகளைக் காட்டும் ஒரு மாற்றமாக அது காணப்படுகிறது என்பதாகும். அந்தக் குறையை ஒரு சிலர் குறையாகப் பார்த்தாலும் பலர் அதனை ஒரு குறையாகப் பார்க்கும் நிலையில் இல்லை. 

தற்போது என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில் விமர்சனங்களோ மனக்குறைகளோ பயன்தரப் போவதில்லை. படிப்பினைக்காக கடந்த காலத்தை மீட்டி, மாற்றங்களுக்காக எதிர்காலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர… படிப்பினை பெறும் நோக்கில் கடந்த காலத்தைப் பார்த்தால் படிப்பதற்கு நிறையவே இருக்கின்றது எனலாம். அந்தப் படிப்பினைகள் இனிப்பானவை அல்ல என்பதே பிரச்சினை. இனிப்பானவையாக அவை இருந்திருக்குமாயின், அவற்றை மீட்டிப் பார்ப்பதன் மூலம் மகிழ்ச்சியடைய முடியும். அந்தப் படிப்பினைகள் கசப்பானதாகவே இருக்கின்றன. இருந்தபோதிலும் எமது எதிர்காலத்துக்காக அவற்றை நாம் மீட்டியே ஆக வேண்டும். நாமறிந்த இலங்கையின் கடந்த காலம் இனங்களது பரஸ்பர இருப்புக்கு ஊக்கமளிப்பதாக இருக்கவில்லை… இனங்களின் பரஸ்பர இருப்பு கேள்விக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த சுழலே தொடர்ந்திருந்தது எனலாம். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. அவற்றின் சுருக்கம் யாதெனில், ஓர் இனம் மற்றோர் இனத்தால் பயத்துக்கும் பாதிப்புக்கும் ஆளானதே… இந்தப் பயத்தினதும் பாதிப்பினதும் அளவு வேறுபட்டதாக இருக்கலாம். எனினும், அவற்றை அளந்து பார்க்கும் ஆய்வுகள் தற்போதைய யதார்த்தங்களில் கூட்டல், குறைத்தல்கள் எதனையும் செய்யப் போவதில்லை. 

இலங்கையின் பெரும்பான்மை சமூகம் பிளவுபட்டிருந்தது. சிறுபான்மை சமூகங்கள் தத்தமது விவகாரங்களை வெவ்வேறாக அல்லது தனித்தனியாகக் கையாண்டன. எங்கும், எதிலும் ஒருமுகப்பட்ட சிந்தனைகளோ செயற்பாடுகளோ இருப்பதை நாட்டில் காண முடியவில்லை. சிங்கள மக்கள், வட கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என நான்கு துருவங்களில் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் முனைப்புக்களே இனங்களுக்கு மத்தியில் காணப்பட்டன. 

ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டம், தனித்துவப் போராட்டம், உரிமைப் போராட்டம், அபிவிருத்திப் போராட்டம்… என இந்த முனைப்புகள் வேறுபட்டிருந்தன. பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் பிளவை சிறுபான்மை சமூகங்கள் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் இந்தப் போராட்டங்களின் ஒரு யதார்த்தமாக இருந்தது. நாடு பற்றி சிந்திக்காது தத்தமது வீடுகள் பற்றி சிந்திக்கும் இயல்பு இந்தப் போராட்டங்களில் மிகைத்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது. இத்துணை களேபரங்களுக்கு மத்தியில் இஸ்லாமியப் பயங்கரவாதமும் தனது மூக்கை நுழைத்து நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. 

ஒரு சிறிய நாட்டுக்குள் சிறு சிறு குழுமங்களாக வாழும் சமூகங்களுக்கிடையே பல தசாப்தங்களாக நிலவிய இந்தக் குழப்ப நிலை நாட்டின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதித்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அது மட்டுமல்ல, நாட்டில் நிலவிய குழப்ப நிலைமைகளால் எந்த இனக் குழுமமும் பயன் பெறவுமில்லை, அனைத்து இனங்களதும் உயிர், உடைமைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு குழப்பங்களால் காவு கொள்ளப்பட்டதைத் தவிர…

ஏற்கனவே எமது நாடு நான்கரை நூற்றாண்டுகளாக ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டு எண்ணற்ற துன்பங்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழல் உள்நாட்டில் ஏற்பட்ட இன முறுகல்களாலும் மத முறுகல்களாலும் தொடர் கதையாக மாறியதை நினைத்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, அனைவரும் தத்தமது உரிமைப்போராட்டங்களை நகர்த்திச் செல்வதிலேயே கவனம் செலுத்தினர். விளைவாக, நாட்டினதும் நாட்டு மக்களினதும் முன்னேற்றம் பல தசாப்தங்கள் பின்தள்ளப்பட்டன. 

இங்கு முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு குறிப்பாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாட்டின் நலன் குறித்து சிந்திக்காதவர்களாக முஸ்லிம்கள் மூன்று கோணங்களில் பார்க்கப்பட்டார்கள் என்பதே அதுவாகும்.

1. முஸ்லிம் அரசியலின் தோற்றம்: இத்தகையதோர் அரசியல் முன்னெடுப்பால் முஸ்லிம்கள் நாட்டை மையப்படுத்தி சிந்திப்பதற்குப் பதிலாக தங்களை மையப்படுத்தியும் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை மையப்படுத்தியும் சிந்தித்தார்கள் என்ற நிலை உருவாகியதாகப் பார்க்கப்படுகிறது. 

2. கலாசாரத் தோற்றப்பாடு: முஸ்லிம்களின் கலாசாரத் தோற்றப்பாடு உலகிலிருக்கின்ற ஏனைய சமூகங்களின் கலாசாரத் தோற்றப்பாடுகளிலிருந்து வேறுபட்டதாக இருப்பதனாலும்… அந்த வேறுபாட்டுக்கு அரபு நாடுகள் தமது சுழலுக்குப் பொருந்தும் வகையில் கொடுத்த முக்கியத்துவத்தை வகைதொகையின்றி இலங்கை முஸ்லிம்கள் கொடுக்க முற்பட்டதனாலும்… அது ஒரு சாராரால் ஒரு கலாசார ஆக்கிரமிப்பாகப் பார்க்கப்பட்டதனாலும் முஸ்லிம்கள் நாட்டோடிணைந்து செல்லும் போக்கைக் கைவிட்டு தமக்குள் சுருங்கிக் கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். 

3. இறுதியாக முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு முன் நடந்த சிலை சேதப்படுத்தல் சம்பவங்கள் என்பன இலங்கை முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நன்மதிப்பைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன எனலாம். அதுமட்டுமல்ல, முஸ்லிம்களது நாட்டு நலன் குறித்த கரிசனையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கி சந்தேகத்தோடு பார்க்கும் நிலையையும் அது தோற்றுவித்தது எனலாம்.

கசப்பான அனுபவங்களாக இருந்தாலும் இவற்றை நாம் மீட்டிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்போதுதான் எமது எதிர்காலம் குறித்த நேர்சிந்தனையொன்றுக்கு எங்களால் வர முடியும்.

மேலே கூறப்பட்ட மூன்று காரணங்களாலும் நாட்டோடு இணைந்து ஙெ்ல்லாதவர்களாக முஸ்லிம்கள் பார்க்கப்பட்டார்கள். இன்றும் பார்க்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் நாங்கள் எத்தகைய விளக்கங்களை முன்வைத்த போதிலும்கூட…

உதாரணமாக, முஸ்லிம் அரசியலின் தோற்றம் நாட்டுக்கு மறைமுகமானதொரு பங்களிப்பை வழங்கியது என நாங்கள் வாதிடலாம். எல்.ரீ.ரீ.ஈ. இன் பாணியைப் பின்பற்றி ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குள் முஸ்லிம் இளைஞர்கள் நுழையாமல் தடுத்த பெருமை முஸ்லிம் அரசியலுக்கே உண்டுஎன்று நாம் கூறலாம். அதேபோன்று மேலே கூறப்பட்ட மூன்று விடயங்கள் பற்றியும் அவற்றின் பின்புலங்கள் பற்றியும் நாம் நிறைய பேசலாம். எனினும், சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகள் அதிகரித்திருக்கின்ற சுழலில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை அத்தகைய விளக்கங்கள் கொண்டு வந்து விட மாட்டாது.

இவற்றோடு 30 வருட உள்நாட்டு யுத்தம் ஒரு பாரிய பிளவை சமூகங்களுக்கிடையில் விட்டுச் சென்றுள்ளமை மற்றும் அதற்குப் பின்னரான அரசியல் தீர்வுப் போராட்டங்கள் என தொடர்ந்தும் நாட்டின் நலன்களை பின்தள்ளி விட்டு தத்தமது சமூக நலன்களை முற்படுத்தியதொரு செயற்பாடு தொடர்ந்ததை நாம் மறுக்க முடியாது. இவற்றோடு பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் பிளவுகளும் இடைத்தாக்கமுற்று நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதே உண்மை. முதலாம் உலக நாடுகளின் வரிங்கை்கு முன்னேற முடியாமல் மூன்றாம் உலக நிலையிலேயே நாம் தொடர்ந்திருப்பதற்கு இவையும் பங்களிப்புச் ஙெ்ய்தே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 

இவ்வாறு பாதிப்புக்குள்ளாகிய நாட்டின் ஸ்திரத்தன்மை வெறும் பொருளாதார- அரசியல் ஸ்திரத்தன்மை என்பதை விட, பெரும்பான்மை இனம், அவர்களது மதம், அவர்களது நாடு என்பவற்றின் ஸ்திரத்தன்மையாக அவர்களால் பார்க்கப்பட்டது. அந்த ஸ்திரத்தன்மையை பாதுகாத்தால்தான் ஏனையவற்றின் ஸ்திரத்தன்மை குறித்து சிந்திக்க முடியும். எனவே, அதற்காக பெரும்பான்மை மக்கள் ஒன்றுசேர வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.அந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு பதின்மூன்றோ பத்தொன்பதோ யாப்பு மாற்றமோ ஆயுதப் போராட்டமோ உரிமைப் போராட்டமோ அவர்களுக்கு அவசியப்படவில்லை. 

மாறாக, வெறும் ஜனநாயக வழிமுறையொன்று மட்டுமே தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்கு போதுமானதாக இருந்தது எனலாம். பல்வேறு போராட்டங்களை நீண்ட காலம் முன்னெடுத்த சிறுபான்மை சமூகத்தவர்களால் சாதிக்க முடியாமல் போனதை மிகவும் இலகுவாக, அமைதியான ஜனநாயக வழிமுறையூடாக பெரும்பான்மை சமூகம் 2019 ஜனாதிபதித் தேர்தலில் சாதித்தது எனலாம்.

இதுதான் பெரும்பான்மை சமூகத்தின் பலம் என்பதை சிறுபான்மை சமூகங்கள் உணரவில்லை. இந்தப் பலத்தை 2019 தேர்தல் உணர்த்தும் வரை உணராதிருந்த காரணத்தால்தான் சிறுபான்மைச் சமூகங்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தமது கடந்த காலங்களை மீட்டிப் பரிசீலனை ஙெ்ய்யவில்லை… படிப்பினைகள் பெறவுமில்லை… 

பரிசீலனை ஙெ்ய்து படிப்பினைகள் பெற்றிருந்தால் எமது சிறிய நாட்டில் சிறு சிறு சமூகக் குழுக்களாக வாழ்ந்தவர்கள் கடந்த காலங்களில் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும், எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது என்ற முடிவிற்கு அண்ணளவாக வர முடியுமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

குறைந்தபட்சம் பொருத்தமற்றதாக இருந்த கடந்த கால அணுகுமுறைகள், நிலைப்பாடுகள், கண்ணோட்டங்கள், மனப்பாங்குகள், செயல்பாடுகள் போன்றவற்றை அடையாளப்படுத்தி எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு மாற்றிக் கொள்வது? என்பது பற்றி நாம் சிந்தித்திருக்கலாம். தற்போதும் மாற்றங்கள் குறித்து சிந்திப்பதற்கு அவகாங்ம் இல்லாது போகவில்லை. உலகம் மாறியிருக்கிறது. நாடும் அரங்ாங்கமும் மாறியிருக்கின்றன. கொள்கைகள், தீர்மானங்கள், அணுகுமுறைகள் மாறுகின்றன. எனவே, நாமும் மாறியாக வேண்டும் என்பதைக் கூற வேண்டியதில்லை.

அவ்வாறு சிந்தித்தால் மாற்றங்களுக்கான அந்த சிந்தனை சில பண்புகளைக் கொண்டதாக அமையலாம் என்பது எனது பணிவான ஆலோசனையாகும்.

1. பரஸ்பர கலந்துரையாடல்கள் சமூகத்திற்கு உள்ளேயும் சமூகத்திற்கு வெளியேயும் இடம்பெற வேண்டும். உடன்பாட்டுப் புள்ளிகளை இனம் காணும் வகையில் கலந்துரையாடல்களை நடத்தி முடிவுகளைப் பெற வேண்டும்.

2. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குகளுடன் மாற்றங்கள் நோக்கி நகர வேண்டும். விடாப்பிடியாக இருப்பவர்கள் மாற மாட்டார்கள்; என்றோ ஒரு நாள் பலவந்தமாக மாற்றப்படுவார்கள்.

3. நாட்டின் பொதுநலன் மற்றும் எதிர்காலம் என்பவற்றை முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதற்கு

தமது குழுமங்களது நலன்களை முன்னுரிமைப்படுத்தாது சகித்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

4. ஒரு கப்பலில் பயணம் செய்யும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடுகளுக்கிடையிலான போராட்டங்களை கப்பலுக்குள்  நடத்தினால்  எப்படி  இருக்கும்? எமது சிறிய நாட்டை ஒரு கப்பலாகக் கருதி வேறுபாடுகள் இருக்கின்ற நிலையிலும் உள்ளக முரண்பாடுகள் வலுக்காத சுழலை உருவாக்கிக் கொள்ள முனைய வேண்டும்.

5. அதீத கற்பனை, மிகை மதிப்பீடு என்பவற்றில் மிதந்து யதார்த்தங்களை மறந்துபோகும் நிலை வந்துவிடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யதார்த்தங்களை புறக்கணித்தால் அறிவுக்கு வேலை இருக்காது. அதன் விளைவுகளை அனுபவிக்க நேர்ந்தால் அப்போதைய அறிவு பயனும் தராது.

6. எந்த முன்னெடுப்புகளிலும் கள்ளத்தனமோ தந்திரங்களோ  இரகசியங்களோ இருக்கக் கூடாது. தூய்மையும் வெளிப்படைத்தன்மையும் பரஸ்பர புரிந்துணர்வுமே ஒவ்வொரு முன்னெடுப்பிலும் மேலோங்க வேண்டும்.

இவற்றோடு விஷேடமாக முஸ்லிம்கள் தற்போதைய சூழலில் கவனம் செலுத்த வேண்டிய முதன்மையான அம்சங்களில் ஒன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுதான் இஸ்லாத்தின் பெயராலோ, முஸ்லிம்களின் தவறாலோ தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் எச்சரிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும் என்பதாகும். சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தீவிரவாதம் களையப்பட்ட ஒரு சுழலை உத்தரவாதப்படுத்துவது விலகி நிற்கும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு இன்றியமையாததாகும்.

இஸ்லாமிய அரசு என்ற பெயரில் ஐ.எஸ். ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாமிய முலாம் பூசி சந்தைப்படுத்தும் தீவிரவாதம் குறித்து முஸ்லிமல்லாத மக்கள் பொதுவாகவும் ஈஸ்டர் தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாகவும் கடும் எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் அத்தகைய தீவிரவாதம் இன்னுமிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் நிற்கும் ஒரு முஸ்லிம் அத்தகைய தீவிர

வாதியாக இருப்பானோ என்ற அச்சமும் ஏப்ரல் 21க்குப் பின் அவர்களுக்குள் இயல்பாக ஏற்படுவதாக சிலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். 

ஐ.எஸ்.ஐ.எஸ். இடமிருந்து ஒரு சிலர் தத்தெடுத்துக் கொண்ட இத்தகைய தீவிரவாத சிந்தனைகளும் அவற்றால் ஏற்பட்ட விபரீதங்களும் பயங்கரமான கேடுகளை விளைவித்தனவேயன்றி எந்த நன்மைகளையும் எவருக்கும் தந்துவிடவில்லை என்பதே அவற்றின்பால் இன்னுமொருவர் துணிந்து செல்லாமல் இருக்கப் போதுமானது. எனினும், எமது சமூகம் இந்த விபரீதம் தொடர்பில் விழிப்போடும் எச்சரிக்கையுடனுமே தொடர்ந்துமிருக்க வேண்டும்.

நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பாதையில் அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு நல்ல எதிர்காலத்தை ஆசிக்க எங்களால் முடியுமே தவிர அந்த நகர்வைத் தீர்மானிக்கும் சக்தி எங்களிடம் அறவே இல்லை. என்றாலும், நல்லெண்ணங்களும் இதய சுத்தியோடு மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் பயன் தராது போவதில்லை என்பதை மறக்காமல் நம்பிக்கையோடு செயல்பட்டு மாற்றங்கள் காண முயல்வோம்.

உலகில் ஒரு சாராரால் மற்றொரு சாராருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் ஒரு வகை. ஒவ்வொரு சாராரும் தமக்குள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தவறுவதனால் வரும் ஆபத்துக்கள் மற்றுமொரு வகை. இரண்டில் எது பாரதூரமானது என்பதை சிந்தித்து ஙெ்யற்படுவோம். 

“நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமூகத்தில் இருக்கின்ற நிலையை மாற்றப் போவதில்லை… அவர்களே அவர்களது நிலையை மாற்றிக் கொள்ளும் வரை…”  (அல்குர்ஆன் 13: 11)

அல்ஹஸனாத், ஜனவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *