முஸ்லிம்களும் தொற்று நோயும்- அத்தாஊனுல் அஸ்வத்: ஒரு வரலாற்று நோக்கு

அப்துல் மலிக் அபூபக்கர்

அல்லாஹுத் தஆலா மனிதர்களை இன்பங்களையும் துன்பங்களையும் கொண்டு சோதிப்பான் எனும் இஸ்லாத்தின் அடிப்படை வாழ்க்கை விதியை நினைவுகூருகின்ற தருணம் இது. இஸ்லாமிய உலகு படையெடுப்புக்கள் வழியாக எதிர்கொண்ட பேரழிவுகளைப் போன்று தொற்று நோய்கள் மூலமும் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளது. கி.பி. 1258இல் ஈராக் மீது மொங்கோலியர்கள் மேற்கொண்ட படையெடுப்பின் கொடூரம் பற்றி இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் (மரணம் 1373) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

ஆக்கிரமிப்புப் படையின் கொடூரங்கள் அரங்கேறி நாற்பது நாட்கள் கடந்து விட்ட நிலையில் பக்தாத் வெறும் இடிபாடுகளாக காட்சியளித்தது. ஓர் இருவரைத் தவிர மயான அமைதி ஆட்கொண்ட மனித நடமாட்டமற்ற இடமாக அது தோற்றமளித்தது. சிறு சிறு குன்றுகள் போன்று சடலங்கள் குவிந்து வீதிகளை நிரப்பியிருந்தன. மழை பெய்ததனால் உருக்குலைந்த சடலங்களிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது. மறுபக்கம், காற்று மாசடைந்து தொற்றுநோய் பரவ ஆரம்பித்தது. இதன் விளைவாக ஏராளமானோர் மரணித்தனர். விலையேற்றமும் பட்டினியும் பேரழிவை ஏற்படுத்தி மக்களை வதைத்தன.

தொற்று நோய் பனூ இஸ்ரவேலர்களை தாக்கியதாக இமாம் தபரி (மரணம் 923) பதிவு செய்துள்ளது என்ற தகவல் இஸ்லாமிய இலக்கியத்தில் முதன் முதலாக தொற்று நோய் பற்றி வெளிவந்த தகவலாகும். உஸாமா பின் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்த ஹதீஸிலும் இவ்விடயம் கூறப்பட்டுள்ளதாக இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார். அபூ உபைதா மற்றும் முஆத் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ‘அம்வாஸ்’ எனும் தொற்று நோய் உட்பட பல வகையான தொற்று நோய்த் தாக்கங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அப்போது முஸ்லிம்கள் பல்வேறு இழப்புகளுக்கு மத்தியிலும் கொள்ளை நோய்த் தாக்கத்தை ஈமானிய ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் நாகரிக ரீதியிலும் எதிர்கொண்டனர். தொற்று நோய் குறித்த எழுபதுக்கு மேற்பட்ட பிரபல இலக்கியங்கள் இன்றும் அரபு நூல்களாக உயிர் வாழ்கின்றன. இதில் முஸ்லிம் வைத்திய பேரறிஞர்கள் எழுதிய ஆக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷீறவைஹி மன்னனின் காலத்தில் (கி.பி. 628இல்) பாரசீகத்தில் பரவிய தொற்று நோய் தொடர்பாக நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த ஸீரா துறை அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

கறுப்புக் கொள்ளை நோய் (அத்தாஊனுல் அஸ்வத்- Black Death)

இக்கட்டுரை கி.பி. 1348- 1349 இற்கிடையில் உலகில் பரவி முஸ்லிம் ஸ்பெய்ன் மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளை பேரழிவுக்குட்படுத்திய ‘அத்தாஊன் அல்அஸ்வத்’ என அழைக்கப்பட்ட பெரும் ‘கறுப்புக் கொள்ளை நோய்’ பற்றி ஆராய்கின்றது. ஐபீரியா தீவை முடக்கிய இந்நோய் கோடிக்கணக்கானோரின் உயிர்களைப் பலியெடுத்தது.

இது குறித்து இஸ்லாமிய சமூகவியல் பேரறிஞர் அப்துர் ரஹ்மான் இப்னு கல்தூன் (கி.பி. 1332- 1406) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“இந்த கறுப்புக் கொள்ளை நோயின்; காரணமாக சமூகத்தின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், அறிஞர்கள் உட்பட எனது தாயும் தந்தையும்… என பல இலட்சக்கணக்கானோர் அழிந்து விட்டனர். அபிவிருத்தியின் அடையாளச் சின்னங்களாக மிளிர்ந்த அழகிய கட்டிடங்கள் கைவிடப்பட்டு அழிந்து போயின. நகரங்களும் வீடுகளும் வெறிச்சோடிக் கிடந்தன. நாடுகளும் கோத்திரங்களும் பலவீனமடைந்தன.”

மொறோக்கோவின் முன்னணி நாடுகான் அறிஞர் முஹம்மத் பின் பதூதா (கி.பி. 1306- 1369) சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு மொறோக்கோ திரும்பும் வேளையில் இது பற்றி அறிந்ததாக தெரிவித்துள்ள அவர், கெய்ரோவில் மாத்திரம் ஒரே நாளில் இருபத்தோராயிரம் பேர் அதனால் மரணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்னு பதூதாவின் தாயாரும் இந்தக் கொள்ளை நோயினால் மரணித்திருந்தார்.

தொற்று நோய் இலக்கியம்

தொற்றுநோய் தொடர்பாக முஸ்லிம் ஸ்பெய்னின் பெரும் இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் வைத்தியர்களுமான மூவரினதும் மேலும் இரு இஸ்லாமிய அறிஞர்களும் எழுதிய மருத்துவ நூல்கள் கீழ்வருமாறு:

1. லிஸானுதீன் இப்னுல் கதீப் (மரணம் 1374)- “முக்னிஅதுஸ் ஸாயில் அனில் மரழில் ஆயில்”

2. அஹ்மத் இன்னு காதிமா அல்அன்ஸாரி (மரணம் 1369)- “தஹ்ஸீலுல் கரழில் காஸித் பீ தப்ஸீலில் மரழில் வாபித்”

3. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலி அஷ்ஷக்கூரி (மரணம் 1374)- “அந்நஸீஹா”

4. அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (மரணம் 1449)- “பத்லுல் மாஊன் பீ பழ்லித் தாஊன்” எகிப்தைச் சேர்ந்த இவர் ஹதீஸ் துறை அறிஞராவார்.

5. முஹம்மத் அர்-ரஸ்ஸாஃ (மரணம் 1489): தூனீஷியாவைச் சேர்ந்த பிக்ஹ் துறை அறிஞரான இவர் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, தொற்று நோய்கள் பற்றி விளக்கியுள்ளார். “அல்அஜ்விபதுல் தூனீஷியா அனில் அஸ்யிலதில் கர்னாதிய்யா” என்பதே இவர் நோய் பற்றி எழுதிய நூலாகும்.

தொற்று நோய் சம்பந்தமாக நூல்களை எழுதிக் கொண்டிருக்கும்போதே மரணத்தை தழுவிய அறிஞர்களும் இருந்துள்ளனர். தாஜுதீன் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸுப்கி (மரணம்- 1370) ஷிஹாபுத்தீன் அஹ்மத் பின் யஹ்யா பின் அபீ ஹஜ்லா அத்தல்மஸானி (மரணம்- 1375), வரலாற்றசிரியர் ஸைனுதீன் உமர் பின் முழப்பர் இப்னுல் வர்தீ (மரணம்- 1249), ஸலாஹுத்தீன் அஸ்ஸப்தீ (மரணம் 1363), கவிஞர் இப்றாஹீம் பின் முஹம்மத்- இப்னுத் தக்தக்ஜீ (மரணம்- 1719) ஆகியோர் இவ்வாறு மரணித்தோராவர்.

தொற்று நோய் மையம்

1348இல் இந்த தொற்று நோய் மத்திய ஆசியாவின் பரந்த புற்தரை பிரதேசங்களிலிருந்தே (Steppes) பரவியது. சிலர் மொங்கோலியாவே இந்த மையம் என வரையறுத்துள்ளனர். அங்கிருந்தே இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, மத்திய தரைக் கடற்பிரதேச நாடுகளுக்கு வந்தடைந்து பின்னர் சிரியா, எகிப்து, இத்தாலி போன்ற துறைமுகங்களுக்கூடாக முஸ்லிம் ஸ்பெய்னுக்கு 1347இல் வருகை தந்த கப்பல்களிலிருந்தே அது பரவத் தொடங்கியது.

அறிகுறிகள்

இந்த தொற்று நோய் பரவத் தொடங்கி உச்ச கட்டத்தை அடைந்தது. அப்போது குறித்த நோய்த் தாக்கத்திற்குட்பட்ட ஒருவர் மற்றொருவரை தொட்டால் அவரும் அவ்வாறே பாதிக்கப்பட்டார். நோய்த் தாக்கத்திற்குட்பட்டவரது உடலில் எங்கிருந்தாவது இரத்தம் வெளியேறியிருந்தால் அதே பாதிப்பு தொடுகைக்குட்பட்டவருக்கும் ஏற்பட்டது. நோயாளியின் உடலில் ஏதாவதொரு பகுதியில் வீங்கியிருந்தால் தொடுகைக்குட்படும் அடுத்தவருக்கும் வீக்கம் ஏற்படும். நோயாளியின் காயங்களிலிருந்து கீழ் வெளியேறியிருந்தால் தொடுகைக்குட்படும் மற்ற நபருக்கும் சீழ் வெளிவரும்.

அதிகூடிய நாடித் துடிப்பு, உடல் மெலிவுடன் கூடிய காய்ச்சல், தலை, கால், கைப் பகுதிகளில் கடுமையான குளிர்ச்சியை உணர்தல், நாக்கு கறுப்படைதல் மற்றும் முரசு வீக்கமடைதல் என்பன அன்று ஏற்பட்ட கொள்ளை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகவும் தோல் பகுதியிலிருந்து இரத்தம் கசிதல், உமிழ் நீருடன் இரத்தம் கலந்து வெளிவருதல், சிறுநீர் இரத்தமாக வெளியேறுதல்… என்பன அதன் இறுதிக் கட்ட அறிகுறிகளாக காணப்பட்டதாகவும் இம்மூன்று ஆபத்தான அறிகுறிகளுடன் நோயாளி மரணித்து விட்டதாகவும் முஸ்லிம் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காரணியும் காவியும்

மொங்கோலியாவில் இத்தொற்று நோய் ஒரு பக்ரீயா மூலம் பரவியது. அது எலிகளையே தாக்கியது. அங்கிருந்து புறப்பட்ட கப்பல்களே பக்ரீரியாக்களையும் எலிகளையும் சுமந்து சென்று மனிதர்களுக்கு கொள்ளை நோயைப் பரப்பின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பக்ரீரியா நிபுணர் அலெக்ஸாண்டர் யெர்ஸின் 1894இல் இக்கொள்ளை நோய்க்கு பாசிலஸ் (Bacillus) எனும் பக்ரீரியாவே காரணம் என்பதை பலருடன் இணைந்து கூட்டாக கண்டுபிடித்தார். இது யெர்ஸின் பக்ரீயா எனவும் அழைக்கப்படுகின்றது.

கோள்களும் நட்சத்திரங்களும் நகரும்போது விண்ணுலகில் ஏற்படும் மாற்றம் காற்றின் மீதும் மனித உடல்கள் மீதும் மனித வாழ்க்கையின் மீதும் தாக்கம் செலுத்துகின்றது. இந்த நகர்வுகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதாக முஸ்லிம் ஸ்பெய்ன் வானவியல் அறிஞர்களும் விளக்கியிருந்தனர். கோள்களிலிருந்து வெளிக் கிளம்பும் தீச் சுவாலைகள், ஒளிக்கீற்றுக்கள், எரிகற்கள் என்பன வான் மண்டலத்தில் ஒன்றுடனொன்று சந்திக்கும்போது புவியிலுள்ள காற்று மாசடைகின்றது. காற்று அசாதாரண நிலைக்குள்ளாகியமை இத்தொற்று நோய் பரவுவதற்கான காரணம் எனவும் அந்தலுஸ் வைத்தியர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். அந்நோய் சில இடங்களில் அன்று பரவவில்லையே ஏன்? என்ற கேள்விக்கும் அவர்கள் பதிலளித்துள்ளனர். வேறுபட்ட புவியியல் அமைவிடங்கள், காற்று, மழை என்பவற்றின் அளவில் வித்தியாசம், மற்றவர்களை விட விதிவிலக்கான உணவுப் பழக்கம், நடத்தை பழக்க வழக்கங்களை கொண்டிருந்த நாடுகளில் இந்த நோய் பரவவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிய ஒருவரை பராமரித்த குடும்பத்திலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்படவில்லையே ஏன்? என வினவப்பட்டபோது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நோயை உள்வாங்கும் தயார் நிலைக்கு (இஸ்திஃதாத்) ஏற்ப அது தாக்கும் என பதில் கூறினர். நோயை உள்வாங்கும் தயார் நிலை குறைவாக இருப்பவரிடம் நோயெதிர்ப்புச் சக்தி பலமாக இருக்கும். ஆனால், பலவீனமான ஆரோக்கியத்தைக் கொண்டவர்களிடம் நோயை உள்வாங்கும் தயார் நிலை நிறையவே இருக்கும்.

உடலின் நான்கு திரவங்களது (Four Humors) சேர்க்கையின் சம அளவு சீராக செயற்படும்போது ஆரோக்கியம் நேர்த்தியாக இருக்குமென முஸ்லிம் ஸ்பெய்ன் வைத்தியர்களும்  கூறியுள்ளனர். இரத்தம் (Blood), சளி (Phlegm), ஈரலுடன் தொடர்புபட்ட பித்த திரவம் (Black Bile) மற்றும் மன்ணீரலுடன் சம்பந்தப்பட்ட திரவம் (Yellow Bile) ஆகிய நான்கும் உரிய விகிதாசார அளவைக் கொண்டிராதபோது மனிதனின் நோய் உள்வாங்கும் தயார் நிலை அதிகரிக்கின்றது. இவ்வாறானவர்களே அன்று தொற்று நோய் அபாயத்துக்குட்பட்டிருந்தனர் என்பதே அன்றைய வைத்தியர்களின் நிலைப்பாடாகும்.

தொற்று நோய் குறித்த கலந்துரையாடல்

நோய் ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தானாக பரவுவதை இமாம் இப்னுல் ஹஜர் அங்கீகரிக்கவில்லை. அது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானதென அவர் கருதுகிறார். வரலாற்றில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் முக்கிய தரப்பாக அறியப்பட்ட அஷ்அரீ அறிஞர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். காரண காரியங்களுக்கிடையிலான தொடர்பு மனித வழக்கில் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்ததாகும். நெருப்பு தானாக தீப் பிடிக்க மாட்டாது. ஆனால் மனித வழக்கில் நெருப்பு என்றாலே எரியும் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய தொடர்பே ஆகும். மனிதர்கள் வழக்கில் எதனைக் கூறினாலும் எல்லாப் படைப்புக்களுக்குமிடையிலுள்ள காரண காரிய தொடர்பை அவனே தோற்றுவிக்கின்றான். மரம் என்றால் கனி தரும். மரத்துக்கும் கனிக்குமிடையில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள தொடர்பை அவனைத் துண்டித்து விட்டுக் கூற முடியாது. அல்லாஹ் இவ்வாறு தொடர்ந்தும் படைப்புக்களின் விவகாரங்களையும் செயல்களையும் பராமரித்து வருகின்றான் என்பதே அஷ்அரீ அறிஞர்களின் வாதமாகும். தொற்று நோய் தானாகவே பரவுகின்றது என வாதித்த வைத்தியர்களின் கருத்தை முஹம்மத் றஸ்ஸாஃ கண்டித்துள்ளதுடன் அவர் இமாம் இப்னு ஹஜரின் அணியில் இணைந்துள்ளார்.

“தொற்று நோய் இல்லை” (முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல்- 10406) என கூறப்பட்ட ஹதீஸுக்கும் “சுகதேகியிடம் நோயாளி சமுகமளிக்க வேண்டாம்” (ஸஹீஹுல் புகாரி, கிதாபுத் திப், பாபு லா ஹாமத- 5461) என தெரிவிக்கப்பட்டுள்ள ஹதீஸுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த இமாம் இப்னு ஹஜர் குறிப்பிட்டவாறு இஸ்லாமிய நம்பிக்கைக்குட்பட்ட வகையில் இரு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

01 தோற்று நோய் தானாக பரவுவதே கிடையாது. அது பரவுவதாக கூறப்படுவது மனித வழக்கில் பழகிப் போயுள்ளது. நெருப்பு என்றாலே சுட்டெரிக்கும் என்பது போலவே தொற்று நோய் என்றாலே பரவும் என்ற மனப் பதிவு மனித வழக்கில் தோன்றியுள்ளது. இமாம் இப்னு ஹஜர் இது விடயத்தில் இமாம் பைஹகீ அவர்களின் கூற்றை முன்வைக்கின்றார்.

செயல்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் உரித்தானது என்ற நம்பிக்கை ஜாஹில்லிய்யாக் காலத்தில் பரவலாக காணப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கையை முறியடிக்கும் நோக்கிலேயே “தொற்று நோய் இல்லை” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குறிப்பிட்டார்கள். தொற்று நோய் பரவுவதல் உட்பட எல்லா செயல்களுக்கும் கர்த்தாவாக இருப்பவன் அல்லாஹ் மாத்திரமே. இன்பமும் துன்பமும் அல்லாஹ்விடமிருந்துள்ள சோதனை என்ற வகையில் சுகதேகி ஒருவர் நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ள ஒருவரை சந்திப்பது, அந்நோய் தொற்றுவதற்கான ஒரு காரணமாக அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வுலகின் சோதனைக்குரிய பல நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வழிகாட்டிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வேளையிலும் ஆரோக்கிய வாழ்வை முன்னிலைப்படுத்தியதன் காரணமாககவே “சுகதேகி உள்ள இடத்திற்கு நோயாளி வருகை தர வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்கள். இதுவே இமாம் பைஹகீயின் கருத்திலிருந்து புரியப்படுகின்றது.

02. தொற்று நோய் என்றாலே பரவும் என்ற மனப்பதிவு மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள போதிலும் அது தானாக பரவுவதில்லை. இக்கருத்தை இப்னு ஹுஸைமா வழியாக இப்னு ஹஜர் கொண்டு வருகின்றார். பைஹகீயின் நிலைப்பாட்டை விட இதனை மேலானதாக அவர் எடுத்துள்ளார். “சுகதேகியின் இடத்திற்கு நோயாளி வருகை தர வேண்டாம்“, “தொழு நோயாளியை விட்டும் விரண்டோடுங்கள்” (அஸ்ஸுனனுல் கபீர்- அல்பைஹகீ- கிதாபுந் நிகாஹ்- 13350) போன்ற ஹதீஸ்களைப் பொறுத்தவரை மகத்தான ஞானத்துடனேயே நபியவர்கள் வழிகாட்டியுள்ளார். தொற்று நோய் உச்சத்தை அடையும்போது நோயாளியிடமிருந்து விலகிச் செல்லாது கூட்டாக இருந்தமையே நோய் பரவ வழிவகுத்தது எனும் எண்ணம் முஸ்லிம்களிடம் வந்து விடலாம் என்பது கவனத்திற் கொள்ளப்பட்டு இரண்டு ஹதீஸ்களும் கூறப்பட்டிருக்காலம். தோற்று நோயை அல்லாஹ் அல்லாத வேறு யாரோ பரப்புகின்றனர் எனும் ஜாஹிலிய்யாக் கால விளக்கத்தின்பால் முஸ்லிம்கள் சென்று விடக்கூடாது என்பதும் கருத்திற் கொள்ளப்பட்டு இவ்விரு ஹதீஸ்களும் கூறப்பட்டிருக்க முடியும்.

இவ்விரு நிலைப்பாடுகளும் இஸ்லாமிய நம்பிக்கைக்கு உட்பட்டவாறே விளக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் தனது அகீதாவை அடிப்படையாகக் கொண்டே உலக விவகாரங்களை நோக்க வேண்டும் என்பது இமாம் இப்னு ஹஜரின் விரிவுரையிலிருந்து புரிகின்றது. ஹிஜ்ரி 749 (கி.பி. 1348) தொற்று நோயின் அகோரம் பற்றி அவர் எழுதியுள்ள வரலாற்று உண்மையும் அவர் யதார்த்தத்தை புரிந்து கொண்டு வரைந்த வரலாற்றுத் தகவலாகும். தொற்று நோய் அல்லாஹ்வின் சோதனையாக இருந்தாலும், அறிவின்மை காரணமாக அதற்குள் தன்னை வீழச் செய்வதால் இழப்பே அதிகம் ஏற்படும் என இமாம் இப்னு ஹஜர் விளக்குகின்றார். மனித உயிர்களைக் காப்பதே இஸ்லாமிய ஷரீஆன் முக்கிய நோக்கு என அவர் வலியுறுத்துகின்றார். தொற்று நோயை விட்டும் தூரமாக இருக்க வேண்டும் என்பது மேற்கூறப்பட்ட இரு ஹதீஸ்களின் அறிவுரை என்பதனை பின்வரும் அவரது கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

“அன்று ஏற்பட்ட தொற்று நோயிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொருவரும் பிரார்த்தித்தனர். ‘கத்ர்’ எனும் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக்கும் துஆப் பிரார்த்தனைக்குமிடையில் முரண்பாடு கிடையாது. ஆனால், மழை வேண்டி தொழுவது போன்று தொற்று நோயை விலக்க பிரார்த்தனை செய்ய கூட்டாக ஓரிடத்தில் ஒன்று சேர்வது நபியவர்களால் வழிகாட்டப்படாத நூதன செயல் (பித்அத்) ஆகும். ஹிஜ்ரி 749இல் (கி.பி. 1348) டமஸ்கஸில் பெரும் தொற்று நோய் பரவல் தொடர்ந்தபோது இவ்வாறான ஒரு பித்அத் அரங்கேறியுள்ளது. அல்மன்பஜி (முஹம்மத் ஷம்ஸுதீன் அல்மன்பஜி – மரணம் 1383) அவர்களது நூலில் தான் வாசித்ததாக இமாம் இப்னு ஹஜர் அச்சம்பவம் தொடர்பாக விளக்குகின்றார். பெரும் தொற்று நோயின்போது அல்மன்பஜி அவர்கள் மக்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதை தடுத்தபோதிலும் அவர்கள் செவிமடுக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி கூட்டமாக இருந்து உரத்த தொனியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சாதாரண மனிதர்களுடன் பெரும்பாலான முக்கியஸ்தர்களும் பாலைவனத்தில் கூட்டமாக ஒன்றிணைந்து அல்லாஹ்விடம் உதவி கோரினர். இதனையடுத்து தொற்று நோய்ப் பரவல் உக்கிரமடைந்தது. இதற்கு முன்னர் நோய் சாதாரணமாகவே காணப்பட்டது” என இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் மூன்று பெண் மக்களும் இக்கொள்ளை நோயில் மரணித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“ஹிஜ்ரி 883இல் (கி.பி. 1430) கெய்ரோவில் முதல் முறையாக தொற்று நோய் பரவ ஆரம்பித்தபோது மரணித்தவர்களின் எண்ணிக்கை நாற்பதை விட குறைவாகவே காணப்பட்டது. மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பின்னர், ஜுமாதுல் ஊலா மாதம் நான்காம் நாளில், மழை வேண்டி தொழுவதற்காக ஒன்றுகூடுவது போன்று பெருந் தொகையான மக்கள் பாலைவனத்தில் ஒன்றுகுழுமி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனையடுத்து கெய்ரோவில் மரணித்தோரின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை விடவும் அதிகரித்தது” என இரண்டாவது அனுபவத்தை இமாம் இப்னு ஹஜர் பகர்கின்றார். தொற்று நோயின்போது மாத்திரமல்ல, எந்த சோதனையின்போதும் மனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உரிய சடரீதியான ஒழுங்குகளை முடியுமான வரை மேற்கொள்ள வேண்டும் எனும் இமாம் இப்னு ஹஜரின் இந்த அறிவிப்பு படிப்பினை தருகின்றது.

ஒரு நோய் தொற்றாக இருக்குமா அல்லது ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தொற்றிக் கொள்ளுமா என்பதை (நீதியான இரண்டு சாட்சிகள் போன்று) நீதியான இரு வைத்திய நிபுணர்கள் உறுதி செய்யலாம். அதனை முஸ்லிம்கள் அங்கீகரிக்க முடியும் என அல்காழி தாஜுத்தீன் சுப்கி (மரணம் 1370) நீதித் துறை ஒழுங்கிற்கமைவாக கூறியுள்ளார். இவர் தலைமை நீதிபதியாக இருந்தவர். மார்க்க விவகாரங்கள் அல்லாத உலகியல் விடயங்களில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் ஆகும்.

வைத்திய நிபுணர்களின் கருத்து

முஸ்லிம் ஸ்பெய்னின் வைத்திய நிபுணர்களான இப்னுல் கதீப் மற்றும் இப்னு காதிமா ஆகியோர் தொற்று நோய் பரவும் என்கின்றனர். நோயை உள்வாங்கும் தயார் நிலைக்கு ஏற்ப ஒருவர் தொற்றுக்கு உள்ளாகலாம். அது பலவீனமாக இருக்கும் நிலையில் அவரது நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்குமாயின் அவரை தொற்று நோய் பாதிக்காதிருக்கலாம். இதற்கு இப்னுல் கதீப் அவர்கள் துறவியான இப்னு அபீ மத்யன் என்பவரை உதாரணமாக குறிப்படுகின்றார். ஸலா (ளுயடந)  நகரைச் (இது தற்போது மொறோக்கோவிலுள்ளது) சேர்ந்தவர் அவர். தொற்று நோயின்போது உணவுப் பொருட்களை சேகரித்த பின்னர் தனது வீட்டைச் சூழ பெரும் சுவரைக் கட்டியெழுப்பினார். சன நடமாட்டமுள்ள நகரை விட்டும் வீட்டுக்குள் தனது குடும்பத்தினரை தனிமைப்படுத்திக் கொண்டார். பெரிய குடும்பத்தினரான அவரது உறவினர்கள் தொற்று நோயிலிருந்து தப்பிக் கொள்ளும் வரை இவ்வாறே ஒதுங்கியிருந்தனர். உயரமான வேறு பல இடங்களும் மக்கள் நடமாடும் பிரதேசங்களை விட்டும் தூரமான இடங்களும் தொற்று நோயிலிருந்து தப்பித்துக் கொண்டன. தொற்று நோய் தாண்டவமாடிய பெரு நகரிலிருந்து மிகத் தூரமாக இருந்த இஷபெல்லா (ளுநஎடைடந) சிறைச் சாலையிலிருந்த கைதிகளும் தொற்று நோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

இப்னு காதிமா இன்னுமொரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். அல்மிரியாவின் சன நடமாட்டம் நிறைந்த சந்தையில் தொற்று நோயினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் பெரும்பாலானோர் குறித்த தொற்று நோய்த் தாக்கத்தினால் மரணித்தனர். தம்மை தனிமைப்படுத்தி நோய்த் தாக்கத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத இந்த வர்த்தகர்களில் சொற்ப தொகையினரே உயிர் பிழைத்தனர். படையெடுப்பில் ஈடுபட்டிருந்த நாட்டு மன்னன் அல்பொன்ஸோவின் படை வீரர்களில் அதிகமானோர் 1350இல் இத் தொற்று நோயில் மரணமடைந்தனர். மரணித்தவருக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் இரவில் கூட்டாக விழித்திருக்கும் ஒரு பழக்கத்தின் மூலமும் தொற்று நோய் அன்று பரவியுள்ளது. அன்றிருந்த செல்வந்தர்கள் சனக் கூட்டமுள்ள நகர வாழ்க்கையை கைவிட்ட பின்னர் தமது வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் சென்று ஒதுங்கி வாழ்ந்தனர்.

1347- 1348 காலப் பகுதியில் பதினொரு வயது நிரம்பிய தமது ஸுல்தானுடன் மம்லூகிய ஆட்சிக் குடும்பத்தை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் தொற்று நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள கெய்ரோவின் வடக்கிலிருந்த நோய் பரவாத கிராமங்கள் நோக்கி அடைக்கலம் புகுந்தனர்.

சமூகவியல் நோக்கு

சமூகவியல் கண்ணோட்டத்தில் நோக்குகின்றபோது தொற்று நோய் சனத்தொகைக் கட்டமைப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்தது. சில நாடுகளில் கிராமங்கள் ஆளரவமின்றி வெறுமையாகிக் கிடந்தன. அங்கு விவசாயிகள் பாரியளவில் மரணித்ததால் பயிர்ச் செய்கை ஸ்தம்பிதம் அடைந்தது. அறுவடைகள் பாரியளவில் குறைந்தன. விவசாய உற்பத்திகள் அரிதாகின. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் மற்றும் இறைச்சி உணவுகளும் சந்தைக்கு வரவில்லை. இருந்த உணவுப் பொருட்களையும் பேராசை கொண்ட வியாபாரிகள் பதுக்கத் தொடங்கியபோது விலையேற்றத்தின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உணவின்றி பசிக் கொடுமையினால் பலரும் மடிந்தனர். வறுமைக்குட்பட்டவர்களும் வசதியற்றவர்களும் திருட்டு, தந்திரங்களில் ஈடுபட்டு ஏமாற்று வழிகளில் ஈடுபடத் தொடங்கினர். இந்த நிர்ப்பந்த நிலை ஒழுக்க வீழ்ச்சிக்கும் வழிகோலியது. தொற்று நோயின் அகோரம் உச்சத்திற்கு வந்தது. அதிகமான ஏழைகள் மரணித்தனர். அவர்களது சடலங்கள் அங்குமிங்கும் கைவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களை கபனிட்டு அடக்கம் செய்வதற்கென்று விஷேட நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இக்கொள்ளை நோய் சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு ஒவ்வோர் இடமாக தாக்கியமை குறிப்பிடத்தக்கது. பாரியளவில் செல்வந்தர்களும் உயிரிழந்ததால் நிலச் சுவாந்தர் ஒழுங்கு சரிந்தது. இதனால் பிற்காலங்களில் எஞ்சியிருந்த மக்களுக்கு விவசாய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வளமான வாழ்க்கை வசதிகள் கிடைக்கப் பெற்றதாக பொருளாதார நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர். உமையாக்களின் ஆட்சி களையப்பட்டு அப்பாஸியர்களின் ஆட்சி தோற்றம் பெற அல்லாஹ் யுத்தத்தை காரணமாக்கினான். தொற்று நோயைக் கருவியாகக் கொண்டு பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றிருந்தவர்களை அல்லாஹ் செல்வந்தர்களாக மாற்றியுள்ளதை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாறு நல்லதொரு சான்றாகும். வளங்கள் வாரிக் கொடுக்கப்பட்டவர்கள் தாமாகவே நன்மையை நோக்கிய சமூக மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே அல்குர்ஆனிய வழிகாட்டலாகும். இல்லாவிட்டால், அல்லாஹ் இன்னுமொரு சமூகத்தைக் கொண்டு வருவான். (பார்க்க- ஸூரதுல் பகரா: 11)

ஆட்சிக் குடும்பங்களுக்குள் சண்டை, யுத்தம், வெள்ளம், நிலநடுக்கம், பூகோள உஷ்ணம், வரட்சி, பக்தாதை அழித்த தாத்தாரியர்களே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமை, தொற்று நோய்… என மாற்றத்தை ஏற்படுத்த இறை நாட்டத்திற்கமைய எத்தனையோ கருவிகள் காரணமாக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காப்பு வழிமுறைகள்

“உங்களை நீங்களே அழிவுக்குள் வீழ்த்திக்கொள்ள வேண்டாம்.” (ஸூரதுல் பகரா: 195)

இவ்வசனம் சொல்லும் மொழி ரீதியான கருத்து, சிறு சிறு கஷ்டங்களுக்காக இஸ்லாம் தற்கொலை போன்ற பாவங்களில் ஈடுபடுவதை தடுத்துள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமுள்ள இடங்களுக்குச் சென்று நோய் வாய்ப்படுவதும் தற்கொலை செய்வதைப் போன்றதாகும். தொற்று நோய்யுள்ள ஒருவர் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மத்தியில் சுற்றித் திரிந்து அதனைப் பரப்புவது அவர்களை அழிவுக்கு உள்ளாக்கி கொலை செய்வதற்கு சமமானதாகும். தொற்று நோயாளிகள் நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதே அழிவைத் தடுக்கும். தொற்று நோய் சிரியாவில் பரவியபோது அது அதிகளவில் பரவலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஈரலிப்பான சதுப்பு நிலங்களிலிருந்து தனது படை வீரர்களை தூய காற்றுள்ள மேட்டுப் பிரதேசங்களுக்கு நகருமாறு தளபதி அபூ உபைதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) கட்டளையிட்டார். 

அபூ உபைதா (ரழியல்லாஹு அன்ஹு), முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இந்நோயினால் மரணித்ததையடுத்து தலைமைப் பதவியை ஏற்ற அம்ருப்னுல் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், கூட்டம் கூட்டமாக இருக்காது மலைப் பகுதிகளுக்குச் சென்று பிரிந்து இருக்குமாறு மக்களிடம் வேண்டினார். சில மாதங்களில் இந்நோய் பரவல் தணிந்தது. முடியுமானவரை நோயிலிருந்து மக்களைக் காப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதனையே இந்த மூன்று தளபதிகளினதும் நடவடிக்கைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. மற்ற நோய்களுக்கு வேறு வேறு மருந்துகள் காணப்படுவது போன்று தொற்று நோய்க்கான பிரதான காப்பு வழியாக தனிமைப்படுத்தல் முறை வரலாறு நெடுகிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் பல தொற்று நோய்களை சந்தித்தபோதெல்லாம் தொற்று நோயாளிகள் ஒதுங்கி இருப்பதே சிறந்த வைத்திய முறையென முஸ்லிம் வைத்தியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொற்று நோய்க்கு வைத்தியர்கள் கூறும் சிகிச்சை முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். நோய் அல்லாஹ்வின் சோதனையாக இருப்பது போன்று அவன் அதனைக் குணப்படுத்த வழங்கியுள்ள மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கடமையும் எமக்குண்டு. இங்கு நாம் நோய் என அல்லாஹ் ஏற்படுத்திய ‘கத்ர்’ விதியிலிருந்து அவனே அளித்த மருந்து எனும் ‘கத்ர்’ விதி நோக்கி பயணிக்கிறோம். 1347ஆம் ஆண்டு கொள்ளை நோயின்போது காற்று மாசடைதல் பெரும் காவியாக முஸ்லிம் ஸ்பைன் வைத்தியர்களால் அன்று இனங்காணப்பட்டது. காற்றை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான பல வழிமுறைகளை அன்று அவர்கள் முன்மொழிந்தனர். பசும் மஞ்சள் (Umber), கற்பூரம் (Camphor), சந்தனம் (Sandal), காரைப் புல் (Cyperus) என்பவற்றை நெருப்பிலிட்டு புகை பிடிக்குமாறு கூறினர். சில செல்வந்தர்கள் மாணிக்கத்தால் மோதிரமிடும் ஆச்சரியமான வழக்கத்தையும் கொண்டிருந்தனர். அது நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என அவர்கள் நம்பினர். தொற்று நோய் ஆடம்பர வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியதால் முக்கியஸ்தர்கள் வைத்திய நூல்களையே அதிகம் அன்று படிக்கத் தொடங்கினர். உலர் உணவுகள், தோடை வகை பழங்களையும் இவ்வேளையில் உட்கொண்டு வந்தனர். வெங்காயம், வினாகிரி மற்றும் எள்ளு போன்றவற்றையும் சாப்பாட்டுடன் இணைத்துக் கொண்டனர். குழம்பு வகைகள் மற்றும் பழ வர்க்கங்களைக் குறைத்து நாரங்காய் முதலானவற்றை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினர். இவற்றை விட பிரார்த்தனை சிறப்பானது என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறியுள்ளார். தொற்று நோய் அகல தஸ்பீஹ் செய்யுமாறு இமாம் ஷாபிஈ (ரஹ்) வலியுறுத்தியுள்ளார்.

நோய் மற்றும் வேறு சோதனைகள் எங்களது சக்திக்கு அப்பாற்பட்டு எம்மை பீடிக்கும்போது “ஒரு ஷஹீதுடைய கூலி எமது பொறுமைக்கு கிட்டும்” (ஸஹீஹு முஸ்லிம், கிதாபுல் இமாரா- பாபுஷ் ஷுஹதா- 3652) என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நோய் பரவும் இடங்களுக்கு சுகதேகிகள் செல்லக் கூடாது. தனிமைப்படுத்தலின் ஒழுங்குகளை நோயாளிகள் பேண வேண்டும். ‘தொற்று நோயாளி ஒதுங்கியிருத்தல்’ (அல்ஹஜர் அஸ்ஸிஹ்ஹி) எனும் பிரயோகமே இஸ்லாமிய வைத்திய அறிஞர்களால் பயன்படுத்தப்பட்ட பிரயோகமாகும். உமையா கலீபா வலீத் (கி.பி. 668- 715) காலத்தில் ‘பீமறிஸ்தான்’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட தனிமை வைத்தியசாலைகள் இந்நோக்கில் உருவாக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு காலத்திலும் ஏற்பட்ட தொற்று நோயும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் அவ்வக்கால வைத்திய நிபுணர்கள் கூறும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவது எம்மைக் காக்க உதவும்.

முடிவாக, மிகப் பழைய வரலாறுகள் ஒருபுறமிருக்க, அண்மைக் கால வரலாறுகளை நோக்கினால் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற பாரிய நிகழ்வுகளின் மூலம் அல்லாஹ் பெரும் நாகரிக மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளான் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் முழு உலகையும் தலைகீழாக புரட்டிப் போட்டன. பட்டத்து இளவரசன் மன்னரையும் அவரதும் குடும்பத்தினரையும் சுட்டுக் கொலை செய்ததையடுத்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த நேபாளத்தின் மன்னர் ஆட்சி அழிந்து போனது. ஆப்கான் யுத்த முடிவுடன் சோவியத் யூனியன் எனும் பெரும் சாம்ராஜ்யம் உலக சமநிலையின் ஒழுங்கில் இருந்து மாயமாகிப் போனது. 1347இன் கொள்ளை நோய் ஏற்படுத்திய மாற்றங்களைப் போன்ற இன்றைய கொரோனா வைரஸ் தொற்று நோயும் உலக தலைமைத்துவத்தை மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றும் ஒரு பாணியில் சென்று கொண்டிருப்பதாக பல முன்னணி சிந்தனையாளர்கள் முன்னறிவிப்புச் செய்து வருகின்றனர்.

தெரிவுசெய்யப்பட்ட உசாத்துணைகள்:

 .1 العسقلاني، ابن حجر، بذل الماعون في فضل الطاعون، (تحقيق: أحمد عصام عبد القادر الكاتب)،الرياض، دار العاصمة،……

 .2 ابن خلدون، عبد الرحمن، التعريف بابن خلدون ورحلته غربا وشرقا، بيروت، دار الكتاب اللبناني، 1979.

 .3 السعداوي، أحمد، المغرب الإسلامي في مواجهة الطاعون: الطاعون الأعظم والطواعين التي تلته القرنين 14-15،  http://www.laam.tn/Article/saadaoui/pdf، 06- 04 – 2020.

 .4 القهار، محمد عبد، الطاعون الأسود:مرض معد أم وخز من الجان،  www.ida2at.com، 24- 03 2020.

 .5 فاضل ،عهد، مؤرخون ومؤلفون عرب كتبوا عن الوباء فقتلهم، www.alarabiya.net، 01- 04- 2020.

 .6 كيف تعامل المسلمون مع الأوبئة وآثارها في مراحل تاريخهم، www.islamonline.net/34109, 02-04-2020.

 .7 الهاشمي، عبد القدوس، سرّع بعضها بفتوح الإسلام وسقوط الدولة الأموية وفتك أحدها بـ19 ألف عروس.. الطواعين والأوبئة في التاريخ الإسلامي، www.aljazeera.net/news/cultureandart ، 10-04- 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *