நேரிய வாழ்வு அல்லது அழகிய பிரிவு

அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி)

அதிபர், கதீஜதுல் குப்ரா ம.க, வெலம்பொட

“தலாக் (விவாகரத்துச் செய்தல்) இரு தடவைகள்தாம்! பின்னர் நேரிய விதத்தில் அவர்களை (மனைவியராகவே) வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அழகிய முறையில் அவர்களை விடுவித்துவிட வேண்டும். அவ்வாறு விடுவித்த பிறகு அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த பொருள்களிலிருந்து எதனையும் நீங்கள் திருப்பி வாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.” (2: 229)

வானம்,  பூமி போன்று திருமண பந்தத்தின் மூலம் ஆண்- பெண் இணைவதனால் ஏற்படும் அற்புத மாற்றங்கள் யாவும் அல்லாஹுத் தஆலாவின் அத்தாட்சிகளில் ஒன்றாகும்.

“மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக! மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண் ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.” (30: 21)

இல்லற  வாழ்வின் உயரிய இலக்கு கணவன்-மனைவி இருவரும் உள அமைதி பெறுவதாகும். இவ்வுயரிய இலக்கை இல்லற வாழ்வின் மூலம் அடைந்து கொள்ள முடியாத பட்சத்தில் அழகிய முறையில் கணவன், மனைவி பிரிந்து கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி விளக்கும் ஒரு வசனத்தை இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ளோம்.

மனித குலத்திற்குத் தேவைப்படும் அழகிய வாழ்க்கை நெறியை முன்வைத்துள்ள புனித அல்குர்ஆன் விவாக-விவாகரத்து விடயத்தில் முன்வைத்துள்ள அழகிய சட்ட திட்டங்கள் யாவும் அற்புதமானவையாகும். விவாகரத்து விடயம் தொடர்பில் பேசும் ஸூரதுல் பகராவின் 226-237 வரையான வங்னங்கள், ஸூரதுல் அஹ்ஸாபின் 49வது வங்னம், ஸூரா அத்தலாக்கின் 1-7 வரையான வசனங்களைப் படித்தால் இதனை அழகாகப் புரிந்து கொள்ள முடியும்.

விவாகரத்து சட்டதிட்டங்கள் அழகிய முறையில் விளக்கப்பட்டுள்ள இவ்வசனத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. விவாகரத்துச் செய்தல் இரு தடவைகள், இறுதிக் கட்டமாகிய மூன்றாம் தடவை நேரிய விதத்தில் சேர்ந்துகொள்வது அல்லது அழகிய விதத்தில் பிரிந்து கொள்வது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்ந்து வாழ்வது “இம்ஸாகுன் பிமஃரூபின்” (மஃறூப்) நேரிய விதத்தில் என்றும், பிரிந்து கொள்வது “தஸ் ரீஹுன் பிஇஹ்ஸானின்” (இஹ்ஸான்) அழகிய விதத்தில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சேர்ந்து வாழ்வது என முடிவெடுத்தால் நல்ல முறையில் சேர்ந்து வாழ்வதும் பிரிந்து வாழ்வது என முடிவெடுத்தால் அழகிய முறையில் பிரிந்து கொள்ள வேண்டும் என்பதுவே புனித அல்குர்ஆனின் போதனையாகும். அழகிய முறையில் பிரிந்து கொள்ளும் குடும்பங்களில் பகைமை அகன்று பரஸ்பர புரிந்துணர்வு என்றும் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

கணவன்- மனைவி  பிரிந்து  கொள்வதற்கு  தலாக், பஸ்கு, குல்உ என மூன்று வழிமுறைகளை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. (இவற்றை விரிவாக விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.) கவலைக்குரிய விடயம் என்னவெனில் தலாக், பஸ்கு, குல்உ விடயத்தில் போதிய தெளிவின்மையின் காரணமாக பல தம்பதியினர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காதி நீதிமன்றம் சென்று பிரிந்து கொண்ட பல தம்பதியினர் தாம் எந்த அடிப்படையில் பிரிந்தனர் என்பதைக் கூட அறியாதுள்ளனர். இதனால் சிலர் தமது உரிமைகளை இழக்கின்றனர் அல்லது அநீதிக்குள்ளாக்கப்படுகின்றனர். தலாக், பஸ்கு, குல்உ… எனும் ஒவ்வொரு வழிமுறையும் வெவ்வேறு சட்டதிட்டங்களைக் கொண்டதாகும்.

அழகிய முறையில் பிரிந்து கொள்வது” என்பது தம்பதியினர் குரோதங்கள், வெறுப்புக்கள் இல்லாது பிரிந்து கொள்வதாகும். இரு குடும்பங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்படக் கூடாது என்பது அழகிய பிரிவின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய இலக்காகும். அழகிய முறையில் பிரிந்து கொள்ளும் தம்பதியினர் பிரிவுக்காகக் காதி நீதிமன்றம் நாட வேண்டிய அவசியம் ஏற்பட மாட்டாது. வீண் வழக்கு, வம்பு என அலைக்கழிய வேண்டிய தேவையும் இருக்காது. சட்டப் பதிவுகளுக்காக மாத்திரமே காதி நீதிமன்றம் நாட வேண்டிய தேவை இருக்கும்.

கணவன்- மனைவி இருவருக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமானதாகும். முரண்பாடுகளை இருவராலும் புரிந்துணர்வுடன் தீர்த்துக் கொள்ள முடியாமல், ஒருவர் மற்றவரை வெறுத்து வாழ்வதை விட அழகிய முறையில் இருவரும் பிரிந்து கொள்வது இருவருக்கும் சிறந்த தீர்வாகும். கணவன் தனது மனைவியை வெறுக்கின்ற நிலையில், கணவனுக்கு மனைவியை விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிடின் அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே ஏற்படும் வாய்ப்புண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணவன் மனைவியை விட்டும் பிரிவதற்கு வழி இல்லாவிடின், மனைவியைக் கவனிக்காது துன்புறுத்தக் கூடும். தகாத உறவுகளை நாடிச் செல்லக் கூடும் அல்லது எளிதில் விவாகரத்து பெறுவதற்காக மனைவி நடத்தை கெட்டவள் என்று அவள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடும். அல்லது மனைவியைக் கொலை செய்து விட்டு விபத்து அல்லது  தற்கொலை என்று நாடகமாடக் கூடும். எனவே, பெண்களின் உயிர், உடைமை, மானம், மரியாதை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உயர் நோக்கத்திற்காக விவாகரத்துக்கு இஸ்லாம் அனுமதி வழங்கி அதன் விதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றது.

கணவன்- மனைவிக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை அம்பலப்படுத்தாது அவர்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டலாகும். முதலில் சிறந்த முறையில் அறிவுரை கூறி மனைவியைத் திருத்த முயற்சிக்க வேண்டும். அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து மனைவியை விலக்க வேண்டும். அதுவும் பயன் தராதபோது அடித்துத் திருத்த வேண்டும் என்று புனித அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கிறான்.” (4:34)

மனைவியின் முகத்தில் அடிப்பதையும் காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள்.” (ஸஹீஹுல் புகாரி) 

விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.‘இலேசாக அடியுங்கள்’ என்பது சிலரால் விமர்சிக்கப்பட்டாலும்கூட, அடிப்பது பற்றிப் பேசாத ஏனைய ங்மூகங்களில் பெண்கள் அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசி நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு  புனித அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

“அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான்.” (4: 35)

இந்நடவடிக்கைகள் மூலம் நல்லிணக்கம் ஏற்படவில்லையானால், அவர்கள் இணைந்து வாழ்வதை விட அழகிய முறையில் பிரிந்து கொள்வதுதான் சிறந்ததாகும். ஊர் உலகத்திற்காகப் போலியாக வாழ்வதை விட தாம்பத்திய வாழ்வின் உயர் இலக்காகிய மன அமைதியைத் தரும் வாழ்வைத் தேடுவதே சிறந்ததாகும்.

விவாகரத்து பற்றிப் பேசும் புனித அல்குர்ஆன் வசனங்களை உற்று நோக்கினால் வெறும் சட்டத்தை மாத்திரம் பேசாது, விவாகரத்து சட்டங்களைக் குறிப்பிட்டு வசன முடிவில் மனிதனின் மனச்சாட்சி விழிக்கச் செய்யும் வகையில் இறையச்சத்தை வலியுறுத்தியிருப்பதை கண்டு கொள்ள முடியும். சட்டத்தோடு சேர்த்து ஆன்மிகப் பகுதியை வலியுறுத்திப் பேசும் சட்ட யாப்புக்கள் உலகில் எங்குமில்லை. புனித அல்குர்ஆன் மாத்திரமே சட்டத்தோடு சேர்த்து ஆன்மிகப் பகுதியை வலியுறுத்திப் பேசும் ஒரே யாப்பாகும்.

விவாகரத்து சட்டங்களைப் பேசும் வசனங்கள் மனச்சாட்சிக்கு எதிராக செயற்படுவதைத் தடுத்து ஆன்மிகப் பகுதியை வலியுறுத்தி முடிவுற்றுள்ளதைப் பின்வரும் வசனங்களில் கண்டு கொள்ள முடியும். 

“பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள். அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள். உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும் வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதை எண்ணிப் பாருங்கள். இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”   (2: 231)

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (2: 232)

நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள வசனத்தின் முடிவிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர… அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே, அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.” (2: 229)

நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள வசனம், மனைவியை கணவன் வெறுக்கும் நிலையில் பிரிந்து கொள்வதற்கான வழிகாட்டல் பற்றிப் பேசும் வசனமாகும். கணவனை மனைவி வெறுக்கும் நிலையில் மணவிலக்குப் பெற்று பிரிந்து கொள்வதற்கான வழிகாட்டல் குல்உ மற்றும் நியாயமான காரணங்களுக்காகக் காதி பிரித்து வைக்கும் பஸ்கு பற்றி நாம் இங்கு எதுவும் பேசவில்லை. மாறாக, அல்குர்ஆன் முன்வைக்கும் விவாகரத்து சட்டங்கள் நியாயமானது என்பதையும் பெண்கள் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

“நிச்சயமாக இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினை காண்பிக்கின்றது. மேலும், இதனை ஏற்றுக் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்கு திண்ணமாக பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி கூறுகிறது.” (17: 9)

அல்ஹஸனாத், ஜனவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *