தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை…

அல்ஹஸனாத் 50 வருட காலமாக வெளிவருவது
தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை…

நேர்காணல்: ஹஸன் இக்பால் யாழ்ப்பாணம், இர்சாத் இமாமுத்தீன்

அல்ஹஸனாத்: தமிழ் இதழியல் வரலாற்றுப் பாரம்பரியம் குறித்த உங்களது பார்வையை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பேராசிரியர் வா. மகேஸ்வரன்: தகவல் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியுடன் நடைபயின்று வரும் இன்றைய யுகத்தில் ஊடகம் காத்திரமான பங்காற்றி வருகின்றது. ஆரம்ப காலங்களில் செய்தியைத் தெரிவிக்க ஓவியங்கள் பயன்பட்டன. இவ்வகையில் ஊடகங்களின் தொடக்கவூற்றாக ஓவியங்களைக் குறிப்பிடலாம். ஓவியங்கள் மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டிய பல விடயங்கள் பரிமாறப்பட்டன.

குகை ஓவியங்கள்தான் செய்திப் பரிமாற்றங்களின் அடிப்படை எனலாம். குகை ஓவியங்களின் மூலமே எழுத்துப் பாரம்பரியத்தின் தோற்றங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கின. எழுத்துப் பாரம்பரியம் செய்திப் பரிமாற்றத்தினை மேலும் இலகுபடுத்தியது. ஆதிகால கல்வெட்டுக்கள், குறியீடுகள் என்பனவும் இதில் அடங்கும்.

செய்திப் பரிமாற்றம் என்பது அசோகனுடைய கல்வெட்டுக்களில் இருந்துதான் ஆரம்பமாகின என்போரும் உள்ளனர். மகாநதிக் கரையில் அசோகனால் எழுதப்பட்ட கல்வெட்டுத்தான் இந்திய உபகண்டம் முழுவதும் பரவியது என்றும் இதுவே செய்திப் பரிமாற்றத் தோற்றுவாய் என்றும் சிலர் கூறுவார்கள். 

தமிழ்ச் சூழலில் செய்திப் பரிமாற்றத்தின் தோற்றுவாய் என ஆய்ந்தால் பறை அறைந்து செய்திகளைப் பரிமாறல் என்றே கூற வேண்டும். மேலும் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக பல செய்திகள் பரிமாறப்பட்டன. பொருட்களில் செய்திகளை எழுதி அனுப்புகின்ற முறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலம் தொட்டு கல்வெட்டுக்கள் மூலமான செய்திப் பரிமாற்றமும் தமிழ் சூழலில் இருந்திருக்கின்றன. நடுகல், சுவடிகள், ஓலைகள் என்பன செய்திப் பரிமாற்ற ஊடகங்களாக இருந்திருக்கின்றன. 

சோழர்களது ஆட்சிக் காலத்தில் அரசனது ஆணைகளை, செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு செப்பேடுகளில், கற்களில் அவற்றை எழுதும் பணிகளை மேற்கொள்ளவென ‘திருமந்திர ஓலை நாயகம்’ நியமிக்கப்பட்டிருந்தார். தமிழுலகில் இவ்வாறான செய்திப் பரிமாற்றங்கள் இருந்திருக்கின்றன.

அச்சுக்கலை தோற்றம் பெற்றதன் பின்னரே தமிழ்ச் சூழலில் செய்திப் பரிமாற்றங்கள் அசுர வளர்ச்சி கண்டன எனலாம். இதன் தொடர்ச்சியாக பிற்பட்ட காலங்களில் சமயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பல பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. 

இலங்கை முஸ்லிம் சமூகத்தை எடுத்து நோக்கினால் ‘புதினாலங்காரி’, ‘முஸ்லிம் நேசன்’ போன்ற பத்திரிகைகளும் அதனைத் தொடர்ந்து சமயம் சார்ந்து ‘இந்து சாதனம்’ இதழும் இன்னும் பல இதழ்களும் வெளிவந்திருக்கின்றன. 

அல்ஹஸனாத்: இலங்கையில் அல்ஹஸனாத் என்ற மாத இதழ் தொடர்ந்து ஐம்பது வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பேராசிரியர் வாமகேஸ்வரன்:  உண்மையில் இதனை மகத்தானதொரு சாதனையாகவே நான் கருதுகிறேன். பல்வேறு மாத இதழ்கள், சிற்றிதழ்கள், தினப் பத்திரிகைகள் புற்றீசல்களாய்த் தோன்றி நிதி நெருக்கடி, வாசகர் போதாமை, தொடர்ச்சியின்மை போன்ற பல காரணிகளால் மறைந்திருக்கின்ற காலப் பகுதியில் ஐம்பது வருட காலமாக தொடர்ச்சியான நிலவுகையொன்றை சாத்தியப்படுத்தியிருப்பது என்பது ஆச்சரியம் கொள்ளச் செய்கிறது.

பின்பற்றும் கருத்தியலின் வலிமை, கோட்பாட்டின் காத்திரத் தன்மை, வாசகர்களின் ஏற்புடைமை என்பனவே இம்மாத இதழின் அத்திவாரத்தை கெட்டியாகப் பற்றிப் பிடித்து இம்மியும் இடற இடமளிக்காது தொடர்ச்சியாக நகர வழிசமைத்திருக்கின்றது என நான் நினைக்கிறேன். தமிழ் இதழியல் துறையின் மைல்கல்லாகவும் அசுர சாதனையாகவுமே இதனைக் கருத வேண்டியுள்ளது. 

அல்ஹஸனாத்: அல்ஹஸனாத் இதழானது இஸ்லாமிய மார்க்க மற்றும் பொது விழுமியங்களை முதன்மைப்படுத்தியதாக அமைந்துள்ளமை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பேராசிரியர் வாமகேஸ்வரன்: இது தொடர்பில் பரந்த பார்வை ஒன்றை நாம் நிகழ்த்த முடியும். பொதுவாக இலங்கையில் ஆரம்ப கால இதழியல் பாரம்பரியம் ஏதோவொரு வகையில் சமயம் சார்ந்ததொன்றாகவே அமைந்திருந்தது. தம்முடைய சமயம் சார்ந்த கருத்துக்களை முன்வைப்பது ஏனைய மதங்களின் கருத்துக்களை ஆய்வுக்குட்படுத்துவது அல்லது விமர்சிப்பது என்ற அடிப்படையிலேயே ஆரம்ப கால இதழ்கள் தோற்றம் பெற்றன. இது தவிர்க்க முடியாதது. எதிர்வினையாற்றலின் மூலமாகத்தான் தம்முடைய சமயத்தை நிலைநிறுத்த வேண்டியதொரு தேவை வருகின்ற பட்சத்தில் இவற்றின் தோற்றம் தவிர்க்க முடியாதது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரு தளங்களில் சஞ்சிகை கவனம் கொள்ள வேண்டியிருக்கும். நமது சமய அடிப்படைகளை வெளிப்படுத்தல் என்பதும் நம் மீதான எதிர்ப் பிரசாரங்களுக்கான கண்டனப் பிரசாரங்களை முன்வைப்பதென்பதும் அவசியம். 

நம்முடைய சமய அடிப்படைகளை சஞ்சிகைகள் ஊடாக வெளிப்படுத்துவதென்பது கத்தி முனையில் பயணிப்பது போன்றதொன்றாகும். நம்முடைய சமய அடிப்படைகளை பேணிப் பாதுகாப்பதென்பது மிக முக்கியமான விடயமாக இருக்கின்றபோதிலும் அதுவே வேறு தளத்தில் பயணித்து நாம் அடிப்படைகளை கறாராக பின்பற்றுகிறோம், சில அதிகாரங்களைத் திணிக்கிறோம், அதனூடாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்ற எண்ணப்பாங்கு ஏனையவரிடத்தில் ஏற்படாத வண்ணம் மிகக் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய கடப்பாடுண்டு. தொடர்ச்சியான நிலவுகைக்கு இது உதவும்.

நம்முடைய சமய அடிப்படைகளை, இருப்பை கறாராக வெளிப்படுத்தல் என்பவற்றுக்கப்பால் அதனூடாக சமகால சவால்களுக்கான தீர்வுகளை முன்வைத்தலென்பது சாலச் சிறந்தது.   

அல்ஹஸனாத்இலக்கியம், சமூகவியல், சமயம், வரலாறு, சர்வதேசம், பெண்களுக்கான சிறப்புப் பக்கம், நடப்பு விவகாரம் என அனைத்து விடயங்களையும் அடையாளப்படுத்திய ஒரு குடும்ப இதழாக அல்ஹஸனாத் திகழ்கிறது. இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பேராசிரியர் வாமகேஸ்வரன்வெறுமனே சமயம் சார்ந்த இதழாக அன்றி சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் தழுவியதாக, பன்முகத்தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளமை முத்தாய்ப்பாக குறிப்பிட வேண்டியதொன்று. சமூக மட்டத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஈர்ப்பதாகவே ஒரு மாத இதழ் திகழ வேண்டும். 

சமயவாதிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; தத்துவவாதிகளுக்கும் இடமிருக்க வேண்டும். கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுகும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் என அனைவரினதும் பிரதிபலிப்பாக அமைய வேண்டும். இதனையே நாம் மலினப்படாத ஜனரஞ்சகம் என்று கூறுவோம். பொதுஜனப் பண்பாடு என்பதை இதழில் எடுத்தாள வேண்டும். 

செய்யுள் வடிவ இலக்கியங்களை வசன நடையில் மாற்றல், எளிய வாக்கியங்களை கையாளல் போன்றன மூலம் ஒரு மாத இதழின் ஜனரஞ்சகத் தன்மையை அதிகரிக்கலாம். அனைவருக்கும் புரியும் எளிய சொற்களைக் கொண்டு கவி யாத்ததாலேயே பாரதியாரை நாம் வெகுஜன தன்மை மிக்க கவிஞர் என்று பாராட்டுகிறோம். 

அல்ஹஸனாத்: மொழி வளர்ச்சிக்கு இதழியல் எவ்வாறான காத்திரமான பங்களிப்பை ஆற்றுகின்றது?

பேராசிரியர் வாமகேஸ்வரன்இதழொன்றின் ஊடகமே மொழிதான் என்று இருக்கையில் மொழியின் பல்வேறு பரிமாணங்களையும் எடுத்தாள வேண்டிய தேவை இதழியல் துறைக்கு இருக்கின்றது. பத்தி எழுத்துக்கள், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள்… என மொழியின் பல்வேறு பரிமாணங்களும் இதழில்தான் பல்வேறு பரிமாணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் மொழி வளர்ச்சிக்கு இதழியல் பங்களிப்பது மாத்திரமின்றி, செம்மைப்படுத்தவும் செய்கின்றது. 

எழுத்து நடையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஒரு பத்திரிகை கொண்டிருக்கும். மொழியினுடைய கால வளர்ச்சியை பத்திரிகைகள் படிமுறையாகப் பதிவு செய்வதாக அமைந்துள்ளன. 

ஒரு காலகட்டத்தில் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த மொழிநடையையும் மொழி ஆளுகையையும் பத்திரிகைகள் பிரதிபலிக்கின்றன அல்லது ஆவணப்படுத்துகிறன. காலவோட்டத்தில் மொழியானது எவ்வாறான மாற்றங்களைக் கடந்துள்ளது, எவ்வாறான தருவிப்புக்களை தன்னுள் உட்புகுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ள பத்திரிகைகள் துணை புரிகின்றன. 

மொழியின் வராலாற்றுக்கான மூலாதாரமாக இலக்கியத்தைக் குறிப்பிடலாம். மொழிப் பிரயோகமானது காலவோட்டத்தில் தன்னுள் பலவற்றை உள்வாங்கி சிலவற்றை வெளியகற்றிப் பயணிக்கின்றது. இதனை நாம் செவ்வனே பல்லாண்டு கால பத்திரிகைகளை ஆய்வு செய்வதனூடாக அறிந்து கொள்ளலாம். 

மொழியை நேர்த்தியாகக் கையாள்வது எவ்வாறு? என்பதனை பத்திரிகை புடம்போட்டுக் காட்டுகிறது. மொழியின் கலைச் சொற்கள், மொழியின் புதுமையாக்கங்கள் என்பனவற்றை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, ஜனரஞ்சகப்படுத்தி, நிலைபேறாக்கம் செய்து மொழியை காலவோட்டத்தில் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பணியையும் இதழியல் செவ்வனே செய்து வருகிறது. 

அந்தவகையில் மொழியின் வளர்ச்சியானது இதழியல் துறைக்கும் இதழியல் துறையானது மொழியின் வளர்ச்சிக்கும் பரஸ்பரம் உதவுகின்றன என்றால் மிகையாகாது. 

அல்ஹஸனாத்தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தினூடாக தமிழ்- முஸ்லிம் உறவை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்?

பேராசிரியர் வாமகேஸ்வரன்நாம் இன, மத அடிப்படையில் வேறுபட்டாலும் நமக்கிடையில் ஒன்றுபடும் புள்ளியாக எமது தாய்மொழியைக் கொள்ளலாம். ‘இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்பதே தாரக மந்திரம். அப்பேர்ப்பட்ட பாரெங்கும் பரவிய பைந்தமிழ் எனும் இன்பத் தமிழ் மொழியால் இணைந்த மக்களாகிய நாம் முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் அடிப்படையில் எங்கோ நாம் தவறிழைத்திருக்கிறோம். 

என் இளமைக் காலத்தில் இவ்வாறான கேள்வி எழுந்திருக்க வேண்டியதொரு அவசியமே இருக்கவில்லை. மொழி எம் இரு தரப்பினருக்கும் உயிராக இருந்து வந்தது. எமக்கிடையிலான முரண்பாடுகளைக் களைய மொழியால் இணைந்தோம். கவியரங்கம் நடத்தினோம்; கசடுகளை அகற்றினோம்.   

அவ்வகையானதொரு சூழல் இன்றைக்கு இல்லையே என்று நினைக்கும்போது மனது கனக்கிறது. இந்நிலைமைக்கு பல்வேறு காரணங்கள் வழிவகுத்துள்ளன. எனினும், இப்பகுதியில் அது தொடர்பில் கலந்துரையாடுவது பொருத்தமன்று என்று நினைக்கிறன். 

கம்பராமாயணத்தை ரசித்து ருசித்துப் படித்த இஸ்லாமியர்களை நானறிவேன். ஆண்டாளுடைய பாசுரங்களை சொன்ன பேராசிரியர் அமீர் அலி பற்றி நானறிவேன். அனைத்தும் தமிழிலக்கியங்கள் என்று ஒன்றிணைந்த ஒரு பொற்காலம் இருந்தது. சீறாப்புராணத்தையும் சின்னச் சீறாவையும் புதுகுஷ்ஷாம் காவியத்தையும் செயினம்பு நாச்சியார் காவியத்தையும் கற்க எமக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. அதேபோல கம்பராமாயணம், மகாபாரதம், ஆண்டாள் பாசுரங்கள், மாணிக்க வாசகருடைய திருவாசகத்தையும் எந்தவித வேறுபாடுகளுமின்றி ஒன்றித்துக் கற்க முஸ்லிம்கள் இணைந்திருந்தனர். இவ்வகையான சூழலை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. திக்குவல்லையில் வாழ்ந்தாலென்ன… ஓட்டமாவடியில் வாழ்ந்தாலென்ன… யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலென்ன தமிழ் இலக்கியத்தால் நாம் மீளவும் ஒன்றுபடுவோம். 

அல்ஹஸனாத்தற்போதுள்ள கால சூழ்நிலையில் ஒரு மாத இதழ் எவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பேராசிரியர் வாமகேஸ்வரன்இற்றைக்கு நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வெகு சுதந்திரமான வகையில் எழுத்துக்களை சந்தைப்படுத்தும் சூழல் எமக்கு வாய்த்திருந்தது. ஆனால், தற்காலம் அப்படியானதல்ல. ஒரு கருத்தியலின் பின்னால் நின்று கொண்டு எழுத முயற்சிக்கும்போது வரம்புகள், கட்டுப்பாடுகள், அதிகாரங்கள் என்பன எழுத்துக்களின் சுயாதீன பிரவாகத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்றன. 

கருத்தியலின் பின்னணியில் கனதியாக எழுதினால் மாத்திரமே எழுத்துக்கள் என அவை மதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளன. இதனால் சுயாதீனமான எழுத்தோட்டங்கள், அனுபவப் பகிர்வுகள் என்பன நிராகரிக்கப்படுகின்றன. எண்ணவோட்டத்தின் சுயாதீனப் பிரவாகத்திற்கு கடிவாளமிடும் போக்கே இன்று காணப்படுகின்றது. 

கருத்தியலொன்றின் பின்புலத்திலேயே பத்திரிகையொன்று வழிநடத்தப்பட வேண்டும் என்பது உண்மையாயினும், முழு மொத்த எதேச்சதிகாரத்தை அப்பத்திரிகையில் குறித்த கருத்தியல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவே பத்திரிகையின் இருப்புக்கு ஆரோக்கியமானதாகும். அதேநேரம் ‘யாவற்றையும் பிரசுரிக்கலாம்’ எனும் மலினப் போக்கும் உள்நுழையாது வடிகட்டுவதும் அவசியமாகும். 

மக்களை எப்போதும் பதற்றமாகவே வைத்திருக்கும் பத்திரிகைகளின் புலனாய்வுப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். 

தற்கால எழுத்துலகில் எழுந்துள்ள மிக முக்கிய பிரச்சினை இளைஞர்களுக்கான வாசிப்புத் தளம் குறைவடைந்து வருவதேயாகும். சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் என துரித உணவுகள் போன்ற வாசிப்புக்களை மாத்திரமே இன்றைய இளைஞர்கள் பெறக் கூடியதாகவுள்ளது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். இதற்கான பொறிமுறைகளைக் கண்டறிய வேண்டும். 

இன்னொரு முக்கியமான விடயம், மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் கலாசாரம் வளர்க்கப்படல் வேண்டும். கருத்தியல் சார்ந்த எழுத்து மோதல்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் நலன் பயக்கும் கருத்தியல்கள் அடையாளப்படுத்தப்படும். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பர்.

அல்ஹஸனாத்இலங்கை முஸ்லிம்களின் தமிழ் மொழி ஈடுபாடு பற்றிய உங்கள் அவதானம்?

பேராசிரியர் வாமகேஸ்வரன்சிறுவயது முதலே முஸ்லிம் நண்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களைப் பெற்றவன் என்ற வகையிலும் தமிழ் பேராசிரியர் என்ற வகையிலும் நான் இதற்குப் பதிலளிக்க மிக்கத் தகுதி வாய்ந்தவன் என நம்புகிறேன். இஸ்லாமியர்கள் தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்கள் எனும் தளத்தைத் தாண்டி தமிழுக்காக உழைத்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். 

தமிழ் இலக்கியத்திற்கான இஸ்லாமியர்களின் பங்களிப்பு அபரிமிதமானவையாகவே அமைந்துள்ளன. இலங்கை முஸ்லிம்களை எடுத்து நோக்கினால் நாவல் இலக்கியங்களாக இருக்கட்டும் கவிதை இலக்கியங்களாக இருக்கட்டும் சிறுகதைகளாக இருக்கட்டும், தமிழ் மொழிக்குப் பாரிய தொண்டாற்றியுள்ளனர் என்பதை தமிழ் தெரிந்த எவராலும் மறுக்கவே இயலாது. 

இலங்கையின் நாவல் வரலாற்றை எடுத்து நோக்கினால் சித்திலெவ்வை எழுதிய அஸன்பே சரிதை இலங்கையின் முதல் நாவலாக சிலாகிக்கப்படுகிறது. மற்றும் அப்துல் காதிர் புலவரின் இலக்கியங்கள் மிகவும் பேர் பெற்றவை. பல ஆக்க இலக்கியங்கள் முஸ்லிம்களால்  படைக்கப்பட்டுள்ளன. பிரதேசம் சார்ந்தவையாக அல்லது இலங்கை தேசத்தை மையப்படுத்தியதாகவோ முஸ்லிம்கள் பல இலக்கியங்கள் படைத்துள்ளனர். 

பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் விதமாக முஸ்லிம்களால் காத்திரமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கவிதைப் பரப்பிலும் முஸ்லிம்களது பங்களிப்பு அளப்பரியது. சிங்கள, ஆங்கில இலக்கியங்களை தமிழுக்கு அச்சு பிசகாது மொழிபெயர்த்து இலக்கியங்களை சர்வமயப்படுத்தும் பணிகளில் முஸ்லிம்கள் சிறந்து விளங்கியுள்ளனர். 

பத்திரிகை துறை, ஒலி- ஒளிபரப்புத்துறை எனப் பல்வேறுபட்ட பரிமாணங்களில் முஸ்லிம்களில் தங்களை செவ்வனே ஈடுபடுத்தித் தமிழ் தொண்டாற்றியுள்ளனர். 

அல்ஹஸனாத்இலங்கை தமிழ் மொழி வளர்ச்சியில் எவ்வாறான தடைகளை நீங்கள் காண்கிறீர்கள்? அவற்றை நிவர்த்திக்க வழிமுறை என்ன?

பேராசிரியர் வாமகேஸ்வரன்தமிழ் பேசும் பிரதேசங்களை ஆய்வுக்குட்படுத்தினால் இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாரிய தடைகள் இல்லை என்றே கூற வேண்டும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான அடிப்படை தமிழ் மொழிமூலக் கல்வியாகும். அந்த வகையில் இலங்கை தமிழ் பேசும் மக்களாகிய நாம் வரம்பற்ற வரப்பிரசாதம் வாய்க்கப் பெற்றுள்ளோம். தமிழ் நாட்டில்கூட தாய்மொழிக் கல்வி என்பது இரண்டாம்பட்சமாக பார்க்கப்படும் நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை அந்நிலைமை இல்லை. பாலர் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை தாய்மொழிக் கல்வி தங்குதடையின்றி போதிக்கப்படுகின்றது. இதனடியாக இலங்கையில் எழுத்து மொழியும் பேச்சு மொழியும் உயிரோட்டம் மிக்கதாக காணப்படுகின்றது.  

காளான்கள் போல் முளைத்திருக்கும் சர்வதேசப் பாடசாலைகளும் நுனிநாக்கு ஆங்கிலத்தை தம் பிள்ளைகள் பெற்றிட வேண்டும் எனும் மோகமும் சற்றே அதிகரித்து வரும் போக்கும் தற்காலத்தில் காணப்படுகின்றது. எது எவ்வாறாயினும், தாய்மொழிக்கு இழுக்கு ஏற்படாதவாறு சகல மொழிகளும் பயின்றிட பின்னிற்க வேண்டியதில்லை.

 அல்ஹஸனாத்- மார்ச் 2020

Latest Comments
  1. A WordPress Commenter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *