உள்ளதைக் கொண்டு திருப்தி காணுங்கள்
பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஒரே தரத்தில், சம அந்தஸ்தில், சரிசமமான வளங்களோடு படைக்கவில்லை. அது அவனது நியதிகளுக்கு முரணானதாகும். பொருளாதார ரீதியாகவும் மனிதர்கள் யாவரும் சமநிலை வகிக்க முடியாது. அது இயற்கைக்கு மாற்றமானதாகும். எல்லோரும் பொருளாதாரத்தில் சமம் என்றால் முதலாளி -தொழிலாளி,மேலாளர் – ஊழியர், தலைவர் – தொண்டர் என்ற வேறுபாடேயின்றி உலக இயக்கம் நிலைகுலைந்து ஸ்தம்பித்து விடும். அனைத்து மனிதர்களும் அறிவு, சிந்தனை, உணர்ச்சி, உடற் பலம், மனவலிமை, உழைப்பு, எதிர்பார்ப்பு, வயது, ஆரோக்கியம் முதலான அம்சங்களில் இயற்கையாகவே வேறுபடுகிறார்கள். இத்தகுதிகளுக்குத் தக்கவாறே வாழ்வாதார நிலையும் பதவிகளின் ஏற்ற இறக்கமும் அமையும்.
அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டையும் உலகத்தின் நியதிகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், மனிதன் எப்போதும் தன்னை மனக் குழப்பத்திலும் வீணான சந்தேகங்களிலும் ஆழ்த்திக் கொள்வான்.
மறுமை விவகாரங்களில் எப்போதும் தனக்கு மேல் உள்ளவர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், உலக விவகாரங்களில் எப்போதும் தனக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்து உள அமைதி பெற வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனின் பொருளாதார நிலையையும் வசதி வாய்ப்புக்களையும் விருப்பு – வெறுப்புக்களையும் நன்கு விளங்கி அதற்கு ஏற்ற, பொருத்தமான வாழ்க்கையமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டைப் போல் தாமும்கட்டுவதற்கோ அடுத்தவர்கள் வாங்கியிருக்கும் வாகனத்தைப் போன்று தாமும் வாங்குவதற்கோ நாட்டம் கொள்வது அறிவுடைமையாகாது. தமக்கு அல்லாஹ் வழங்கியவற்றில் முழுத் திருப்தி காண வேண்டும். இந்த சிந்தனைப் பாங்கைத்தான் அல்குர்ஆன் மனித உள்ளங்களில் வளர்த்திட முற்படுகிறது.
காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று எமக்கும் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? நிச்சயமாக அவன் பெரும் பாக்கியமுடையவன்’ என்று இவ்வுலக வாழ்வை விரும்பியோர் கூறினர். அவர்களில் அறிவு வழங்கப்பட்டோர் ‘உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இறை நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் கூலியே மிகச் சிறந்ததாகும். பொறுமையாளர்களுக்கே அது வழங்
கப்படும்’ என்று கூறினர். ஆகவே, அவனையும் அவனது மாளிகையையும் பூமிக்குள் விழுங்கச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் எந்தக் கூட்டத்தாரும் அவனுக்கு இருக்கவில்லை. அவன் தன்னைத் தற்காத்துக் கொள்வோரிலும் இருக்கவில்லை. நேற்று அவனது அந்தஸ்தை ஆதரவு வைத்தோர் ‘அந்தோ கைசேதமே! அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகிறான். அல்லாஹ் எமக்கு அருள்
புரிந்திருக்கா விட்டால் எம்மையும் பூமிக்குள் விழுங்கச் செய்திருப்பான்’ என்று கூறுவோராக மாறினர்.” (28: 79 – 82)
உலகத்தின் அடைவுகளை அல்லாஹ்வின் அன்புக்கோ உலகத்தின் இழப்புக்களை அல்லாஹ்வின் அதிருப்திக்கோ சம்பந்தப்படுத்த முடியாது.
மனிதனை அவனது இறைவன் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருள் புரிந்தால் அவன், ‘என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று கூறுகிறான். இன்னும், அவன் அவனை சோதித்து, அவனது வாழ்வாதாரத்தை அவனுக்கு நெருக்கடியாக்கி விட்டால் ‘என் இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்’ எனக் கூறுகிறான்.” (89: 15 – 16)
உள்ளதைக் கொண்டு திருப்தி காணாத மனோநிலையானது அல்லாஹ்வைப் பற்றிக் கூட பிழையான புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தீனார், திர்ஹம், பழங்கள், துணிமணிகள் ஆகியவற்றின் அடிமையாக இருப்பவன் நாசமாகி விட்டான். அவன் கொடுக்கப்பட்டால் திருப்தியடைகிறான். கொடுக்கப்படவில்லை எனில், திருப்தியடைய மாட்டான்.” (அல்புகாரி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களுக்குக் கீழே வசதி வாய்ப்பில் குறைவாக உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலே உள்ளவர்களை நீங்கள் பார்க்காதீர்கள். உங்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகளை நீங்கள் குறைவாக மதிக்காமல் இருக்க இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.” (அல்புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மனைவிகள் நபிகளாரைச் சூழ்ந்து கொண்டு குடும்பச் செலவுக்குக் கூடுதலான தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பேச முடியாத அளவுக்குத் துக்கம் மேலிட்டவர்களாக நபியவர்கள் அமைதி காத்தார்கள். அப்பொழுது அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்:
“நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புவதாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு நான் வாழ்க்கை வசதிகளை வழங்கி, அழகான முறையில் உங்களை விடுவித்தும் விடுகிறேன் என்று நபியே! நீர் உமது மனைவியரிடம் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை வீட்டையும் விரும்புபவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களில் நன்மை செய்வோருக்கு மகத்தான கூலியைத் தயார் செய்து வைத்துள்ளான் என்றும் கூறுவீராக!” (33: 28 – 29)
இந்த நிகழ்வு பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய துணைவியருக்கு அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம் அல்லது பிரிந்து விடலாம் என உரிமை அளித்து விடுமாறு தன்தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம்தான் முதன் முதலாக விஷயத்தைச் சொன்னார்கள். ஆயிஷாவே! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்” என்று கூறினார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பிரிந்து விடும்படி எனக்கு உத்தரவு இடப்போவதில்லை என்பதை நபிகளார் அறிந்திருந்தார்கள். பிறகு அவர்கள் இந்த (33: 28 – 29) இரு வசனங்களையும் முழுமையாக ஓதிக் காட்டினார்கள். அப்போது நான் “இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று நபிகளாரிடம் கூறினேன். (அல்புகாரி)
மற்றோர் அறிவிப்பில் “பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மற்ற மனைவிமாரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்” என்று ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (அல்புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவத்திற்கு முன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நபியான பின்னர் எந்தத் தொழிலிலும் ஈடுபட்டதாகத் தகவல் எதுவுமில்லை. சமூகப் பொது நலனையும் சில நெருக்கடிகளையும் தேவைகளையும் சந்தர்ப்ப சுழல்களையும் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்து பல பெண்களை மணமுடித்துக் கொண்டார்களே தவிர, நபித்துவப் பணிச் சுமைகளின் காரணத்தால் பொருளீட்டும் வாய்ப்பு அன்னாருக்குக் கிடைக்கவில்லை. மக்காவில் இருக்கும் வரை பெரிய தந்தை அபூதாலிப், துணைவி கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) போன்றோரின் அரவணைப்பில் நாட்கள் கழிந்தன.
மதீனா சென்ற பிறகு அன்சாரித் தோழர்கள் வழங்கிய அன்பளிப்புகள், அண்டை வீட்டினர் கொடுத்த இரவல் கறவை ஒட்டகங்கள் மூலம் குடும்பத்தாரின் பசியை ஓரளவுக்குப் போக்கினார்கள். பல நாட்கள் நபிகளாருடைய துணைவியர் இல்லங்களில் அடுப்பு எரிந்ததில்லை. சில பேரீச்சம் பழத் துண்டுகளும் தண்ணீரும்தான் அவர்களின் உணவாக இருந்தன. பல சமயங்களில் அந்த போதாக்குறையான உணவு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இஸ்லாமிய தூதை மனித குலத்திற்கு சமர்ப்பித்திட வேண்டும் என்ற இலக்கில்தான் அன்னாரின் முழுக் குடும்பமும் நெறிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று போல் இன்று தொடராக இரண்டு நாட்கள் பசியோடு வயிற்றை வெறுமையாக்கிக் கொண்டு வாழ்கின்ற எந்தக் குடும்பத்தையும் நாம் காண முடியாது. ஆனால், அன்றைய ஆண்களும் பெண்களும் அத்தகைய வாழ்க்கை அமைப்பை முழுத் திருப்தியோடு ஏற்றுக் கொண்டார்கள்.
முஸைனா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் கூறுகிறார்: என் தாய் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மக்கள் உதவி கேட்பது போன்று நீயும் அவர்களிடம் சென்று கேட்க வேண்டியதுதானே!” என்று கூறினார். அவ்வாறே நானும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உதவிகேட்பதற்காக சென்றேன். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நின்றபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். “யார் பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தேவையற்றவராகவே ஆக்குவான். ஐந்து ஊக்கியா அளவுக்கு உணவுப் பொருளைப் பெற்றவர் மக்களிடம் யாசித்தால் அவர் மக்களிடம் வற்புறுத்தி யாசித்தவராகி விடுகிறார்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
இதைக் கேட்ட நான் என் மனதிற்குள் ஐந்து ஊக்கியா அளவின் மதிப்பைவிட அதிக மதிப்புள்ள ஓர் ஒட்டகம் நம்மிடம் இருக்கிறதே! நம் அடிமையிடமும் ஐந்து ஊக்கியா அளவின் மதிப்பைவிட அதிக மதிப்புள்ள ஓர் ஒட்டகம் இருக்கிறதே! என்று கூறிவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உதவி ஏதும் கேட்காமலேயே திரும்பி விட்டேன். (முஸ்னத் அஹமத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுப் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “ஒருவர் முஸ்லிமாகி அவரின் உணவுத் தேவை போதுமான அளவு இருந்து, அவருக்கு அல்லாஹ் வழங்கியதைப் போதுமாக்கிக் கொண்டால் அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்.” (ஸஹீஹு முஸ்லிம்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக உபைதுல்லாஹ் இப்னு முஹ்ஸின் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களில் ஒருவர் தன் உயிருக்கு அச்சமற்று இருப்பவராகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் அன்றைய தேவைக்கு உணவு உள்ளவராகவும் இருந்தால் அவர் உலக இன்பங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர் போலாவார்.” (அத்திர்மிதி)
“உங்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் வாழ்வாதாரத்தில் சிறப்பித்துள்ளான்.” (16: 71)
எகிப்து ஆளுநராக இருந்த அபூமூஸா அல்அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: ”இவ்வுலகில் உமக்கு வழங்கப் பெற்ற வாழ்வாதாரத்தைக் கொண்டே திருப்தியடைந்து கொள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் சிலரை விடச் சிலரை வாழ்வாதாரத்தில் மேன்மைப்படுத்தியுள்ளான். இதன் மூலம் ஒவ்வொருவரையும் அவன் சோதிக்கிறான்…” (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்)
“உங்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ற பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ற பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” (4: 32)
இந்த வசனம் மனோதத்துவ ரீதியான ஒரு மிகப் பெரிய உண்மையை உணர்த்துகிறது. அதாவது, பிறரிடம் இருப்பவை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசை கொள்வதோ, பொறாமை அடைவதோ, மனத் தாக்கத்திற்கு உட்படுவதோ உள ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளாகுவதோ முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. பொருளாதாரத்தில், கல்வியில், வியாபாரத்தில், பட்டம் பதவிகளில் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் எவரையும் பார்த்து நாம், ‘நமக்கும் அப்படி இருக்க வேண்டுமே’ என்று ஏங்கித் தவிக்க கூடாது.
ஏனெனில், அல்லாஹ் உலக ஒழுங்குக்காக இப்படித்தான் சிலரை மற்றும் சிலரிலிருந்து மேன்மைப்படுத்தியுள்ளான். அதற்கு எதிராக நாம் சிந்தித்தால் அல்லாஹ்வின் நீதியை சந்தேகம் கொண்டவர்களாக ஆகிவிடுவோம். அது பெரும் பாவமாக மாறி விடும். நாவினால் மொழிந்தால் இறைநிராகரிப்பாகக்கூட கருதப்படலாம். ஒவ்வொருவரையும் அந்தந்த தரத்தில் அமைத்திருப்பது அல்லாஹ்வின் நுட்பமான அறிவைப் பின்னணியாகக் கொண்டமைந்ததாகும்.
அல்ஹஸனாத், ஜனவரி 2020